பி.எம்.இந்தியா
ராஜஸ்வ கியான் சங்கமத்தில் வரி நிர்வாகிகளிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய நேரடி வரி வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் ஆகிய இரண்டு வருவாய் துறை வாரியங்களும் இணைந்து முதல்முதலாக இது போன்ற மாநாட்டை ஒரே நேரத்தில் நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அலுவலர்களின் கருத்துக்களை வரவேற்று தன் உரையை துவங்கினார். கணிணிமையம் ஆக்குதல், தானாக முன்வந்து வரி செலுத்தும் திட்டம், வரி செலுத்துவோர்களை ஊக்குவித்தல், வரி நிர்வாகிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அலுவலர்கள் தங்களது கருத்துகளை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.
ராஜஸ்வ கியான் சங்கமத்தில் அலுவலர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பேசவேண்டும் என்று பிரதமர் ஊக்குவித்தார். சட்டத்தின் மீது மக்களுக்கு மரியாதை வேண்டும், வரி ஏய்த்தால் சட்டம் தண்டிக்கும் என்ற பயமும் மக்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் வரி துறை அலுவலர்கள் மீது மக்களுக்கு பயம் இருக்க கூடாது.
தற்போது இந்தியா வரலாற்றின் முக்கிய கட்டத்தில் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டு மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
அரசாட்சி முறையின்மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டியவர்கள் வரி நிர்வாகிகள் என்று பிரதமர் வலியுறுத்தினார். “விட்டுக்கொடுங்கள்” முயற்சி மூலம் பலர் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளதை எடுத்துக்காட்டிய பிரதமர், வரி நிர்வாகிகள் தலைமைத்துவம் மூலம் வரி துறையிலும் இதுபோன்ற முன்னேற்றங்களை கொண்டு வர முடியும் என்று கூறினார்.
RAPID (ஆர்.ஏ.பி.ஐ.டி) என்ற ஐந்து அம்ச கொள்கையை வரி நிர்வாகிகளுக்கு பிரதமர் எடுத்துரைத்தார். அது R(ஆர்) என்றால் வருவாய், A (ஏ) என்றால் பொறுப்புடைமை, P (பி) என்றால் நேர்மை, I (ஐ) என்றால் தகவல் மற்றும் D (டி) என்றால் கணிணிமையம். இந்த அறிவுபூர்வ மாநாட்டை காரிய பயனுள்ள மாநாடாக மாற்றவேண்டும் என்று அலுவலர்களை கேட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்த மாநாட்டில் கிடைக்கும் யோசைனகள் களத்தில் செயல்படுத்த முடியும்.
மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சின்ஹா, பிரதமரின் முதன்மை செயலர் திரு. நிருபேந்திர மிஸ்ரா, வருவாய்த் துறை செயலர் டாக்டர். ஹஸ்முக் அதியா மற்றும் மத்திய நேரடி வரி வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் ஆகியவற்றின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.