Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லக்னோவில் நடைபெற்ற 2018 வேளாண் கும்ப் விழாவில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


எனது அமைச்சரவை தோழர் திரு. ராதாமோகன் சிங் அவர்களே, உத்தரபிரதேசத்தின் பிரபல, வெற்றிகரமான, சுறுசுறுப்புமிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் அவர்களே, ஜப்பான் அரசின் உதவி துணை அமைச்சர் திரு. டக்காமி நகாடா அவர்களே, இந்தியாவில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதர் மாயா காடோஸ் அவர்களே, வேளாண் விஞ்ஞானிகளே இதர முக்கியப் பிரமுகர்களே,  உத்தரபிரதேச மாநிலமெங்குமிருந்து வந்துள்ள எனதருமை விவசாய சகோதரர்களே, சகோதரிகளே,

     பிரக்யாக்ராஜ்-ன் அர்த் கும்பமேளா நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆனால் மற்றொரு கும்பமேளா உத்தரபிரதேசத்தில் இன்று (26.10.2018) தொடங்குகிறது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் விவசாயிகள், விஞ்ஞானிகள், உலகெங்கிலுமிருந்தும், உள்நாட்டிலிருந்தும் வந்துள்ள தொழில் முனைவோர் ஆகியோர் லக்னோவில் நடைபெறும் இந்த வேளாண் கும்பமேளாவில் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமயங்களிலும் உங்களுக்கு துணை நிற்கும் பொறுப்பும், உங்களது மேம்பாட்டுப் பயணத்தில் முயற்சி எடுக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.

     சில மாதங்களுக்கு முன்பு விவசாய உன்னதி மேளாவின்போது, பெரிய விவசாய சந்தைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு நான் ஆலோசனை கூறினேன். விவசாயி கும்பமேளா இதன் விரிவாக்கம் ஆகும். இதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட திரு. யோகி மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சியில் எங்களுடன் கைகோர்த்த ஜப்பான் அரசு மற்றும் இஸ்ரேல் அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேளாவில் கூட்டாளியாக உள்ள ஹரியானா மாநிலமும் இதனால் பயன்பெறும்.

நண்பர்களே,

     எப்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சியுடன் கும்ப என்ற வார்த்தை இணைக்கப்படுகிறதோ அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பல மடங்கு பெருகுகிறது. ஒருவகையில் பார்த்தால் “கும்ப” என்பது கருத்துக்கள் பரிமாற்றம் மற்றும் மனிதநேய வெளிப்பாடு என பொருள்படும். விவசாய கும்ப நிகழ்ச்சி இந்தப் பாரம்பரியத்தை நிறைவு செய்யும் என நம்புகிறேன்.  அடுத்த 3 நாட்களில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு உரிய பாதைகள் திறக்கும்.

நண்பர்களே,

     இந்தக் கண்காட்சியில் 200 அரங்குகள் உள்ளன என்று என்னிடம் சொல்லப்பட்டது. வேளாண்மை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எந்திரங்கள் பற்றி இந்த அரங்குகள் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கும்.  இதனால் ஒவ்வொரு விவசாயியும் பயன்பெறுவார் என்று நான் நம்புகிறேன். அதேசமயம், விவசாயிகள் தரத்தை உறுதி செய்வதற்கும் இது உதவும்.

நண்பர்களே,

     நாடெங்கும் கரீப் பருவம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், அனைத்து விவசாய சகோதர, சகோதரிகளும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த பருவத்திலும்கூட சாதனை அளவான உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் 20 சதவீதத்தை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளான விவசாயிகள் செய்து வருகிறார்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.  நாடெங்கும் உள்ள சந்தைகளில் அரிசி, பயறு போன்ற உற்பத்திப் பொருட்கள் வாங்கப்படுகின்றன. உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இதற்கென பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த முறை விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு பெறும் மதிப்பு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலானது. மத்திய அரசு 21 பயிர் வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வரலாற்றிலேயே அதிக அளவாக உயர்த்தியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  விவசாயிகள் குறைந்தது, செலவு தொகையில், 50 சதவீதத்தையாவது நேரடி லாபமாக பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

     உத்தரபிரதேச விவசாயிகள் சாதனை அளவான உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், யோகியின் அரசு உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்வதில் சாதனைகளை முறியடித்து வருகிறது. எனவே,  யோகியின் அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் 50 முதல் 55 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முந்தைய அரசு 7 முதல் 8 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையைத் தான் கொள்முதல் செய்து வந்தது. இதனைக் கணக்கில் கொண்டால், பிஜேபியின் யோகி அரசு 7 அல்லது 8 மடங்கு அதிகமாக கொள்முதல் செய்துள்ளது. மேலும் இந்தக் கொள்முதல் தொழில்நுட்பத்தை அதாவது, மின்னணு உபர்ஜான் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து நேரடியாக செய்யப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள் அகற்றப்படுகின்றனர்.

நண்பர்களே,

     இந்த மாற்றம் கோதுமை விஷயத்தில் மட்டுமன்றி, நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கும் பொருத்தமானது.   இந்தப் பருவத்தில் விவசாயிகளுக்கு ரூ.27,000 கோடிக்கும் கூடுதலான தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிலுவையில் இருந்த தொகையாக ரூ.11,000 கோடி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்திருந்த தொகை முழுவதையும் விவசாயிகள் பெறுவதற்கு யோகி அரசு முயற்சி எடுத்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. உத்தரபிரதேச அரசு முதல்முறையாக உருளைக்கிழங்கையும் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் உருளைக் கிழங்கிற்கு நியாயவிலை கிடைக்காத விவசாயிகளுக்கு இது பெரிதும் உதவும்.

நண்பர்களே,

     உத்தரபிரதேச அரசின் இந்த முயற்சிகள் மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் பயனாக நடைபெற்றுள்ளது. இதனால், கிராமங்களும் விவசாயிகளும் நமது பொருளாதார திட்டமிடலில் முக்கியப் பங்கு வகித்தவர்களாக மாறிவிட்டனர். எங்களது தெளிவான கருத்தின்படி, விவசாயிகள்தான் நாட்டை முன்னெடுத்துச் செல்பவர்கள். எனவே, அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க துண்டு துண்டாக இல்லாமல் முழுமையான வகையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிறிய பிரச்சினையையும் தீர்ப்பதே எங்களது முக்கிய நோக்கமாகும்.

நண்பர்களே,

     2022-ஆம் ஆண்டு நாடு விடுதலையின் 75-வது ஆண்டை கொண்டாடும்போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் அரசு உறுதியுடன் உள்ளது. குறைந்த செலவு, அதிகபட்ச லாபம் என்ற கொள்கையை பின்பற்றி விஞ்ஞானத் தொழில்நுட்பங்கள், வேளாண் தொழிலுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. நாட்டில் விதை முதல் சந்தைவரை என்ற வலுவான அமைப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. மண்வளம் முதல் சந்தைகளை மேம்படுத்துதல் வரையிலான பல்வேறு துறைகளில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு 16 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 கோடி அட்டைகள் உத்தரபிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, எந்தவகை மண், எந்தப் பயிருக்கு உகந்தது என்பதை விவசாயிகள் முடிவு செய்ய ஏதுவாகிறது. பயிர்களுக்குத் தேவையான உரத்தின் அளவையும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

நண்பர்களே,

     மண்ணின் பண்புகளையும், விளை திறனையும் பராமரிப்பதற்காக இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரப் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனால், நாட்டின் தேவைக்கேற்ற உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. யூரியா போன்ற உரங்கள் போதுமான அளவில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேசமயம், பாசன வசதிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய பாசனத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதுடன், புதிய பாசன தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் ஒவ்வொரு துளி நீருக்கும் கூடுதலான பயிர் என்பதை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்பாசன அமைப்புகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

     பாசனத் தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதேசமயம், ஜப்பானும் வேளாண் தொழில் நுட்பத்தில் பாராட்டத்தக்க பணிகளை செய்துள்ளது. எனவே, வேளாண் கும்ப விழாவின் கூட்டாளியான இந்த நாடுகளிலிருந்து நிபுணத்துவத்தின் பயன்களை நீங்கள் பெறவுள்ளீர்கள்.

நண்பர்களே,

     மின்சார மற்றும் டீசல் பம்புகளை, சூரிய சக்தி பம்ப்-களாக மாற்றும் முயற்சி விரைவாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, பாசன வசதியில் பம்ப்களின் முக்கியத்துவம் கருதி, அவற்றை மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் அடுத்த நான்காண்டுகளில் 28 லட்சம் விவசாயிகளின் வயல்களில் சூரிய சக்தி பம்ப்கள் பொருத்தப்படும். முதலாவதாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும். இதனால் ஏற்படும் உபரி மின்சாரம், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு விற்கப்படும்.

நண்பர்களே,

     அன்னதாதா அல்லது உணவுதானிய உற்பத்தியாளர் என்ற பெயர் பெற்ற விவசாயி தற்போது உர்ஜா தாதா அல்லது மின்சார உற்பத்தியாளர் என்ற பெயரையும் பெறுகிறார்.

நண்பர்களே,

     இந்த உண்மை விவசாயிகளின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்பது ஒரு உதாரணத்திலிருந்து தெரியவருகிறது. சில தினங்களுக்கு முன், நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கு ஒரு கிராமத்தில் சில விவசாயக் குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து, சூரியஒளி தகடுகளையும், சூரிய ஒளி பம்ப்களையும் அமைத்திருந்ததைப் பார்த்தேன்.  சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை அவர்கள் உற்பத்தி செய்ய தொடங்கியிருந்தனர். சூரிய சக்தி அவர்கள் வயல்களின் சூரிய சக்தி பம்ப்களை இயக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்களது மின்சாரத் தேவை நிறைவு செய்யப்பட்டது. மேலும் உபரி மின்சாரத்தை விற்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 வரை அவர்கள் சம்பாதிக்கின்றனர்.

நண்பர்களே,

     விவசாயிகளுக்கு விஞ்ஞானத்தின் பயன்களை வழங்கும் முக்கிய முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. விவசாயிகளையும், விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சி மையங்கள் மூலம் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால், விவசாயம் மற்றும் விதைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் அறிவு மிகக்  குறைந்த காலகட்டத்தில் விவசாயிகளை சென்றடைகிறது. இதனையடுத்து, நாடெங்கும் சுமார் 700 விவசாய விஞ்ஞான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாரணாசியில் அரிசி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருளுக்கும் மதிப்புக் கூட்டுதல் நடவடிக்கைக்கும் அதிகபட்ச விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு பதனீட்டுத் தொழிலில் அரசு 100 சதவீத அந்நிய நேடிர முதலீட்டை அனுமதிக்கிறது. தக்காளியை விற்பனை செய்வதைவிட, பாட்டிலில் அடைத்த தக்காளி கூழை விற்பது அதிக லாபத்தை தரும் என்பதை நாம் அறிவோம். மாங்காய் ஊறுகாயை விற்பது மாங்காய் விற்பனையை விட அதிக லாபம் தரக்கூடியது. இதைத்தான் மதிப்புக் கூட்டுதல் என அழைக்கிறோம். மேலும் ரூ.500 கோடி செலவிலான தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கான மதிப்புக் கூட்டுதல் திட்டம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உத்தரபிரதேச உருளைக் கிழங்கு விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இதனையடுத்து, வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டு, உத்தரபிரதேசம் பயனடைகிறது. உணவு பதனீட்டுத் துறையில் ரூ.16,000 கோடி உத்தேசத் திட்டங்கள் உத்தரபிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பெறப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.  இவற்றில் ரூ. 3,500 கோடி மதிப்பிலான 14 திட்டங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

நண்பர்களே,

     இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விவசாயத்தை லாபகரமாக மாற்றியுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான இதர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பசுமைப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு நாம் வெண்மைப் புரட்சி, இனிப்புப் புரட்சி, நீலப்புரட்சி ஆகியவற்றின் பாதையில் நடக்கத் தொடங்கியுள்ளோம். பால், தேன், முட்டைகள், மீன் உற்பத்தியில் சாதனைகளை ஏற்படுத்தி வருகிறோம்.  இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மீன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மீனவக் குடும்பங்களுக்காக மத்திய அரசு பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அவர்களுக்கான ரூ.7,500 கோடி நிதியம் ஏற்படுத்துவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நண்பர்களே,

     விவசாயி கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள், வேளாண் நிபுணர்கள், விஞ்ஞானிகள் அனைவரும் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். வரும் நாட்களில் விரைவாக வளர்ந்து வரும் நமது பொருளாதாரத்தில் உங்களது முயற்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து, வேளாண்மை தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எவ்வாறு குறைந்த அளவு உரத்தைப் பயன்படுத்துவது, குறைந்த தண்ணீர் பயன்பாட்டை அதிகரிப்பது எவ்வாறு, உற்பத்திப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது எவ்வாறு, விவசாயத்தில் ரோபோ, ட்ரோன்கள் போன்றவற்றை திறம்பட பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போன்ற வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது அவசியமாகும்.

மேலும், புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு பயிர்க் கழிவை பயனுள்ள சொத்தாக மாற்றுவது என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். விவசாய வயலுக்குள் அறுவடைக்குப் பிந்தைய எதுவும் பயனற்றது அல்ல. வயல் சார்ந்த அனைத்துப் பொருட்களும் தங்கத்திற்கு நிகரானவை. விவசாயி தனது வயலை திறம்பட்ட வகையில் பயன்படுத்தினால் எதுவும் வீணாகாது. கழிவிலிருந்து இலாபம் காண இயலும். இந்த திசை நோக்கி மேலும் பணிகள் மேற்கொள்வது அவசியமாகிறது. விவசாயக் கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்காக அரசு 50 முதல் 80 சதவீதம்வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்தி, நமது வேளாண் நண்பர்கள், விவசாயக் கழிவுகளை எரிக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்.

அடுத்த 3 நாட்களில் விவசாயத்தை லாபகரமானதாகவும், மதிப்புக் கூட்டப்பட்டதாகவும் மாற்றும் வழிவகைகள் குறித்து சிறந்த விவாதங்கள் நடைபெறும் என நம்புகிறேன். உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில், அவற்றின் தேவைகள் அடிப்படையில் புதிய சோதனைகள் நடத்துவது குறித்து விவாதம் முக்கிய கவனம் பெறவேண்டும்.

உத்தரபிரதேசம் மற்றும் நாட்டின் வேளாண் அமைப்பில் புதிய நெறிப்படுத்துதலை இந்த விவசாய கும்ப மேளா அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த எதிர்பார்ப்புடன் என்னுடைய நல்வாழ்த்துக்களை மீண்டும் கூறி அமைகிறேன்.

அனைவருக்கும் நன்றி.

******