பி.எம்.இந்தியா

போர்த்துக்கல்லின் லிஸ்பன் நகரில் உள்ள சாம்பலிமோட் அறக்கட்டளைக்கு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா-வுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
சாம்பலிமோட் அறக்கட்டளை என்பது, தனியார் உயிரிமருத்துவ ஆய்வு அறக்கட்டளையாகும். இங்கு புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நவீன காலத்துக்கு ஏற்ற புற்றுநோய் ஆய்வுக்கு ஆதரவாக உள்ளது. இது மருத்துவ சிகிச்சைக்கு புதிய முழுமையான செயல்பாட்டை வழங்குகிறது. இது தினசரி சிகிச்சைகளை பசுமையான சூழலில் ஆய்வு மற்றும் புத்தாக்க முயற்சிகளுடன் இணைக்கிறது. மேலும், இயற்கையுடன் நெருங்கிய இணைப்பு கொண்டது.
இந்த மையம், தோட்டம், கடல் மற்றும் ஆற்றை கண்டுகளிக்கும் வகையிலான அமைப்பு, அதிக அளவில் சூரிய வெளிச்சம் ஆகிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவின் மிகவும் பிரபலமான கட்டிடக் கலை வல்லுநரான சார்லஸ் கொரியா வடிவமைத்துள்ளார்.
இந்த அறக்கட்டளை, இந்தியா மற்றும் போர்த்துக்கல்லின் பல்லடுக்கு பிணைப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த கல்வி நிறுவனம், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கு என்று அர்ப்பணிக்கப்பட்டது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, அடிக்கடி வலியுறுத்துவது போன்று, முழுமையான சிகிச்சை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கீமோதெரபி போன்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கூட, அவர்கள் தனிப்பட்ட வழிமுறையுடன் இயற்கையோடு இணைக்கப்படுகின்றனர்.
கண் மருத்துவ ஆய்வில் சிறப்பான பங்களிப்பை மேற்கொள்பவர்களை அங்கீகரிக்கும் வகையில், அன்டோனியோ சாம்பலிமோட் விருது, கடந்த 2007-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் ஆண்டில் இந்த விருதை, இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனை பெற்றது.
இந்த அறக்கட்டளையில் உள்ள 42 நாடுகளைச் சேர்ந்த 300 ஆய்வாளர்களில் 3 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
சாம்பலிமோட் அறக்களை, ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து செயல்படுகிறது. சாம்பலிமோட் அறக்கட்டளையில் சிகிச்சை பெறும் வெளிநாட்டு நோயாளிகளில், அதிகமானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அறக்கட்டளையில் உள்ள சிறப்பு வசதிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிட்டார். மேலும், இந்திய ஆய்வாளர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார்.
***