பி.எம்.இந்தியா
மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், வனஉயிரினங்களைப் பாதுகாக்கவும், வனஉயிரினங்கள் கடத்தலைத் தடுக்கவும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்புதல் மூலம், வனவிலங்கு பாதுகாப்பு, வனவிலங்கு விவகாரங்கள் மேலாண்மை, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் அதற்கான அடிப்படையை கண்டறிந்து கட்டுப்படுத்துவது ஆகிய விவகாரங்களில் அமெரிக்க நிறுவனங்களின் நிபுணத்துவம் மூலம் இந்தியா பயன்பெறும்.
பின்னணி
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அதிக அளவில் உயிரிபரவலும், இயற்கை பாரம்பரியமும் உள்ளன. இரு நாடுகளுமே தங்களது பிராந்தியங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கியுள்ளன. எனவே, வனவிலங்கு பாதுகாப்பு விவகாரங்களில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தங்களது நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்ள இரு நாடுகளுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், ஒத்துழைப்பிற்கு சரியான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையே கீழ்க்காணும் பிரிவுகளில் ஒத்துழைப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1. வனவிலங்கு தடயவியல் மற்றும் பாதுகாப்புக்கான மரபணு:
வனவிலங்கு இனங்களின் பாதுகாப்பு முயற்சிகளிலும், வனவிலங்கு குற்றங்களின்போது சிறப்பான முறையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை சேகரிப்பதிலும் சிறப்பாக செயல்பட இந்த ஒப்பந்தம் உதவும்.
2. இயற்கை உலக பாரம்பரியத்தை பாதுகாத்தல்: இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் யுனெஸ்கோவின் 2-ம் பிரிவு மையத்துக்கு இணையான அமைப்பை ஏற்படுத்துதல்.
இயற்கையை விளக்குதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு: உயிரின பரவல் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வனத்துறை மேலாளர்கள் எடுத்துரைப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.