Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

15 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் கீழ்க்கண்டவற்றுக்கு அனுமதி அளித்தது:

1. 2017ஆம் ஆண்டிற்கான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பொது – தனியார் பங்கேற்பு) மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அறிமுகப்படுத்துவது;

2. பொது- தனியார் பங்கேற்பில் செயல்பட்டு வரும் 15 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான அந்தஸ்தை வழங்கி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என அவற்றை அறிவிப்பது;

3. இவை நடத்தும் கல்வி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க இந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்குவது.

திட்டமிடப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன (பொது-தனியார் பங்கேற்பு) மசோதாவைப் பொறுத்தவரை மத்திய அரசிற்கு எவ்வித நிதிப் பொறுப்பும் இருக்காது.

தற்போது பொது- தனியார் பங்கேற்பில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை, பட்டங்கள் வழங்குவதற்கான அதிகாரங்களுடன் கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என இந்த மசோதா அறிவிப்பு செய்யும். இதன் மூலம் பல்கலைக்கழகம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் (பி. டெக்.) அல்லது தொழில்நுட்ப முதுகலைப் பட்டம் (எம்.டெக்.) அல்லது முனைவர் பட்டம் (பி.எச்.டி.) ஆகியவற்றை வழங்குவதற்கு மேற்கொள்ளும் அதே வழிமுறைகளை இந்த நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளத் தகுதி பெற்றவையாக மாறும்.

தகவல் தொழில்நுட்பம், பொறியியல் அல்லது பி.எச்.டி ஆகியவற்றில் முறையான பட்டத்தை வழங்குவதன் மூலம் இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளை மேம்படும் என்பதோடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் வலுவான ஆராய்ச்சி அடித்தளத்தை வளர்த்தெடுக்கத் தேவையான மாணவர்களையும் இந்த நிறுவனங்கள் கவர்ந்திழுக்கவும் உதவி செய்யும்.

இந்த நிறுவனங்களிலிருந்து பயிற்சி பெற்று வரும் திறமையானவர்களிலிருந்து தொழில் துறை, பொருளாதாரம் ஆகியவற்றில் உருவாகி வரும் திறன் பெற்ற தொழில்நுட்ப மனித வளத் தேவைகளை நம்மால் சமாளிக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றுமே ஆண்-பெண் வேறுபாடு, சாதி, இனம், மாற்றுத் திறன், இருப்பிடம், சமூக-பொருளாதாரப் பின்னணி போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் பொதுவானதாகும். கீழ்க்கண்ட 15 நிறுவனங்களில் கல்வியாண்டு துவங்கியுள்ளது:

ஆந்திரப்பிரதேசம் – சித்தூர்

அசாம் – குவுஹாத்தி

குஜராத் – வதோதரா

அரியானா – சோனிபெட்

இமாச்சல்பிரதேசம் – உனா

ஜார்க்கண்ட் – ராஞ்சி

கர்நாடகா – தார்வாட்

கேரளா – கோட்டயம்

மகாராஷ்டிரா – நாக்பூர் மற்றும் பூனே

மணிப்பூர் – சேனாபதி

ராஜஸ்தான் – கோட்டா

தமிழ்நாடு – திருச்சிராப்பள்ளி

உத்தரப் பிரதேசம் – லக்னோ

மேற்கு வங்கம் – கல்யாணி

பின்னணி:

புதிதாக 20 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பொது-தனியார் பங்கேற்பில் உருவாக்குவதற்கு 07.12.2010 அன்று மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதல் தனது மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் அதிகாரத்தை இந்த நிறுவனங்களுக்கு வழங்குவதாக அமைந்திருக்கவில்லை. 2013-14 கல்வியாண்டில் சேர்ந்த முதல் தொகுதி இளம் நிலை மாணவர்கள் 2017ஆம் ஆண்டில் தங்கள் கல்வியை முடித்து வெளியேறுவார்கள். இந்த 15 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் கல்வியாண்டு ஏற்கனவே துவங்கியுள்ளன.

***