பி.எம்.இந்தியா
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2015ஆம் ஆண்டு வர்த்தக நீதிமன்றங்கள், வர்த்தக மண்டலங்கள் மற்றும் வர்த்தக உயர்நீதிமன்றங்கள் மேல்முறையீட்டுப் பிரிவு திருத்த மசோதாவுக்கு பிரதமர் திரு, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மசோதாவில் செய்யப்பட்ட திருத்தம் வருமாறு:
i) மசோதாவில் பிரிவு 10ல் உள்ள ‘வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு’ என்ற வாசகங்களுக்குப் பதிலாக ‘வர்த்தக பிரிவு’ மாற்றப்பட்டது.
ii) மசோதாவின் 7வது பிரிவில் முதல் ஷரத்து திருத்தி அமைக்கப்படும். குறிப்பிட்ட ஷரத்து நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும்.
இதனால் நீதிமன்ற பிரிவுகளின் பளு குறையும். பிரிவு 7ல் உள்ள திருத்தப்பட்ட ஷரத்து அந்த பிரிவுக்கு மேலும் தெளிவினை அளிக்கும். இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படக்கூடும். 10வது பிரிவு திருத்தத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை தீர்வுகள் விஷயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்களும் முறையீடுகளும் அவற்றின் ஒரு நீதிபதி கொண்ட வர்த்தக பிரிவுகள் விசாரித்து தீர்ப்பு வழங்கலாம்.
பின்னணி:
அவசரச் சட்டத்திற்கு பதிலாக மசோதா ஒன்று மக்களவையில் 07.12.2015 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் பிரிவு 10(1) மற்றும் (2)இல் கூறியுள்ளபடி பேச்சுவார்த்தை தீர்வுகள் விஷயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும், முறையீடுகளும் அவற்றின் இரண்டு நீதிபதிகள் கொண்ட வர்த்தக மேல்முறையீட்டு பிரிவுகளில் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும். உயர்நீதிமன்றத்தின் பளுவினை இது அதிகரிக்கக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டது.
2015 அக்டோபர் 21இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற வர்த்தக நீதிமன்றங்கள், வர்த்தக பிரிவுகள் மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவுகள் சார்ந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இந்த அவசரச் சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி குடியரசுத் தலைவர் 23.10.2015 அன்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார்.