பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை 14வது நிதிக்கமிஷன் காலப்பகுதியான 2015-20 காலப்பகுதிக்கென தனது அறிக்கையில் (தொகுதி – 1) பத்தி 14.64 முதல் 14.67 வரையில் பரிந்துரைத்திருந்த இரண்டு இணக்கமான தேர்வுகளின் கீழ் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறைக்கான கூடுதல் நிதியுதவி மற்றும் நிதிப் பற்றாக்குறைக்கான இலக்குகள் ஆகியவை குறித்த பரிந்துரைகளுக்கு தனது ஒப்புதலை வழங்கியது.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் அளவிற்கு மட்டுமே நிதிப் பற்றாக்குறையின் அளவு இருக்க வேண்டும் என்ற அளவுகோலை 14வது நிதிக் கமிஷன் மேற்கொண்டிருந்தது. மேலும், ஒவ்வொரு ஆண்டிற்கும் நிதிப் பற்றாக்குறைக்கு கூடுதல் நிதியை இணக்கமான வகையில் 14வது நிதிக் கமிஷன் வரையறுத்திருந்தது. வளர்ச்சிக்கான தேவைகள், தற்போதைய அடிமட்டப் பொருளாதாரத்தின் தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டவகையில், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் கடன் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் விகிதாச்சாரம் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தேவைகளுக்கும் வருவாய் ஈட்டலுக்கும் இடையேயான விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சாதகமான நிலை உள்ள மாநிலங்களைப் பொறுத்தவரையில் அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் இந்த 3 சதவீதத்திற்கு மேலாக அதிகபட்சம் 0.5 சதவீதம் கூடுதலாக இந்த நிதிப் பற்றாக்குறை இருக்கலாம் என்று கூடுதலான ஒரு வழிவகையையும் இந்தக் கமிஷன் உருவாக்கியிருந்தது. எனினும் கூடுதல் நிதி பெறுவதற்கான வரையறை நிர்ணயிக்கப்படும் ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் வருவாய் பற்றாக்குறை ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த இணக்கமான வகையில் கூடுதல் நிதியை எந்தவொரு மாநிலமும் பெற இயலும் என்றும் இந்தக் கமிஷன் வரையறுத்திருந்தது.
மேலே கூறிய காலப்பகுதியில் 2015-16 நிதியாண்டு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த நிதியாண்டிற்கான கூடுதல் நிதிச் சலுகை எதையும் மாநிலங்கள் கோர முடியாது. எனினும் இதைத் தொடர்ந்த ஆண்டுகளைப் பொறுத்தவரையில், 14வது நிதிக் கமிஷன் வரையறுத்துள்ள வரம்புகளின் அடிப்படையில் இந்த கூடுதல் நிதி உதவியைப் பெறுவதற்குத் தகுதியான மாநிலங்கள் பெற முடியும்.
2016-17ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், 14வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்திருந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 0.5 சதவீதம் கூடுதலாக நிதியுதவி பெறுவதற்கு மாநிலங்கள் தகுதி பெற வேண்டுமெனில் கீழ்கண்ட நிதி வரையறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (கமிஷனின் அறிக்கை தொகுதி -1 இன் பாரா 14.64 முதல் 14.67 வரையுள்ள விஷயங்கள் தொகுதி-2இல் உள்ள இணைப்பு 14.2 உடன் சேர்த்து பரிசீலிக்க வேண்டியவை ஆகும்.)
அ) ஒரு மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வருவாய் நிதிநிலை என்பது அந்த மாநிலத்தின் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிதிக் கணக்கு மற்றும் ஓராண்டிற்கு முந்தைய திருத்தப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும். இதை விளக்கவேண்டுமெனில், 2016-17ஆம் ஆண்டிற்கான ஒரு மாநிலத்தின் வருவாய் நிதிநிலை என்பது 2014-15ஆம் ஆண்டு (நிதிக் கணக்கில் உள்ளபடி) மற்றும் 2015-16ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.
ஆ) இரண்டாண்டுகளுக்கு முந்தைய நிதிக் கணக்கின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வட்டிக்கான தொகை/மொத்த வரிவருவாய் விகிதம் மற்றும் கடன் தொகை/ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆகியவை கணக்கிடப்படும். இதை விளக்க வேண்டுமெனில், 2016-17ஆம் ஆண்டிற்கான ஒரு மாநிலத்தின் தகுதியை நிர்ணயிக்க வேண்டுமெனில் 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள வட்டித்தொகை/மொத்த வரிவருவாய் விகிதம் மற்றும் கடன் தொகை/ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
14வது நிதிக்கமிஷன் காலத்தில் ( 2016-17 முதல் 2018-19) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் அளவிற்கு நிதிப் பற்றாக்குறைக்கான நிதியுதவியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு மாநிலத்தால் இயலவில்லை எனில் இவ்வாறு பயன்படுத்தப்படாத நிதிப் பற்றாக்குறைக்கான நிதியுதவியை (ரூபாயில் கணக்கிடப்படும்) அதற்கு அடுத்த ஆண்டில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும் 14வது நிதிக்கமிஷன் காலத்திற்குள் மட்டுமே இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். பயன்படுத்திக் கொள்ளாத அளவை கணக்கிடுவதற்கு, ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் 3 சதவீத நிதிப்பற்றாக்குறை என்ற அளவிற்கு ஒத்ததாக இந்த பயன்படுத்திக் கொள்ளப்படாத நிதியின் அளவு என்ற வரம்பிற்குள் இருக்கும். அதைப் போன்றே, மாநிலத்திற்குரிய அளவிற்கு மேலாக கூடுதலாக நிதி ஏதேனும் பெற்றிருந்தால், அது அதற்கு அடுத்த ஆண்டில் நிகர கடன் எல்லையிலிருந்து சரிகட்டப்படும்.
இதன் விளைவாக மத்திய அரசிற்கு எவ்விதமான நிதிச்சுமையும் இருக்காது. ஏனெனில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நிதிக் கமிஷன் வரையறுத்துள்ள நிதிப் பற்றாக்குறை அளவிற்குள்ளும், மாநிலங்களுக்கான நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகத்திற்கான சட்டத்தில் கூறப்பட்ட வகையிலுமே தங்களது கடனை பெறுகின்றன. எனினும், முதலீட்டுத் திட்டங்கள்/ கட்டமைப்பு ஏற்பாடுகள் போன்றவற்றிற்கான அரசு செலவினத்திற்கு பெரிதும் தேவைப்படும் கடன்களை பெறும் வகையில் கூடுதல் வரம்பை மாநிலங்கள் பெறுவதற்கும் வழியுண்டு.