பி.எம்.இந்தியா



எனது அமைச்சரவை சகாக்களான காலனல் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், திரு. அனில் பய்ஜால் ஜி, ராகுல் பட்நகர் ஜி, திரு. நரேந்திர பத்ரா ஜி, சுசில் குமார் ஜி மற்றும் நாட்டிற்காக உலகமெங்கும் பெருமை தேடித்தருகின்ற அனைத்து விளையாட்டு வீரர்களே, அவர்களது பயிற்சியாளர்களே, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள, எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையையையும் புகழையும் தேடித்தர தங்களால் ஆன அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ள எனது இளம் நண்பர்களே! உங்கள் அனைவரையும் மனமார வரவேற்கிறேன்.
நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் இருந்தும் முகிழ்த்து வந்துள்ள பதினேழு வயதிற்குக் கீழ்ப்பட்ட விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கின்றனர். கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) என்பது ஒரு திட்டம் அல்ல: அது ஓர் இயக்கம். இந்தியாவின் சாதாரண மக்களின் வாழ்வில் விளையாட்டு எவ்வாறு முன்னுரிமையைப் பெற முடியும்? தங்கள் குழந்தைகளின் வேலைவாய்ப்புகளில் விளையாட்டின் முக்கியத்துவத்தை பெற்றோர்களும் கூட உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு விளையாட்டு மிக முக்கியமானதொரு அம்சம் என்ற உணர்வு நமது பள்ளி முறையிலும் நமது கல்விச் சூழலிலும் உருவாவதை எப்படி வலுப்படுத்த முடியும்? ஐந்து- ஏழு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றால் அந்த முன்னுரிமைப் பட்டியலில் விளையாட்டிற்கும் ஓர் இடம் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய அணுகுமுறைக்குப் பதிலாக, இன்று ஒவ்வொரு வேலையையும் முடித்தபிறகு, சிறிது நேரத்தை நாம் சேமித்து, கொஞ்சம் விளையாட வேண்டும். ‘விளையாடி வளர்வோம்’ என்ற உறுதியுடன் இத்தகைய எண்ணத்தில் நாம் எவ்வாறு முன்னே செல்ல முடியும்? இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்த பல விளையாட்டு வீரர்கள் இங்கே இருக்கிறார்கள். அதன் பொருள் எந்தவித முயற்சியையும் செய்யாமலேயே அவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகி விட்டார்கள் என்பதல்ல. அவரது திறமையை யாரோ ஒருவர் அடையாளம் கண்டிருக்கிறார். வேறு ஒருவர் அவரை வளர்த்தெடுக்க முயற்சி செய்திருக்கிறார். துவக்க நாட்களில் அவரது பெற்றோரும் கூட அவர்களை விளையாட்டில் ஈடுபடாமல் தடுக்க முயற்சி செய்திருப்பார்கள். இந்த விஷயத்தை பள்ளிகளிலும் கூட அந்த விளையாட்டு வீரர்கள் கேட்டிருக்கக் கூடும். “நீங்களெல்லாம் நன்றாகத்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது ஏன் உங்கள் நேரத்தை விளையாட்டில் வீணடிக்கிறீர்கள்?” இது போன்ற இடையூறுகள் எண்ணற்றவை இருந்திருக்கும். இருந்தாலும் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு முன்னே அழைத்துச் சென்ற, தங்களின் இலக்குகளை எட்டுவதற்காக அவர்களை தயார் செய்த யாராவது ஒருவர் நிச்சயமாக இருந்திருப்பார். அதைப் போலவே விளையாட்டிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட விளையாட்டு வீரர்களும் இருந்திருப்பார்கள்.
இன்று இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமே இல்லை. 125 கோடி மக்கள் தொகையினைக் கொண்ட, அதிலும் 65சதவீதம் பேர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில் இந்தியா விளையாட்டுத் துறையில் தன் முத்திரையைப் பதிக்க முடியாதா என்ன? இந்தியா எண்ணற்ற முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். அதன் ராணுவ பலம் அதிகரிக்கும்போதுதான் இந்தியா முன்னேறுகிறது என்றோ, அல்லது அது பொருளாதாரத்தில் வலிமையானதொரு நாடு என்ற வகையில் மாறும்போதுதான் இந்தியா முன்னேறுகிறது என்றோ நாம் கூறிவிட முடியாது. இந்தியாவின் முன்னேற்றம் என்பதன் பொருள் அதுவல்ல. அது அப்படியுமல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேற்றம் அடையும்போதுதான் இந்தியா உலகத்தின் உச்சியை எட்ட முடியும். நோபல் பரிசு வழங்கப்படும்போது, ஆஸ்கர் விருது வழங்கப்படும்போது, விஞ்ஞானிகளை பற்றி உலகம் விவாதிக்கும்போது, விளையாட்டைப் பற்றி விவாதிக்கும்போது என இந்த இடங்களில் எல்லாம் இந்தியா பரந்து இருக்க வேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உலகத்தின் உச்சிக்கு இந்தியாவை எடுத்துச் செல்ல நாம் முன்னேறும்போது இது நிச்சயம் நடக்கும். அது இன்று நடைபெறவில்லை என்றாலும் கூட நிச்சயமாக நாளை நடக்கும். மிகுந்த தன்னம்பிக்கையோடு நான் இதைச் சொல்ல முடிகிறது. ஏனென்றால் நாட்டின் தகுதி-திறமையின் மீதும், நாட்டின் இளைய தலைமுறையினரின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னதைப் போல, விளையாடு இந்தியா திட்டம் என்பது இதோடு தன்னை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை. இங்கே போட்டிகள் நடக்கும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் கிடைக்கும். அடிமட்ட அளவில் அறிவியல்பூர்வமான, அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் அணுகுமுறை, முழுமையானதொரு நடவடிக்கைக்கான ஒரு செயல் திட்டம் ஆகியவற்றுடன் ஒரு முயற்சி தொடங்கியுள்ளது. கட்டமைப்பை மேம்படுத்துவதோ, அல்லது பயிற்சி அளிப்பது பற்றிய விஷயமோ அல்லது மனிதவள ஆதாரங்களை வளர்த்தெடுப்பது பற்றிய விஷயமோ, சரிசமமான அளவில் அடிமட்டத்தில் விளையாட்டின் விதிமுறைகள் சென்று சேர்வதோ, இது பற்றிய ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலம் கடைக்கோடியில் இருப்பவருக்கும் கூட விளையாட்டு மைதானங்களைப் பற்றிய சரியான தகவல் கிடைக்க வழி கிடைக்கும்.
இதில் முக்கியமான விஷயம் என்பது திறமையானவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பதே ஆகும். இந்தத் திறமையை இணைய தளத்தின் மூலம் தேர்வு நடத்திக் கண்டுபிடித்துவிட முடியாது. சரியான, சிறந்த பதிலை யார் சொல்கிறார்கள் என்பது போன்றவற்றைக் கொண்டு விளையாட்டுத் துறையில் இதைச் செய்துவிட முடியாது. விளையாட்டுத் துறையில் தனித்திறமை என்பது விளையாட்டு அரங்கத்தில் இருந்துதான் வெளிப்படும். விளையாட்டு மைதானத்தில் மட்டும்தான் அது செழித்தோங்கும். எனவே பள்ளிகளில் தொடர்ச்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணங்களைப் பராமரிக்கும்போது திறமையானவர்கள் கண்டறியப்பட வேண்டும். இவ்வாறு திறமை பெற்றவர்கள் உதவி என்பதன் உண்மையான பொருளில் உதவியைப் பெறுவார்கள். அவர்கள் நல்ல பயிற்சியைப் பெற்றார்களெனில், நமது நாட்டின் இளைஞர்கள் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமென்றாலும், எந்தவகையிலும் அதற்கான பலனைப் பெறுவதற்காக முகம் சுளிக்காமல் முன்வருவார்களே தவிர, புறமுதுகிட்டு ஓடிவிட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனவேதான் திறமையானவர்களைக் கண்டறிவது என்ற முயற்சிக்குப் பிறகு மிகவும் முக்கியமானதொரு முடிவை அரசு எடுத்திருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இருந்து ஆயிரம் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நல்ல உற்சாகம் மிக்க, திறமை வாய்ந்த, தமக்கேயுரிய தனித்திறமைகளைக் கொண்ட, விளையாட்டிற்கான தனித்திறமைகளையும், தேவையான உடல்வலிவையும் கொண்ட, அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 1,000 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு ஆயிரம் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்குள் தனித்திறன் வாய்ந்த ஐந்தாயிரம் குழந்தைகள் நம்மிடையே இருப்பார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான பயிற்சி வசதிகளும் செய்து தரப்படும். உலகத்திலேயே மிகச் சிறந்த வழிகாட்டுதல் அவர்களுக்குக் கிடைக்கும். உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும் என்பதோடு மிகச் சிறந்த பயிற்சியையும் அவர்கள் பெறுவார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களது பெற்றோருக்கு பணப்பிரச்சனையின் காரணமாக இவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதை நிறுத்தும் எண்ணம் கூட ஏற்படக் கூடும். என்றாலும் இன்றைய நாட்களின் அனுபவம் கிராமங்களில் இருந்தும் இரண்டாம் நிலை நகரங்களில் இருந்தும் குழந்தைகள் விளையாடுவதற்கு முன்வருவதை நமது அனுபவம் எடுத்துக் கூறுகிறது. அவர்களது பெற்றோரிடம் போதுமான நிதியாதாரம் இல்லை என்பதால் இந்தியாவின் தலைசிறந்த வைரங்கள் அங்கே சிக்கிக் கொண்டுவிடாது. எனவேதான் இந்த ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி என்பது பெற்றோரின் ஆதரவை அவர்கள் தொடர்ந்து பெறுவதை உறுதிப்படுத்தும். எந்தவகையான சத்துணவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது? அவர்களின் மனநிலையை ஒரே மாதிரியாக நிலைநிறுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற அனைத்து வகையிலும் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
நாங்கள் கொண்டு வந்துள்ள மற்றொரு முக்கியமான மாற்றம் இதுதான்: இந்த நாட்களில் நமது விளையாட்டு வீரர்கள் நமது நாட்டிற்குப் பாராட்டுகளையும் புகழையும் பெற்றுத் தரும்போது மாநிலங்களில் ஆரோக்கியமானதொரு சூழல் உருவாக்கப்படுகிறது. மாநில அரசுகளும் பல்வேறு பரிசுகளை அறிவிக்கின்றன. சமூகத்தின் பல்வேறு நபர்களும் ஏராளமான பரிசுகளை அறிவிக்கின்றனர். எனினும் கடைசி நிமிஷத்தில் அந்த விளையாட்டு வீரருடன் இருந்த பயிற்சியாளர்கள் மட்டுமே இந்தப் பாராட்டு மழையில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். எப்படியாயினும் இது செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
என்றாலும், சிறு குழந்தையாக இருக்கும்போதே, அந்தக் குழந்தையின் தனித்தன்மையை அடையாளம் கண்டு கொண்ட பயிற்சியாளர், முதல் நான்கு-ஐந்து ஆண்டு காலத்தில் அந்த விளையாட்டு வீரருக்குப் பயிற்சி அளித்தவர்கள் இருப்பார்கள். அதன்பிறகு, பல்வேறு பயிற்சியாளர்களும் அந்த விளையாட்டு வீரருக்குப் பயிற்சி அளித்திருக்கலாம் என்றாலும் குறிப்பிட்ட இந்தத் துறையில் அந்த விளையாட்டு வீரரை அறிமுகம் செய்து வைத்த முதல் பயிற்சியாளர் நிச்சயமாக இருப்பார்.
எனவேதான் நமது விளையாட்டு வீரர்கள் எப்போதெல்லாம் நமது நாட்டிற்குப் பெருமை தேடித் தருகிறார்களோ, எப்போதெல்லாம் அவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படுகிறதோ, அவர்களது பயிற்சியாளர்களுக்கு எப்போதெல்லாம் விருதுகள் அறிவிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த விளையாட்டு வீரரின் வாழ்க்கை முழுவதிலும் அவரது பயிற்சிக்கு பங்களித்த அந்தப் பயிற்சியாளர்கள் அனைவருமே பயிற்சியாளருக்கான விருதைப் பெறத் தகுதியானவர்களே என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
இது மிகப்பெரியதொரு விஷயம்தான்.; விளையாட்டிற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அவர்கள் பணத்திற்காகவோ புகழுக்காகவோ அதைச் செய்யவில்லை. அவர்களிடம் உள்ளார்ந்த ஒரு பற்றுறுதி இருக்கிறது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்போது, இந்திய விளையாட்டு வீரர்கள் அவற்றில் பங்கெடுக்கும்போது, அவர்கள் மிகக் கடுமையாகப் போராடி, தங்களின் ஆகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று நாட்டின் மூவண்ணக் கொடியை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்தும்போது, அவர்களின் உடல் மொழி முற்றிலுமாக மாறிவிடுகிறது. இதில் அவர்கள் காயமுற்றாலும் சரி, அல்லது ரத்தம் வருமளவிற்கு காயமுற்றாலும் சரி, அதையும் கூட அவர்கள் மறந்து விடுகின்றனர். கைகளில் மூவண்ணக் கொடியை ஏந்தும்போது அவர்களின் ஓட்டம் மிகவும் தனித்தன்மை மிக்கதாக இருக்கிறது. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு விளையாட்டு வீரர் மூவண்ணக் கொடியை தங்கள் கைகளில் ஏந்தும்போது அவர்கள் இந்தியா முழுவதிலும் புதியதொரு சக்தியை, புதியதொரு உணர்வை தங்கள் செயலால் நிரப்புகின்றனர்.
இந்தப் பாரம்பரியத்தை நாம் நிலைநிறுத்திவிட்டோமானால், விளையாட்டு என்பது இந்தியாவிற்கு புதியதொரு விஷயமாக இருக்காது. மொகஞ்சதாரோ கலாச்சாரத்தையும் அதன் பாரம்பரியங்களையும் ஆய்வு செய்யும் வாய்ப்பு உங்களில் எவருக்கும் கிடைக்குமானால் நல்லது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறை அது. குஜராத் மாநிலத்தில் தொலாவிராவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் இடத்தை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்தனர். முதன்முறையாக நான் அந்த இடத்திற்குச் சென்றிருந்தபோது ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமானதொரு விளையாட்டு மைதானம் தொலாவிராவில் இருந்தது என்று அங்கிருந்த வழிகாட்டிகள் என்னிடம் கூறினார்கள். அதன் இடிபாடுகளை இன்றும் கூட உங்களால் காண முடியும்.
விளையாட்டு என்ற பாரம்பரியம் இந்தியாவிற்குப் புதிதல்ல என்பதைத்தான் நான் கூற வந்தேன். இந்த விளையாட்டு உலகத்தில் நவீன சூழல் அமைப்புடனும், நவீன வசதிகளுடனும் மிக நவீனமான ஆதாரங்களுடனும் மீண்டும் நம்மை உலகப் பின்னணியில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
17வயதிற்கு உட்பட்ட, இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலும் இருந்து வந்துள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுத் துறையில் இன்று கிடைத்துள்ள விளையாடு இந்தியா என்ற இந்த வாய்ப்பு விளையாட்டு உணர்வை உங்களிடையே இயற்கையாகவே வளர்த்தெடுக்கும். ஒரே இந்தியா, வளமான இந்தியா என்ற உணர்வை பெற்றபடிதான் நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்வீர்கள். நமக்கு மொழி தெரியாமல் இருக்கலாம்; ஆனால் உணர்வு தெரியும். ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்ற அந்த உணர்வு நமக்கு புதியதொரு சக்தியையும் புதியதொரு வலிமையையும் தரும்.
இந்த உணர்வுகளுடன் விளையாட்டு வீரர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 8-ம் தேதியன்று இந்த விளையாட்டுப் போட்டிகள் நிறைவடையும்போது நீங்கள் உங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வீர்கள். பல புதிய விஷயங்களைக் கற்ற பிறகே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஏராளமான நண்பர்களை பெற்ற பிறகு, இந்த விளையாட்டு மைதானத்தில் ஒரே இந்தியா என்ற அனுபவத்தை உணர்வதற்கான வாய்ப்பைப் பெற்ற பிறகு நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். மிகவும் இயற்கையான இந்தப் போக்கைப் பெற்ற பிறகே, ஒரு குழுவாக எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அறிந்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.
அந்தக் குழந்தைகள் அனைவருக்கும் அவரது பயிற்சியாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளையாட்டுத் துறையில் இறங்க முன்வருவதற்கு அவர்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாழ்த்துக்களுடன் விளையாடு இந்தியா திட்டத்தின் முதல் விளையாட்டுப் போட்டிகளை இப்போது நான் தொடங்கி வைக்கிறேன்.
நன்றி!
*****
Sports should occupy a central place in the lives of our youth. Sports is an important means of personality development: PM @narendramodi begins his speech at the start of Khelo India school games https://t.co/yIPKy8QcqD
— PMO India (@PMOIndia) January 31, 2018
In your busy schedules, devote time to games...give priority to playing. Today we have in our midst eminent sportspersons. I am sure they would have faced many obstacles but they did not give up and went on to distinguish themselves: PM @narendramodi https://t.co/yIPKy8QcqD
— PMO India (@PMOIndia) January 31, 2018
India does not lack sporting talent. We are a youthful nation and we can do even better in sports: PM @narendramodi https://t.co/yIPKy8QcqD
— PMO India (@PMOIndia) January 31, 2018
When we say India has to grow on the world stage, it does not only mean having a strong army & powerful economy. It includes people of India distinguishing themselves as scientists, artists, sportspersons. And, I am confident India will scale these heights. I trust our youth: PM
— PMO India (@PMOIndia) January 31, 2018
Khelo India is not only about winning medals. It is an effort to give strength to a mass movement for playing more. We want to focus on every aspect that would make sports more popular across the nation: PM @narendramodi https://t.co/yIPKy8QcqD
— PMO India (@PMOIndia) January 31, 2018
It is gladdening to see youngsters from rural India and smaller cities excelling as sportspersons. These are also youngsters who need support, which we want to provide: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 31, 2018
Those who love sports play for passion, not for monetary rewards. This is why athletes are special. When an Indian sportsperson wins and when he or she gets to hold the Tricolour, it is an extremely special feeling and it energises the entire nation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 31, 2018