Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை.

70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை.


விடுதலைத் திருவிழாவின் இந்த 70வது ஆண்டில் நாட்டை புதிய, மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்ல புதிய உறுதியும், புதிய தீர்மானமும், புதிய உற்சாகமும், புதிய துடிப்பும் நம்மிடம் பிறந்துள்ளது. நமது விடுதலையானது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், போராட்டம், தியாகம் ஆகியவற்றின் மூலமாக நமது நாட்டு விடுதலை மீதான அவர்கள் கொண்டிருந்த பக்தி ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுவதாகவே அமைகிறது. விருப்பத்துடன் தூக்கு மேடையில் ஏறிய இளைஞர்களை நாம் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம். இன்று சுதந்திர இந்தியாவில் நாம் மூச்சுவிடுவதற்கு காரணமான மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், பண்டிட் நேரு மற்றும் இதர மகத்தான தலைவர்களும் நமது நாட்டின் விடுதலைக்காக அயராது போராடி, பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா புராதனமான நாடு. பல ஆயிரக்கணக்கான வரலாறும் கலாச்சார பாரம்பரியமும் நம்மிடம் உள்ளது. வேதங்களில் இருந்து விவேகானந்தர் வரை, உபநிஷத்துகளிலிருந்து விண்வெளிக் கலங்கள் வரை, பகவான் கிருஷ்ணரில் இருந்து மகாத்மா காந்தி வரை, மகாபாரதத்தின் பீமனில் இருந்து பீம் ராவ் அம்பேத்கர் வரை நீண்டதொரு வரலாற்றுப் பயணமும் பாரம்பரியமும் நமக்குண்டு. கடந்த பல தலைமுறைகளாக பல ஏற்ற இறக்கங்களையும், போராட்டங்களையும் இந்த நாடு சந்தித்திருக்கிறது. சிறந்ததொரு மனித வாழ்வை உருவாக்குவதற்காக பலரும் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டனர்.

இந்தியாவிற்கு வயது எழுபது அல்ல; மாறாக, காலனியாதிக்கத்திற்குப் பின்னால் வந்த 70 ஆண்டுகள்தான் இவை. ஒரு புதிய முறையின் கீழ் நாட்டை முன்னெடுத்துச் செல்ல நாம் முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறோம். சர்தார் வல்லபாய் பட்டேல் நமது நாட்டை ஒன்றுபடுத்தினார். இப்போது இந்த நாட்டை மிகச்சிறந்த நாடாக மாற்றுவது நமது கடமையாகும். இந்தியாவை ‘’ஒரே இந்தியா சிறந்த இந்தியா’’ என்ற நமது கனவை நனவாக்க நாம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

எனதருமை சகோதர, சகோதரிகளே நமது சுதந்திரம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. முடிவேயில்லாத கொடுமைகள் அப்போது நிலவின. எனினும் நமது மன உறுதியோ தளராத ஒன்றாகவே இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு இந்தியனும் ஒரு போர் வீரராகத்தான் இருந்தார். ஒவ்வொருவருமே நாடு விடுதலை பெற வேண்டுமென்றே விரும்பினர். யாரேனும் ஒருவர் சிறையில் அடைக்கப்படாமல் இருக்கக் கூடும்; யாரேனும் ஒருவர் தியாகம் செய்வதற்கான வாய்ப்பு பெறாமல் இருந்திருக்கக் கூடும். என்றாலும் ஒவ்வொரு இந்தியனுமே விடுதலையைப் பெறுவது என்பதில் உறுதியாகவே இருந்தனர். அதற்கான தலைமைப் பொறுப்பில் இருந்தவர் தான் மகாத்மா காந்தி.

நமது புரட்சியாளர்களின் தியாக நோக்கம்தான் விடுதலைக்கு வழிவகுத்தது. ஆனால் இப்போது, சுய ஆட்சியை நல்லதொரு ஆட்சியாக மாற்றுவதற்கு 125 கோடி இந்தியர்களின் மன உறுதி தேவைப்படுகிறது. தியாகத்தின் மூலம் நாம் விடுதலை பெற்றோம் எனில், நல்ல நிர்வாகத்தைப் பெறுவதும் கூட தியாகம், வீரம், அர்ப்பணிப்பு, ஒழுங்கு ஆகியவை இல்லாமல் முடியாது. எனவே 125 கோடி மக்களின் நல்ல நிர்வாகத்திற்கான மன உறுதியை முன்னெடுத்துச் செல்ல நாம் அனைவருமே அவர்களுக்குரிய பொறுப்புகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் முன்னேற வேண்டும்.

சிறந்த நிர்வாகத்தைப் பெறுவதற்கு, ஒவ்வொரு ஜனநாயக அமைப்பையும் வலுப்படுத்த, அது பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, கிராமத் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவருமே தங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான், சிறந்த நிர்வாகம் என்ற கனவை நனவாக்க இந்தியாவிற்கு நீண்ட காலம் ஆகாது.

நமது நாடு பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால், பிரச்சினைகள் இருக்குமானால், நம்மிடம் திறமைகளும் உள்ளன. இத்தகைய திறமைகளுடன் நாம் முன்னேறினால், அதற்கான தீர்வுகளுக்கான பாதைகளும் கிடைக்கும். எனவே சகோதர, சகோதரிகளே, லட்சக்கணக்கான பிரச்சினைகள் இந்தியாவை எதிர்கொள்கின்றன எனில் அத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நம்மிடம் 125 கோடி மூளைகள் இருக்கின்றன.

சகோதர, சகோதரிகளே நமது நாடு குற்றச்சாட்டுகளால் மூழ்கிக் கிடந்த ஒருகாலமும் உண்டு. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்று, குற்றச்சாட்டுகளாலும் புகார்களாலும் அரசு சூழ்ந்திருக்கவில்லை. மாறாக, எதிர்ப்புகளால் நிரம்பியிருக்கிறது. நம்மைச் சுற்றி எதிர்பார்ப்புகள் இருக்கிறதெனில், நம்பிக்கை இருக்கிறது என்பதற்கான அறிகுறி. பரஸ்பர நம்பிக்கை இருக்குமானால், அப்போதுதான் எதிர்பார்ப்புகள் அதன் கருப்பையிலிருந்து எழும். இத்தகைய எதிர்பார்ப்புகள்தான் நல்ல நிர்வாகத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும். அதுதான் எதிர்பார்ப்புகளை தொடர்ந்து நிறைவேற்ற உதவும். எனவே சகோதர சகோதரிகளே நல்ல நிர்வாகத்திற்கான இந்தப் பயணத்தில் பங்கேற்பீர். இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அரசு என்ன செய்கிறது; நாட்டில் என்ன நடக்கிறது; நாட்டிற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவாதம் இருப்பது இயற்கையான ஒன்றுதான். இதுவரை இருந்த அரசுகள் என்ன செய்தன என்பதைப் பற்றிய விரிவான சித்திரத்தையும் என்னால் வழங்க முடியும். பல விஷயங்களையும் என்னால் சுட்டிக் காட்ட முடியும்.

இந்த இரண்டாண்டு காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை விரிவாக நான் விளக்கத் துவங்கினால், இந்த செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஒரு வாரத்திற்குப் பேச வேண்டியிருக்கும். எனவே வேலையை மட்டும் அல்லாமல், இந்த அரசின் வேலைக்கான கலாச்சாரம் பற்றி உங்கள் கவனத்தை கவர விரும்புகிறேன். சில நேரங்களில் செய்த வேலையை கணக்கிடுவது எளிதாக இருந்தாலும் அதன் ஆழத்திற்குச் சென்றால் ஒழிய, அதைத் தெரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் சாதாரணமானவர்களால் வேலைக்கான கலாச்சாரத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது.

எனவே சகோதர சகோதரிகளே, இன்று உங்களிடையே கொள்கையைப் பற்றி மட்டுமே பேசப்போவதில்லை; அதற்கான நோக்கம், முடிவுகள் ஆகியவற்றைப் பற்றியும் பேசப்போகிறேன். சகோதர சகோதரிகளே இது திசைவழி பற்றிய பிரச்சினை மட்டுமல்ல; விரிவான அணுகுமுறைக்கான விஷயமும் ஆகும்.

இது வெறும் வடிவமைப்பு மட்டுமல்ல; மாற்றத்திற்கான நமது உறுதிப்பாடும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகள், ஜனநாயகம், மக்களின் ஆதரவு ஆகியவை சங்கமிக்கும் இடமும் ஆகும். இதுதான் நமது ஆசையும் ஒப்புதலும் ஆகும். இதுதான் நமக்கான தருணம்; முன்னேற்றத்திற்கான வெளிப்பாடும் ஆகும்.

எனவே எனதருமை நாட்டு மக்களே, நல்ல நிர்வாகம் பற்றி நான் இன்று பேசும்போது, அதன் நேரடியான அர்த்தம் சாதாரண மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதே ஆகும். நல்ல நிர்வாகம் என்பதன் பொருள் நிர்வாகம் உணர்வுபூர்வமாக, பொறுப்புடையதாக, சாதாரண மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். சிறந்த நிர்வாகத்தை நாம் வலியுறுத்தும்போது, ஒவ்வொருவரின் பொறுப்பையும், பொறுப்புணர்வையும் அதன் அடிவேராக இருக்க வேண்டும். அதிலிருந்தே அது தன் உயிர்ப்பைப் பெற வேண்டும். எனவே நிர்வாகமானது உணர்வு பூர்வமானதாக இருக்க வேண்டும்.

ஒரு பெரிய மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், பல நாட்கள் நாம் காத்திருக்க வேண்டிய காலத்தை சற்றே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மக்கள் வரும்போது எப்போது பரிசோதனைக்குச் செல்ல முடியும் என்று தெரிந்து கொள்வதற்கே அவர்கள் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது மொத்த முறையையுமே எங்களால் மாற்ற முடிந்துள்ளது. இப்போது இணையம் மூலமான பதிவு, இணையம் மூலமாகவே மருத்துவர்களை பதிவு செய்வது, நோயாளி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தால் உடனடியாக அவருக்கான சிகிச்சை துவங்கி விடும். அதுமட்டுமல்ல; அவரது மருத்துவ ஆவணங்களும் இணையத்தில் கிடைக்கும். மருத்துவத் துறையில் இத்தகைய ஒரு கலாச்சாரத்தை நாடு முழுவதிலும் உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். இன்று இந்த முறையை 40க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகளில் இந்த அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அடிப்படையான விஷயம் என்னவெனில், நிர்வாகமானது உணர்வு பூர்வமான ஒன்றாக இருக்க வேண்டும். சகோதர, சகோதரிகளே, நிர்வாகம் பொறுப்பானதாக இருக்க வேண்டும். நிர்வாகம் பொறுப்பானதாக இல்லையெனில், சாதாரண மனிதனின் பிரச்சினைகள் தொடர்ந்து கவனிக்கப்படாமலேயே இருக்கும். இதில் மாற்றம் எப்படி உருவாகும்? நம்மிடம் தொழில்நுட்பம் இருக்கிறது. ஒரு காலத்தில் ரயில் டிக்கெட்டுகளுக்கு அலைய வேண்டியிருந்தது. இப்போது சாதாரண மனிதனும், ஏழைமனிதனும் ரயில் டிக்கெட்டிற்கு நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நிமிடத்திற்கு 2000 டிக்கெட்டுகளை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஒரு காலத்தில் இணைய தளம் திறக்கவே காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இன்று அதே ஒரு நிமிடத்தில் 15,000 டிக்கெட்டுகளை கொடுக்க முடியும் என்று மிகுந்த மன நிறைவுடன் என்னால் சொல்ல முடியும்.

சாதாரண மனிதனின் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொறுப்பான ஒரு அரசு எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பொறுப்புடையதாக இருக்க வேண்டும்.

நாட்டில் ஒரு பிரிவினர் உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம், இந்தப் பிரிவினர் வருமான வரி அதிகாரிகளைக் கண்டு காவல் துறையை விட அதிகமாகவே கலங்குகின்றனர். இந்த நிலையை நான் மாற்றியாக வேண்டும். நான் முயற்சி செய்து வருகிறேன். நான் அதை மாற்றுவேன். நாணயமாக வருமானவரி செலுத்தும் ஒருவர், பின்னால் பிரச்சினை எதையும் சந்திக்க வேண்டாமென்று கூடவே இரண்டு ரூபாயை கொடுத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் வரியை செலுத்திய பிறகு, அவர் திரும்பப் பெற வேண்டிய தொகையைப் பெற அவர் எராளமான இடையூறுகளை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர் சிபாரிசைத் தேடி அலையவேண்டியிருந்தது. நீண்ட காலம் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. இப்போது இணையத்தின் மூலமாகவே பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்போது ஒன்றிலிருந்து மூன்று வார காலத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெற முடியும். இந்த உரையை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் இதற்கென தனியாக விண்ணப்பம் எதையும் கொடுக்காமலேயே தங்கள் பணம் நேரடியாக தங்களை வந்தடைகிறது என்பதை ஒப்புக் கொள்வார்கள். அரசை பொறுப்புடையதாக மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளின் மூலமாகவே இது நடந்தது.

நல்ல நிர்வாகத்திற்கு, வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும். நமது சமூகம் மெதுவாக உலகத்துடன் தொடர்புகொள்வதாக மாறியுள்ளது. இதற்கு முன்னால், ஓர் ஆண்டுக்கு 40 முதல் 50 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால் இப்போது 2 கோடி பேர் விண்ணப்பிக்கிறார்கள். போதிய சிபாரிசு இல்லையெனில், ஒருவர் 4 முதல் 6 மாதம் வரை விசாரிப்பதிலேயே காலத்தைக் கடத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போது நமது குடிமக்கள் எந்தவித சிபாரிசும் இல்லாமலே ஓரிரு வாரங்களுக்குள்ளேயே பாஸ்போர்ட் பெறுகிறார்கள் என பெருமையுடன் என்னால் சொல்ல முடியும். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையின் காரணமாகவே இது சாத்தியமாயிற்று. தாமதமில்லை; சிபாரிசு தேவை இல்லை. 2015-16 காலம் என்ற மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே 1.75 கோடி பாஸ்போர்ட்கள் நமது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறன்தான் நல்ல நிர்வாகத்திற்கான அறிகுறியாகும். இதற்கு முன்பு யாராவது ஒருவர் ஒரு கம்பெனி அல்லது தொழிலை துவங்க வேண்டுமானால் அதை பதிவு செய்வதற்காகவே குறைந்தது 6 மாத காலம் போராட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நிர்வாகத்தில் செயல்திறன் மேம்பட்டதன் விளைவாக அதே ஊழியர்கள், அதே விதிமுறைகளைக் கொண்டு இத்தகைய கம்பெனிக்கான பதிவை 24 மணி நேரத்திற்குள் பெற முடியும். இந்த ஜூலை மாதத்தில் மட்டும் 900 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டன.

எனதருமை சகோதர, சகோதரிகளே, நல்லதொரு ஆட்சிக்கு நல்ல நிர்வாகம் அவசியம். நல்ல நிர்வாகத்திற்காக பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். ’சி’ மற்றும் ‘டி’ பிரிவுகளில் நேர்முகத்தேர்வை ரத்து செய்துவிட்டோம். இப்போது அவர்களின் தகுதிக்கேற்ப வேலை பெறுவார்கள். இத்தகைய 9000 இடங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இப்போது இந்த 9000 இடங்களுக்கும் நேர்முகத் தேர்வு இருக்காது. இப்போது வேலை தேடும் நமது இளைஞர்கள் நேர்முகத்தேர்விற்காக செலவு செய்யவோ, சிபாரிசிற்காக யாரையாவது தேட வேண்டிய அவசியம் இல்லை. ஊழலுக்கும், இடைத்தரகர்களுக்கும் கதவு மூடப்பட்டு இப்போது இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

எனதருமை சகோதர, சகோதரிகளே அரசு ஒரு திட்டத்தை அறிவித்து அதன் கீழ் என்ன நடக்கும் என்று விளக்கும் ஒரு காலம் இருந்தது. மக்களை திருப்திப்படுத்துவதற்காக இருந்த ஒரு நடைமுறை இருந்தது. மக்கள் இப்போது அதேபோன்று எதிர்ப்பார்க்கிறார்கள். பிறகு திட்டங்கள் பற்றி விசாரிக்கத் துவங்குவார்கள். அதன் பிறகு அவர்கள் பட்ஜெட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரினார்கள். கடந்த 70 ஆண்டு காலத்தில் நாட்டின் மனநிலையும் மாறி விட்டது. திட்டங்களை துவக்குவது; திட்ட விவரங்கள்; அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் இதைப் பற்றியெல்லாம் மக்கள் திருப்தி அடைவதில்லை. நேரடியாகத் தெருவில் ஏதாவது தெரியும்போதுதான் சாதாரண மனிதன் திருப்தியடைகிறான். களத்தில் வேலைகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதன் மூலம் விஷயங்களை நம்மால் நிறைவேற்ற முடியாது. நமது வேகத்தை அதிகரித்து, மேலும் வேகமாக செயல்பட வேண்டும்.

நமது நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகள். ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருமே நிரந்தரமான கான்க்ரீட் சாலைகளையே எதிர்பார்க்கின்றனர். மிகப்பெரிய வேலை. சிறப்பு கவனத்துடன் அடல் பிஹாரி வாஜ்பேயி ஜி இதைத் துவக்கினார். பின்வந்த அரசுகளும் அந்த திட்டத்தை தொடர்ந்தன. வளர்த்தெடுத்தனர். நாங்கள் இப்போது அதற்கு வேகம் தர முயற்சி செய்கிறோம். இதற்கு முன்பு கிராமப் புற சாலைகள் நாள் ஒன்றுக்கு 70-75 கி.மீ. உருவாக்கப்பட்டன. இப்போது நாள் தோறும் 100 கி.மீ. சாலைகள் போடப்படுகின்றன. வரும் நாட்களில் சாதாரண மக்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்த வேகம் அதிகரிக்கும்.

நாட்டில் மின்சார வசதிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். குறிப்பாக மறுசுழற்சி மூலமான மின் உற்பத்திக்கு. நாடு விடுதலை பெற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு காற்றின் மூலம் மின் உற்பத்தி துவங்கியது. கடந்த ஓராண்டில் மட்டுமே அதை நாங்கள் 40 சதவீதம் அதிகரித்திருக்கிறோம். இதுதான் வேகம் என்பதற்கான பொருள். சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்தி. இப்போது உலகம் முழுவதுமே அதில் கவனம் செலுத்தி வருகிறது./ நாம் அதை 116 சதவீதம் அதிகரித்துள்ளோம். இது படிப்படியான மாற்றம் அல்ல; மிகப் பெரும் உயர்வு. இந்தவகையில்தான் நாங்கள் விஷயங்களை அதிகரிக்க விரும்புகிறோம். நம் நாட்டில் மின் உற்பத்தி இருக்கும்போது, மின்கடத்தலுக்கான கம்பிகள், முறையான மின்கடத்தலுக்கான கம்பிகள் நமக்குத் தேவை. எங்கள் அரசு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வோர் ஆண்டும் 30-35 கி.மீ. நீளத்திற்கு மின்கடத்திக் கம்பிகள் போடப்பட்டன. இன்று என்னால் மிகுந்த பெருமையுடன் சொல்ல முடியும் அதை 50,000 கி.மீ. ஆக அதிகரித்துள்ளோம். இப்படித்தான் நாங்கள் வேகப்படுத்தியுள்ளோம். ரயில்வே பாதையை உருவாக்குவதில் கூட, அதாவது அனைத்து சோதனைகளை முடித்து ரயில் ஓடுவதற்குத் தயாரான பாதையை உருவாக்குவதிலும் அப்படியே. கடந்த 10 ஆண்டுகளில் 1500 கி.மீ. நீளமாக இருந்தது இப்போது இரண்டு ஆண்டுகளில் 3500 கி.மீ. தயாராக உள்ளன. இதை மேலும் விரைவு படுத்த முனைகிறோம்.

சகோதர சகோதரிகளே, அரசின் திட்டங்களை ஆதார் அட்டையுடன் இணைத்து நேரடிப் பயன்களை தருவதில் அழுத்தம் தருகிறோம். இதற்கு முந்தைய ஆட்சியில் கிட்டத்தட்ட 4 கோடி பேர் ஆதார் அட்டை மூலம் அரசுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டனர் இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது அரசு திட்டங்களுடன் 70 கோடி மக்களின் ஆதார் அட்டைகளை இணைத்திருக்கிறோம் என்று மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விடுபட்டவையும் இப்போது முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

நமது நாட்டில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் வீட்டில் ஒரு காரை வைத்திருப்பதை மிகுந்த பெருமையாக நினைக்கிறார்கள். ஒரு வீட்டில் கேஸ் ஸ்டவ் இருப்பதே சமூகத்தில் தரமாகவும் அந்தஸ்தாகவும் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. விடுதலைக்குப் பிறகு, 60 ஆண்டு காலத்தில் சுமார் 14 கோடி பேருக்கு சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. ஒரு புறத்தில் இணைப்புகள் எனில் வெறும் 60 வாரங்களில் 4 கோடி புதிய இணைப்புகளை கொடுத்திருக்கிறோம் என்று மிகுந்த திருப்தியுடன் தெரிவிக்கிறேன். 60 ஆண்டு காலத்தில் 14 கோடி; 60 வாரங்களில் 4 கோடி. சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் கொண்டு வர இதுவே உரிய வேகமாகும்.

சட்டங்களில் படிந்துள்ள கறைகளைச் சுத்தம் செய்யவும் நாங்கள் துவங்கியிருக்கிறோம். ஒரே வகையான பல சட்டங்களின் சுமையானது அரசு, நீதித் துறை, மக்கள் ஆகிய அனைவருக்குமே பிரச்சினைகளை உருவாக்குவதாகவே இருக்கின்றன. இத்தகைய 1700 சட்டங்களை கண்டுபிடித்துள்ளோம். ஏற்கனவே நாடாளுமன்றம் 1175 சட்டங்களை ரத்து செய்துள்ளது. மீதமுள்ள இத்தகைய சட்டங்களையும் ரத்து செய்ய நாங்கள் விரும்புகிறோம்.

ஒரு சில விஷயங்களை செய்ய முடியும். மற்ற விஷயங்களை செய்ய முடியாது என்று நம்புவது நமது நாட்டின் இயற்கையான ஒன்றாக இருக்கிறது. இப்போது முடியாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் இது நடக்குமா என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாது. சந்தேகமே நமது இயற்கையான குணமாக மாறி விட்டது. நிர்வாகத்திற்கு ஒரு உத்வேகம் கொடுக்க வேண்டுமெனில், இந்தப் போக்கை மாற்றுவது மிக முக்கியமானதாகும். இதில் வெற்றி கிட்டும்போது நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது. நமது ஊக்கம் அதிகரிக்கிறது. நமது உறுதி மேலும் கூர்மையாகிறது. இதற்கான விளைவுகளும் மிக அருகில் வரத்துவங்குகின்றன.

பிரதம மந்திரியின் ஜன் தன் திட்டத்தை (மக்கள் நிதி திட்டம்) துவங்கியபோது, கிட்டத்தட்ட முடியாத ஒன்றாகவே தோன்றியது. கடந்த பல ஆண்டுகளாகவே, வங்கிகள் இருந்தன; அரசு இருந்தது; அரசுடைமை ஏற்கனவே முடிந்து விட்டது. என்றாலும் சாதாரண மனிதன் நாட்டின் பொருளாதார நடைமுறையின் ஒரு பகுதியாக மாறவில்லை. 21 கோடி குடும்பங்களை, 21 கோடி மக்களை இத்திட்டத்தில் இணைப்பது என்ற முடியாத ஒன்று எனக் கருதப்பட்ட ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது அரசின் பெருமை மட்டுமல்ல; 125 கோடி மக்களால் நிறைவேற்றப்பட்டதாகும். எனவே நாட்டு மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கிராமங்களில் உள்ள பெண்களை பெருமைப்படுத்துவதும் இந்த முன்முயற்சியின் மற்றொரு அம்சமாகும். பொது இடங்களில் கழிப்பது என்பது நிறுத்தப்பட வேண்டும். கிராமங்களில் கழிவறைகள் இருக்க வேண்டும். முதல் முறை செங்கோட்டையிலிருந்து உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது நமது நாட்டில் இது ஏன் நடக்கிறது என்று எனது உணர்வுகளை வெளியிட்டேன். இந்த குறுகிய காலத்தில் 2 கோடிக்கும் மேலான கழிப்பறைகள் உருவாக்கப்பட்டன. 70,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது இடங்களில் கழிப்பதிலிருந்து விடுபட்டுள்ளன. மக்களின் சாதாரண வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் மின்வசதி பெறாத 18,000 கிராமங்களுக்கு அடுத்த 1000 நாட்களுக்குள் மின்வசதி தரப்படும் என்று கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் அறிவித்தேன். 18ஆம் நூற்றாண்டில் வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். முடியாத ஒன்றை நிறைவேற்ற நாங்கள் உறுதியேற்றோம். 1000 நாட்கள் அல்ல; அதற்குப் பாதி நாட்களுக்குள்ளேயே அந்த 18,000 கிராமங்களில் 10,000 கிராமங்கள் மின்வசதி பெற்றன என்று மிகுந்த பெருமையுடன் தெரிவிக்கிறேன். இதன் விளைவாக, முதல் முறையாக தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து இந்த சுதந்திர தின விழாவை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த கிராம மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே, தில்லியில் இருந்து 3 மணி நேர தூரத்தில் உள்ள ஹத்ராஸ்-இல் நக்லா-ஃபடேலா என்ற கிராமத்திற்கு மின்வசதி கிடைக்க 70 ஆண்டுகள் ஆனது என்பதை தெரிந்து கொள்ளும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

எனவே, நாங்கள் செய்த வேலைகளை, வேலைக்கான கலாச்சாரத்தைப் பற்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். சாதாரண மனிதனின் நலனைக் கருதி எல். இ. டி. பல்புகள் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் ஒரு பல்பை கண்டுபிடித்தார்கள். எல். இ. டி. பல்பு மிகவும் விலைஅதிகமானது. ஒரு பல்பு ரூ 350 வரை விற்கக் கூடியது. இவ்வளவு விலை அதிகமான பல்பை யார் வாங்குவார்கள்? அரசு இதைப் பற்றி சிந்தித்தது. இந்தியாவின் வாழ்க்கையை எல்.இ.டி. பல்புகள் மாற்றும் எனில் , இந்தியாவின் சுற்றுச் சூழலை மாற்ற முடியும் எனில், பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனில், அந்தத் திசையில் ஒரு சில முயற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். அரசின் செயல்பாட்டில் அரசு தலையிடக் கூடாத ஒரு சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அது தலையிடவே செய்கிறது. தலையிட வேண்டிய விஷயங்களில் தலையிடுவதில்லை. இத்தகைய வேலைக்கான கலாச்சாரத்தை மாற்றவே நாங்கள் முயற்சிக்கிறோம். அரசின் இத்தகைய தலையீட்டின் விளைவாக, ரூ. 350 விலையுள்ள எல். இ. டி. பல்பு இப்போது ரூ. 50 விலைக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தை உங்களால் காண முடியும். இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என்றுதான் நான் கேட்க விரும்புகிறேன். இதுவரை 13 கோடி எல். இ. டி. பல்புகளை விநியோகம் செய்துள்ளோம். நமது அரசியல் மக்களுக்கானதாக மாறியுள்ளது. அதுவே பொருளாதார கொள்கைகளுக்கான அடையாளமாகவும் மாறியுள்ளது. ஒரு பல்பிற்கு ரூ 300 வீதம் மக்களுக்குக் கொடுத்திருந்தால், நான் ஒரு நல்ல பிரதமர். மக்களின் பாக்கெட்டை ரூ. 300 கொடுத்து நிரப்பியிருக்கிறேன் என்று நல்ல பெயர் வாங்கியிருப்பேன்.

ரூ. 50 க்கு எல்.இ.டி. பல்பை விநியோகித்ததன் மூலம் நீண்டகாலத்திற்கு சேமிக்க நாங்கள் மக்களுக்கு உதவியிருக்கிறோம். இதுவரை 13 கோடி எல் இ டி பல்புகள் விநியோகித்துள்ளோம். 77 கோடி பல்புகளை விநியோகிப்பது என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எல். இ. டி. பல்புகளையே பயன்படுத்துங்கள் என்று எனது நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அப்போதும் கூட ஆண்டுதோறும் நீங்கள் பணத்தைச் சேமிப்பீர்கள். மின்சக்தியை சேமிப்பதோடு, நாட்டின் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உதவுவீர்கள். 77கோடி எல். இ. டி. பல்புகளை விநியோகித்தோமெனில், 20,000 மெகாவாட் மதிப்புள்ள மின்சக்தியை இந்தியா சேமிக்கும். அதன் மூலம் நாடு ரூ. 1.25 லட்சம் கோடியை சேமிக்கும். சகோதர சகோதரிகளே, உங்கள் வீடுகளில் நீங்கள் எல். இ. டி. பல்பை பயன்படுத்தினால், நாடு ரூ. 1.25 லட்சம் கோடியை சேமிக்க முடியும். 20,000 மெகா வாட் மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் உலகளாவிய வெப்பமயமாதலுக்கு எதிராக நம்மால் போராட முடியும். சாதாரண மக்களின் உதவியுடன் நமது சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக நம்மால் பெருமளவிற்கு உதவ முடியும். அந்த வகையில் இந்தத் திசை வழியில் நாங்கள் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்.

முடியாத ஒன்றை எப்படி நிறைவேற்ற முடியும் என்பதை இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மின் உற்பத்தி மற்றும் பெட்ரோலியம் பொருட்களுக்காக நாம் மற்ற நாடுகளையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. நீண்ட நாட்களாகவே, ஒரு குறிப்பிட்ட விலையில் நீண்ட நாட்களுக்கு பெறுவதற்காக என நாம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தோம். 2024ஆம் ஆண்டு வரை கட்டார் நாட்டுடன் இயற்கை எரிவாயு தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. எனினும் எரிவாயுவின் விலையானது நமது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் அதிகமான ஒன்றாக இருக்கிறது. கட்டார் நாட்டுடன் நமக்கிருந்த நல்ல உறவின் விளைவாக இந்த ஒப்பந்தத்தை மீண்டும் விவாதிக்க முடிந்ததோடு அதன் மூலம் இந்தியாவின் கருவூலத்திற்கு ரூ. 20,000 கோடியை சேமித்திருக்கிறோம் என்று மிகுந்த மனநிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் நமது நல்ல உறவுகள், நமது அயலுறவுக் கொள்கையின் தன்மை ஆகியவற்றால்தான் இது சாத்தியமாயிற்று.

இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே சபஹார் துறைமுகம் மிக அத்தியாவசியமான ஒரு கண்ணியாக விளங்குகிறது. முந்தைய அரசுகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தன. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்தன. இன்று முடியாதது முடிக்கப்பட்டுள்ளது. அதுவும் எனக்குத் திருப்தியான வகையில். ஈரான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் கூட்டாக சபஹார் துறைமுகத்தை கட்ட செயல்பட்டு வருகின்றன.

எனதருமை சகோதர சகோதரிகளே நான் இப்போது சொல்லவிருப்பது சாதாரண மனிதனுடன் நேரடியாகத் தொடர்புடையது ஆகும். அதுதான் விலைவாசி உயர்வு. கடந்த அரசின் போது பணவீக்கம் 10 சதவீதத்தையும் தாண்டிச் சென்றது என்பது உண்மை. எமது தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, இந்த பணவீக்க விகிதத்தை 6 சதவீதத்திற்கு மேல் போகாமல் எங்களால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அதுமட்டுமல்ல. இப்போது ரிசர்வ் வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதன்படி, பணவீக்கத்தை 4 சதவீத அளவிற்கு அது கட்டுப்படுத்த வேண்டும். அதாவது மேலும் 2 சதவீதம் குறைவு. பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையேயான சமநிலை பற்றிய பேச்சுகளுக்கு நடுவே ரிசர்வ் வங்கியும் கூட முன்னேறிச் செல்ல மேலும் செயல்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் வறட்சி நிலவியது. இதனால் காய்கறிகளின் விலை உடனடியாக பாதிக்கப்பட்டது. பற்றாக்குறையும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஒரு சில பிரச்சனைகளும் இருந்தன. பருப்பு வகைகளின் உற்பத்தியும் கூட இந்த வறட்சியால பாதிக்கப்பட்டது. இதற்கு முன்பைப் போல் விலைவாசி உயர்வு அதிகரித்திருந்தால், சாதாரண மக்களுக்கு என்ன ஆகியிருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இருந்த போதிலும் எதிர்பார்ப்புகளையும் அரசு தொடர்ந்து கவனித்து வந்தது. எனதுநாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நியாயமானவையே. இந்த இலக்கை அடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஏழைகளின் உணவுத் தட்டில் விழும் உணவின் விலை அதிகரிக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும்ன் செய்வேன்.

எனதருமை சகோதர சகோதரிகளே, குரு கோவிந்த் சிங்ஜியின் 350வது பிறந்த தின கொண்டாட்டங்களுக்கு நாடு தயாரிப்புகளை செய்து வருகிறது. சீக்கிய குருக்களின் பாரம்பரியமான தியாக யுகத்தை இந்த நாட்டால் எப்படி மறக்க முடியும்? அதுவும் குரு கோவிந்த் சிங்ஜ் யின் 350வது பிறந்ததினத்தை கொண்டாடும்போது. அவர் மிகப் பொருத்தமான ஒன்றைச் சொல்லியிருந்தார். எப்போதுமே உதவி செய்யாத எந்த வேலையும் செய்யாத, கடினமான உழைப்பினால் வலுப்பெற்றதாக இல்லாத கரங்களை புனிதமானதாக என்னால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? இதுதான் குரு கோவிந்த் சிங் ஜியின் கருத்து. இன்று அவரது 350வது பிறந்த நாளைக் கொண்டாடும்போது நமது விவசாயியைத்தான் நான் நினைத்துக் கொள்கிறேன். அவரை விட புனிதமான கைகள் வேறு யாருக்கு இருக்க முடியும்? விவசாயியை விட தூய்மையான மனம் வேறு யாருக்கு இருக்க முடியும்? அது இல்லாமல், எந்த நோக்கம்தான் அதைவிடப் புனிதமானதாக இருக்கமுடியும்? நமது விவசாய சகோதரர்களை நான் வணங்குகிறேன். இரண்டு ஆண்டுகாலம் நாடு வறட்சியில் சிக்கித் தவித்தபோதிலும் நாட்டின் உணவு தானியக் கிடங்குகளை நிரப்ப இடையறாது முயற்சிகளை செய்தவர்களும் அவர்கள்தான்.

வறட்சி நிலவரம் மாறியுள்ளது. இந்தமுறை பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகமான மழை காரணமாக சில இடங்களில் இன்னல்களும் ஏற்பட்டன. பயறு வகைகள் கிடைப்பதில் நாடு பிரச்சினையை எதிர்நோக்கி உள்ள நிலையில் ஒரே சமயத்தில்“ பயறு வகை பயிர் செய்யும் நிலப்பரப்பை ஒன்றரை மடங்கு அதிகரித்த நமது விவசாயிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். முன்னர் விவசாயிகள் இதரப் பயிர்களுக்கு மாறியிருந்தனர். அப்போது சாதாரண மனிதனின் பயறுவகைத் தேவை அதிகரித்த்து. பயறு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை நாம் நிர்ணயித்து இருக்கிறோம். பயறு வகைப் பயிர்களுக்குப் போனசும் அறிவித்துள்ளோம். பயறு வகைகளை கொள்முதல் செய்வதற்கு மேலும் சிறந்த அமைப்புகளை உருவாக்கியுள்ளோம். எனவே விவசாயிகள் அதிக அளவு லாபம் பெற பயறு வகைகளை பயிர் செய்யுமாறு ஊக்கப்படுத்தியுள்ளோம்.

பணிப்பண்பாடு குறித்து நான் பேசும்போது விஷயங்களை தனித்தனியாக பிரித்துப் பார்க்கவில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளேன். அவற்றை ஒன்றாக ஒருங்கினைந்த முறையிலேயே நாம் பார்க்கிறோம். உதாரணமாக விவசாயத்தை எடுத்துக் கொண்டால் அதில் முழுச் சங்கிலி பணிகளும் பெரிய அளவு முடிவுகளை தரும் வகையில் பணிப்பண்பாட்டை மேம்படுத்தியுள்ளோம்.

தொடக்கத்தில் அன்னை பூமியின் ஆரோக்கியம் மண்வளம் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தினோம். மண்வள அட்டையை அறிமுகப்படுத்தினோம். பெரும ஊட்டச்சத்து, நுண்ம ஊட்டச்சத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு அவர்களது பண்ணை நிலம் பற்றி குறைபாடுகளையும் நிறைகளையும் விளக்கிக் கூறினோம். அவர்களது வயல்களில் எநதப் பயிரை பயிர் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்று எடுத்துரைத்தோம். மெல்ல மெல்ல விவசாயிகள் தங்களது மண்வள அட்டைக்கு ஏற்ப திட்டமிடத் தொடங்கினார்கள். அவர்களது செலவினம் சுமார் 25 சதவீதம் குறைந்துவிட்டதாகவம் உற்பத்தி 30 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் பல விவசாயிகள் என்னிடம் கூறியுள்ளனர். இது சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் இது பற்றி தகவல் பரவும் போது அது விரிவடையும். விவசாயிகளிடம் நிலம் உள்ளது. அவர்களுக்கு பாசன நீர் கிடைத்துவிட்டால் அவர்கள் அதிசயங்களை உருவாக்கி விடுவார்கள். இதுவே நமது நாட்டு விவசாயிகளின் பலம். ஆகவே நாம் நீர் நிர்வாகம், பாசனம் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு சொட்டு நீரையும் எவ்வாறு பயன்படுத்தவது, தண்ணீர் பயன்பாட்டை அதிகரிப்பது எப்படி, ஒவ்வொரு சொட்டுக்கும் கூடுதல் பயிர் , நுண்மபாசனம் போன்றவற்றை வலியுறுத்துகிறோம். 90 – க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்கள் முற்றுப் பெறாமலேயே உள்ளன. முதலில் இவற்றை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். விவசாயிகளின் இடுபொருள் செலவினத்தைக் குறைக்க சூரிய சக்தி பம்புகளை பயன்படுத்தம் பெரிய முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு மின்சாரம் தேவை. தண்ணீருக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. மினசாரம் அதிக செலவு பிடிக்கும் ஒரு இனம். சூரிய சக்தி பம்புகள் காரணமாக விவசாயிகள் இடுப்பொருள் செலவினம் குறையும், தொடர் செலவினமும் குறையும். அப்போது விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு மட்டுமின்றி இலவச மின்சாரத்தையும் சூரியசக்தி மூலம் பெறுகின்றனர். எனது விவசாயி தற்சார்பு உள்ளவராகவும் மகிழ்ச்சி கொண்டவராகவும் மாறி விடுவார். இதுவரை 77,000 சூரியசக்திப் பம்புகளை வெற்றிகரமாக விநியோகித்திருக்கிறோம்.

எனது விஞ்ஞானிகளையும் பாராட்ட விரும்புகிறேன். விவசாய நிலம், தண்ணீர், சூரியசக்தி பம்ப் ஆகியவற்றுடன் நல்ல விதைகளும் அவசியம். நமது விஞ்ஞானிகள் 131 –க்கும் அதிகமான புதிய வகை விதைகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கியுள்ளனர். இதனால் மகசூல் பெருகும், தரமும் உயரும். இந்த விஞ்ஞானிகளை நான் பாராட்டுகிறேன்.
விவசாயிகளுக்கு யூரியாவும் உரங்களும் தேவை. ஒரு காலத்தில் உரங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டன. உரங்களை வாங்கும்போது காவல்துறை தடியடிப்பிரயோகத்தையும் சந்திக்க வேண்டியிருந்த்து. உரம் இல்லாத காரணத்தால் பயிர் சேதமடைவதை மக்கள் காணவேண்டிய காலமும் இருந்த்து. இப்போது உரப்பற்றாக்குறை பழங்கால விஷயமாகிப்போனது. உரஉற்பத்தியைப் பெருக்குவதில் நாம் வெற்றி அடைந்துள்ளோம். இதன் காரணமாக விவசாயிகள் உரிய காலத்தில் உரத்தைப் பெறும் சாத்தியக் கூறுகள் உயர்ந்துள்ளன.

அதேபோல பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளோம். பண்ணை உற்பத்தி பாதுகாக்க நில உரிமையாளர்களுக்கு இது உதவும். எனது அருமை சகோதர்களே சகோதரிகளே விவசாயிகளுக்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் மிக அதிகமான இழப்பீட்டுக்கு உறுதி அளித்திருக்கிறோம். மேலும் கூடுதலாக 1.5 லட்சம் டன் விளைபொருள்களுக்கு கூடுதல் கிடங்குகள் வசதி ஏற்படுத்தியுள்ளோம்.

மதிப்புக் கூட்டுவதை மேற்கொள்ளும்போது நமது விவசாயிகள் நல்ல பயன் பெறுவார்கள். இதற்கென அரசு உணவுப் பதனீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அத்துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்துள்ளது. இதனால் வேளாண் அடிப்படைத் தொழில்கள் பயனடையும். மேலும் 2022 – ம் ஆண்டு வாக்கில் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்கும் எனது கனவு நிறைவேறவும் அது உதவும்.

எனது அருமை சகோதர்களே சகோதரிகளே பொதுமக்கள் நலன் என்ற பெயரில் அறிவுப்புகளையும், நடவடிக்கைகளையும் நாட்டின் அடுத்தடுத்த அரசுகள் மேற்கொண்டு அரசு கருவூலங்களைக் காலி செய்து தங்கள் நல்ல பெயரை அதிகரித்துக் கொள்வது வழக்கமாகவே நடைபெறும் ஒன்று. நான் இதனை நிறுத்தி விட்டு முழுமையான மாற்றங்களை வெளிப்படையாக்க் கொண்டுவரும் நடைமுறையை வலியுறுத்தி வருகிறேன். சீர்திருத்து, செயல்படு, மாற்றியமை ஆகியன எமது மந்திரங்களாக இருந்து அனைத்து பணிகளுக்கும் அனைத்து அளவுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனது அருமை சகோதர்களே சகோதரிகளே எனது அரசு நமது நாட்டின் நல்ல பெயரை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. எந்தக் கட்சியின் பெயரையும் அல்ல. நாட்டின் நல்ல பெயர் நிலைப்படுத்தப்பட்டால் தான் எதிர்காலச் சந்ததியினருக்கு அது உதவும். அதனால்தான் நாட்டின் நல்ல பெயரை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். அரசின் நல்ல பெயரை அல்ல.

களநிலையில் நாம் செய்து வரும் விரிவான பணிகள் குறித்து நீங்கள் கவனித்து இருப்பீர்கள் ரயில்வேக்களில் ஒரு நிலையில் ரயில்களில் உயிரிக் கழிவறைகளை அமைப்பது குறித்து பேசிவருவோம், மற்றொரு நிலையில் நாட்டில் புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து கனவு காணுவோம். ஒரு நிலையில் மண்வள அட்டை குறித்து பேசும் அதே சமயம் மற்றொரு நிலையில் செயற்கைகோள், விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேகமான வளர்ச்சி குறித்துப் பேசுவோம். நிமிர்ந்து நில் இந்தியா என்பதுபற்றி மட்டுமின்றி தொடங்கிடு இந்தியா திட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். அடையாளச் சின்னம் பதிலாக உண்மைப் பொருள் என்பதற்கு முக்கியத்துவம் தருகிறோம். தனித்தனியான மேம்பாடு என்பதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு அழுத்தம் தருகிறோம். உரிமைகளுக்குப் பதிலாக அதிகாரம் அளித்தலுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

எனது அருமை சகோதர்களே சகோதரிகளே அறிவிக்கப்பட்ட புதிய கொள்கைகள் மூலமாகவே அரசு அறியப்படுகிறது. தொடர்ச்சியான கொள்கைத் திட்டகங்களுக்கு அரசு உறுதி அளிக்கிறது. முந்தைய அரசின் திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால் புதிய அரசு அவற்றை சரிசெய்து தன்னலம் இன்றி அந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தற்பெருமைக்கும் பிடிவாதத்துக்கும் ஜனநாயகத்துக்கு இடம் இல்லை. இந்த வகையில் நமது அரசு தன்னடக்கம் உள்ளது, முந்தைய அரசின் கொள்கைகளுக்கும் திட்டகங்களுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளது. நாட்டு மேம்பாட்டுக்கும் நமது பணிப்பண்பாட்டின் ஒரு பகுதியாகவும் இவற்றை முன்னெடுத்தச் சென்றுள்ளது. இதனால் பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக வளரும் என்ற நோக்கத்தினால் இவ்வாறு செயல்படுகிறது. பிரகதி என்ற கணிணி அமைப்பு மூலம் திட்டங்களை நான் நேரடியாக கண்காணிக்கிறேன். 7.5 லட்சம் கோடி ரூ. மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 118 திட்டங்களில் மிகப்பல பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்க்க் கூடும். இத்தகைய திட்டங்களை நான் புதுப்பித்து அவை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இப்போது அரசு அதனைச் செய்து வருகிறது.

திட்டக் கண்கானிப்புக் குழுவை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இந்தக் குழுவிடம் நான் கேட்டுக் கொண்டிருப்பது 15 ஆண்டுகளுக்கு முன்னர், 20 ஆண்டுகளுக்கு முன்னர், 25 ஆண்டுகளுக்கு முன்னர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட திட்டங்களைக் கண்டறிய வேண்டும் என்பதே இந்த திட்டப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இது போன்ற 270 திட்டங்களை அடையாளங்கண்டுள்ளோம். 10 லட்சம் கோடி ரூ மதிப்பீட்டிலான இவற்றில் சில அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ஒரு சிலவற்றில் 1000 முதல் 2000 கோடி ரூ வரை செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு வீண் செலவே ஆகும். சகோதர்களே சகோதரிகளே திட்ட இடையூறுகள், திட்டக் காலதாமதம், பணவிரயம் ஆகியவை குற்றம் சார்ந்த உதாசீன நடவடிக்கைகளாகும். இந்த திட்டங்களை மீண்டும் செயல்படக் கூடியதாக லாபகரமானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். சகோதர்களே சகோதரிகளே ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவே 2 ஆண்டுகள் குறித்த நிலை இருந்து வந்தது. எந்த ரயில்பாதை திட்டமானாலும் அதற்கு மேல்நிலைப்பாலம் ஏற்படுத்த வேண்டும், நல்ல சாலைகள் இருபக்கங்களிலும் அமைக்க வேண்டும். ஆனால் ஒப்புதல் வழங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது. சகோதர்களே சகோதரிகளே இத்தகைய ஒப்புதல்கள் தற்போது 3 அல்லது 4 மாதங்களில் வழங்கப்படுகின்றன. அதிகபட்சம் 6 மாதகாலம் ஆகும். இவ்வளவு வேகத்தை நாம் அடைந்துள்ளோம்.

சகோரதர்களே, சகோதரிகளே நாம் எந்தப் பணியைச் செய்தாலும் நாம் எப்படித் திட்டமிட்டு இருந்தாலும் அரசு நல்ல ஆட்சிமுறைக்கானது என்ற அம்சத்தை நாம் சிந்தித்தாக வேண்டும். இதில் கடைசி நபர் வரை பலன் பெற வேண்டும். வரிசையில் கடைசியாக காத்திருப்பவருக்கும் நன்மைகள் போய்ச் சேரவேண்டும். சகோரதர்களே, சகோதரிகளே தெளிவான கொள்கை, தெளிவான நோக்கம், தூய்மையான நோக்கம் ஆகியவை இருந்தால்தான் முடிவு எடுப்பதற்குரிய வேகத்தை நீங்கள் பெறுகிறீர்கள், அப்போதுதான் எவ்வித கட்டுபாடும் இன்றி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

தெளிவான கொள்கைகள், தெளிவான நோக்கங்கள், தெளிவான முடிவுகள் ஆகியவற்றின் காரணமாகத்தான் நமது அரசு முன்னோக்கிச் செல்கிறது. கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

உத்தரப்பிரதேச செய்தித்தாள்களைப் பார்த்தீர்களானால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சமயமும் கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவை விவாத தலைப்பாக அமைந்திருக்கும். சர்க்கரை ஆலைகள் இதனைச் செய்வதில்லை, மாநில அரசு இதனைச் செய்வதில்லை, இது விவசாயிகளின் பிரச்சினை. நிலுவையிலுள்ள தொகை ஆயிரக்கணக்கான கோடிகள், ஆயிரக்கணக்கான கோடிகள். இதற்கென நாம் திட்டமிட்டோம். அதனைப் பின்னின்று செயல் படுத்தினோம். இலக்கு என்னவென்றால் பணம் கடைசியில் இருக்கும் விவசாயிக்கு போய்ச் சேர வேண்டும். பழைய பாக்கி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களாக இருந்தாலும், சகோரதர்களே, சகோதரிகளே பழைய பாக்கியில் 99.5 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது என்பதை மன நிறைவோடு சொல்லிக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இது நடந்திருக்கிறது. இந்த முறை எவ்வளவு கரும்பு சந்தைக்கு வந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறதோ அதில் 95 சதவீதம் விவசாயிகளுக்கு ரொக்கம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மன நிறைவுடன் சொல்ல முடியும். எஞ்சியுள்ள 5 சதவீதம் தொகையையும் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட்டு விடும்.

சகோரதர்களே, சகோதரிகளே ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புக்கள் வழங்கும் பணியை நாம் மேற்கொண்டுள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் எனது அன்னையர்கள் அடுப்படிப் புகையில் இருந்து விடுபட வேண்டும் என்ற திட்டத்தை தீவிரமாகத் தொடங்கியுள்ளோம். 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்புக்கள் வழங்கப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 50 லட்சம் குடும்பங்கள் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளோம், அதுவும் 100 நாட்களிலேயே இந்தப் பணியை 3 ஆண்டுகளுக்கு வெகு முன்னதாகவே முடித்து விடுவோம் என்பதை நீங்கள் அனுமானித்துக் கொள்ளலாம். கடைசி மனிதனுக்கும் நன்மைகள் போய்ச் சேரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

தகவல் தொழில்நுட்பம், வாட்ஸ்அப், குறுஞ்செய்திகள், ஆன்லைன், மின்னணு அஞ்சல் ஆகியவை காரணமாக நமது அஞ்சல் அலுவலகங்கள் சிறிது சிறிதாக தேவையற்றனவாக ஆகி வருகின்றன. அஞ்சல் அலுவலகங்கள்தான் நமது அடையாளங்களுக்கு ஒரு உதாரணம். நமது அஞ்சல் அலுவலகங்களை புத்துயிர் ஊட்டி புதுப்பித்து இருக்கிறோம். தற்போது அது ஏழைகள் சாதாரண மக்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதாரண மக்களின் அன்பைப் பெற்ற அரசு பிரதிநிதி ஒருவர் இருப்பாரேயானால் அவர் தபால்காரர்தான். ஒவ்வொருவரும் தபால்காரரை நேசிக்கிறார்கள், தபால்காரரும் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். எனினும் நான் அவர்கள் குறித்து ஒருபோதும் கவனம் செலுத்தியது இல்லை. நமது அஞ்சல் அலுவலகங்களை பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றுவதற்கு முடிவு எடுத்துள்ளோம். இத்தகைய பணம் செலுத்தும் வங்கிகளைத் தொடங்கியிருப்பது நாடெங்கும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரே சமயத்தில் வங்கிச் சேவை சங்கிலியை பரப்பிவிடும். ஜன்தான் கணக்கு நலன்களும் கிடைக்க உள்ளது, தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பை உறுதி அளிப்பு திட்டப் பணமும் ஆதார் அட்டைகள் மூலம் சாதாரண மனிதனின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு ஊழல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

சகோரதர்களே, சகோதரிகளே நமது நாட்டில் பொதுத்துறை தொழில் பிரிவுகள் பள்ளத்தில் விழுவதற்கென, தோற்றுப் போவதற்கென, மூடிவிடப்படுவதற்கென அல்லது விற்பனை செய்யப்படுவதற்கென உருவாக்கப்பட்டவை. அதுவே வரலாறு. ஆனால் நாம் புதிய கலாச்சாரம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம். இன்று முதல் முறையாக மோசமான பெயர்பெற்றிருந்த ஏர்இந்தியா நிறுவனம் சென்ற ஆண்டு செயல்முறை லாபத்தை பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது என்பதை மனநிறைவோடு என்னால் சொல்ல இயலும். உலகெங்கிலும் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வரும் இந்த சமயத்தில் பி.எஸ்.என். எல் நிறுவனம் பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தது. முதல் முறையாக பி.எஸ்.என். எல் நிறுவனம் செயல்முறை லாபம் ஈட்டுவதில் வெற்றி கண்டுள்ளது. இந்தியக் கப்பல் கழகம் எப்போதாகிலும் லாபம் ஈட்டுமா என்பதை எவரும் அறியாது இருந்தனர். இன்று இந்தியக் கப்பல் கழகம் லாபம் ஈட்டிவருகிறது. மின் உற்பத்தி நிலையம் அடுத்தவாரம் செயல்படுமா படாதா, அதற்கு வேண்டிய நிலக்கரி அங்குபோய்ச் சேருமா சேராதா என்பதே தெரியாமல் இருந்தது ஒரு காலம். நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மின்உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன என்பது பழைய செய்தி. இன்று நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் வாசலில் கிடைக்கிறது. அவற்றின் பலமாதத் தேவைகளுக்கான நிலக்கரி இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. சகோரதர்களே, சகோதரிகளே நாம் இதனைச் செய்துள்ளோம், நீங்கள் இதனைப் பார்த்துள்ளீர்கள்.

சில சமயங்களில் நமது நாட்டில் பெரிய அளவில் ஊழல் இருப்பது குறித்து விவாதங்கள் நடை பெறுவதுண்டு. அடிமட்ட நிலையில் உள்ள சாதாரண மனிதன் ஊழல் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன், அது பண விரயத்துக்கு வழி வகுக்கிறது. நாம் தற்போது அரசுத் திட்டங்களுடன் ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறோம். சகோரதர்களே, சகோதரிகளே ஒரு காலத்தில் விதவையர் ஓய்வூதியம் ஆகட்டும், கல்வி உதவித் தொகையாகட்டும், சிறுபான்மையினர் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களாகட்டும். அரசு கருவூலத்திலிருந்து பணம் செல்லும் பயனாளிகள் பட்டியலும் அனுப்பப்படும். ஆனால் நாம் ஆழமாக விசாரித்துப் பார்த்தோமானால் இந்தப் பட்டியலில் பிறக்காத நபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். அவர்களும் திட்டப் பயன்களை பெற்று வந்தனர். இடைத்தரகர்கள் பல லட்சக்கணக்கான ரூபாய்களை இத்திட்டங்களில் இருந்து பெற்று வந்தனர், இதனை எவரும் கவனிக்க இயலாது. நாம் இத்தகைய இடைத் தரகர்களை ஒழித்து விட்டோம். திட்டப் பயன் தொகைகளை நேரடியாகப் பயனாளிகள் கணக்குகளில் செலுத்துகிறோம். இந்தப் பணத்தை ஒருபோதும் பெறாத பலலட்சம் மக்கள் இருந்ததை கவனித்திருந்தோம். பல லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டு வந்தது. இதெல்லாம் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது, பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விடுபட்டுப் போன தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு மிச்சப்படுத்தப்பட்ட பணம் அவர்களது கணக்குகளுக்கு போய்ச் சேரவேண்டும். தங்கள் உரிமைகளுக்காக போராட விரும்புபவர்களுக்கு அதுபோய்ச் சேர வேண்டும். கடைசி மனிதனுக்கும் கொண்டு சேர்க்கும் திசையை நோக்கி நாம் உழைத்தோம், அதனை அடைந்தும் விட்டோம்.

நிலக்கரித்துறையில் வெளிப்படைத்தன்மையின் ஆற்றலையும் ஊழல் குறித்தும் அனைவரும் அறிந்துள்ளனர். நிலக்கரி ஏல நடைமுறையில் இன்று எந்தவொரு குற்றச் சாட்டும் இல்லை. வரும் நாட்களில் மாநிலங்கள் அதிகஅளவு நிலக்கரியை தோண்டி எடுக்கும்பொழுது அதிகஅளவு வருமானம் கிடைக்க உள்ளது.

அலைக்கற்றை ஏலம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட காலம் ஒன்று இருந்தது. நாம் அதனை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டோம். அதனை அடுத்து இப்போது நாட்டின் கருவூலங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு நாடு நலன் பெற்றது.

சகோரதர்களே, சகோதரிகளே உலகம் இன்று உலகளாவிய பொருளாதார சகாப்தத்தில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் மற்றவற்றுடன் இணைக்கப்பட்டு ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. மொத்த உலகமும் பொருளாதாரப் பிரச்சினைகளால் எதாவது ஒரு வகையில் இணைக்கப்பட்டே உள்ளன. எனினும் நாம் எவ்வளவு முன்னேறினாலும் உலகப் பொருளாதாரம், உலக செயல்களம் ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.மேலும் உலகத் தரங்களுக்கு ஏற்றவாறு நமது பொருட்களும், சேவைகளும் வெற்றிகரமாக அமைய வேண்டும். அப்போதுதான் நாம் பொருத்தமானவர்களாக ஆவோம், அப்போதுதான் நம்மால் பங்களிக்க முடியும். அப்படிச் செய்து வரும்போது ஒரு சமயத்தில் நாம் உலகப்ப பொருளாதாரத்தின் முன்னோடியாக இருப்போம். ஆகையால் நாம் எந்தச் சமயத்திலும் தயாராக இருக்க வேண்டும், உலகத்தரத்துக்கு ஏற்ப நம்மை நேர்படுத்திக் கொள்ள வேண்டும். சமீபகாலத்தில் உலக வங்கி, சர்வதேசப் பணநிதியம், உலகப் பொருளாதார அமைப்பு, வசதி தரப்படுத்தும் அமைப்புக்கள் போன்ற உலக முகமைகள் அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியைப் புகழ்ந்து வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சட்டச்சீர்திருத்தம், முறைப்படியான சீர்திருத்தங்கள், அணுகுமுறை மாற்றங்கள் ஆகிய துறைகளில் இந்தியா மேற்கொண்டுள்ள அடுத்தடுத்த முடிவுகளை உலகம் உண்ணிப்பாக கவனித்து வருகிறது. வர்த்தகம் புரிதலை எளிமையாக்குதல் துறையில் நமது தர நிலையை வெகு விரைவாக மேம்படுத்தி வருகிறோம். அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா மிகவும் உகந்த நாடாக மாறிவிட்டது. வளர்ச்சி வீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் உலகப் பெரிய பொருளாதாரங்களைப் பின்னுக்குத் தள்ளி நாம் முன்னேறி வருகிறோம்.

எனது அருமை சகோரதர்களே, சகோதரிகளே அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கம் என்பதற்கான முன்னறிவிப்பை ஐ. நா. அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் மதிப்பீட்டின்படி உலகப் பொருளாதார வரிசையில் தற்போது 10 – வது இடத்தில் உள்ள இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் 3 –வது இடத்தை அடையும். எனது அருமை சகோரதர்களே, சகோதரிகளே உலகத் தரங்கள் சரக்குப் போக்குவரத்து ஆதரவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாட்டின் செயல்பாடு நன்கு வளர்ச்சி அடைந்த வளமான நாடுகளின் செயல்பாடுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது. உலகப் பொருளாதார அமைப்பு இந்தியா தொடர்பான சரக்குப் போக்குவரத்து ஆதரவு மற்றும் அடிப்படை வசதிகளை ஆராய்ந்து இந்தியா விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் தரக்குறியீட்டில் 19 படிகள் மேலே உயரந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனது அருமை சகோரதர்களே, சகோதரிகளே உலக அளவில் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் துடிப்புள்ளது. எதிர்பார்க்கும் வழிகளில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பது. ஜி.எஸ்.டி. சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது நமது பொருளாதாரத்திற்கு மேலும் வலுவூட்டியுள்ளது, இதனைச் சாத்தியமாக்கிய அனைத்து அரசியல் கட்சிகளும் பாராட்டத் தக்கவை.

எனது அருமை சகோரதர்களே, சகோதரிகளே செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்துதான் நான் பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் என்பது குறித்துப் பேசினேன். நாம் துண்டு துண்டான அடிப்படையில் பணியாற்றுவதில்லை. நமது கொள்கை அமலாக்கத்துக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டிருக்கிறோம். பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் திட்டம் வெற்றிபெற சமுதாயத்தின் ஒத்துழைப்பு எனக்கு அவசியம். ஒவ்வொரு பெற்றோரும் இது குறித்து மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நமது பெண் குழந்தைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், பாதுகாப்பு அளிக்க வேண்டும், அரசுக் கொள்கைகளின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களை நாம் ஒன்று சேர்த்துள்ளோம். நமது புதல்வியர் பெரியவர்களாக ஆகும் பொழுது இத்திட்டம் அவர்களுக்கு உதவும். நமது ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மகளிருக்கு மிக அதிகமான நன்மைகள் தரும் வகையில் உருவாக்கப்பட்டன. இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டம் நமது அன்னையர்கள் மற்றும் சகோதரிகளைப் பொருளாதார, சுகாதார அதிகாரம் பெற்றவர்களாக மாற்றி அமைக்கிறது. இந்த 2 நிலைகளிலும் மகளிர் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றி அவர்களுக்கு கல்வியும் அளித்தால் அதுவே மகளிருக்கான உண்மையான அதிகாரமளித்தல் ஆகும். பெண் ஒருவர் கல்வி பெற்றவராக ஆரோக்கியம் உள்ளவராக பொருளாதார சுதந்திரம் உள்ளவராக இருந்தால் அவர் ஏழ்மையை எதிர்த்து போராடும் திறன் பெறுவார். ஆகையால் தான் சுகாதாரம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை நோக்கி மகளிர் அதிகாரம் பெரும் வகையில் நாம் உழைத்து வருகிறோம். முத்ரா வங்கித் திட்டத்தை நாம் அறிமுகம் செய்துள்ளோம். இந்தத் திட்டத்தினால் மூன்றரைக் கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களில் மிகப் பலர் வங்கி வாசலுக்கு முதல்முறையாக வருபவர்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் எஸ்.சி எஸ்.டி மற்றம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். முத்ரா திட்டத்தின் கீழ் 80 சதவீதம் கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்க எப்படிப் பங்களிக்க உள்ளனர் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

சகோரதர்களே, சகோதரிகளே நமது பயணத்தின் தற்போதைய பங்காளிகளான நமது அன்னையருக்கும் சகோதரிகளுக்கும் பேறுகாலத்திற்குப் பின்னர் விடுமுறை தேவை என சென்ற வாரம் முடிவு செய்தோம். முன்னதாக அவர்களுக்கு குறைந்த தினங்களுக்குத்தான பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டது. தற்போது இந்த விடுப்பினை 26 வார காலமாக உயர்த்தி உள்ளோம். இதனை அடுத்து அன்னையர் குழந்தைகளை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும்.

நெசவாளர்கள், ஜவுளித்துறையில் நூல் மற்றம் நூல்கற்றை தயாரிக்கம் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.100 கிடைத்து வந்தது. தற்போது இந்தத் தொகையை ரூ 190 ஆக உயர்த்தியுள்ளோம். இதனால் நூல் நூற்கும் எனது அன்னையரும் சகோதரிகளும் அதிகாரம் பெறுவார்கள். பட்டு நெசவுப்பணியில் ஈடுபட்டுள்ள அன்னையர், சகோதரிகள் நெசவாளர்களுக்கு அவர்களது உற்பத்திப் பொருள்களின் விலையை மீட்டருக்கு ரூ. 50 உயர்த்தியுள்ளோம். உயர்த்தப்பட்ட இந்தத் தொகை வர்த்தகருக்கோ இடைத்தரகருக்கோ போகாது. அதற்குப் பதிலாக பட்டு நெசவுப்பணியில் ஈடுபட்டிருந்த நெசவாளர் வங்கிக் கணக்குக்குப் போகும். ஆதார் மூலமாக அவர்களது கணக்குகளில் இந்த மீட்டருக்கு ரூ 50 தொகை செலுத்தப்படும். இதனால் நெசவாளர் அதிகாரம் பெறுகின்றனர். இந்தத் திசை நோக்கி இத்திட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன் தாக்கம் வெளிப்படையாக தெரிகிறது.

எனது நாட்டு மக்களே நாம் ரயிலை, அஞ்சல் அலுவலகத்தை பார்க்கும் போது இந்தியாவின் ஒற்றுமையையும் சேர்த்தே பார்க்கிறோம். இந்தியாவை ஒருமைப்படுத்த மேலும் மேலும் முயற்சிகளை எடுத்து நமது அமைப்புகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளோம். இதற்கென நாம் விவசாயிகளுக்கான மண்டி ஈ-நாம் என்ற சந்தைத் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இன்று விவசாயி தனது உற்பத்திப் பொருளை நாட்டில் எந்த இடத்துக்கும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். இன்று அவர் தனது உற்பத்திப் பொருட்களை தனது வயலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு அதாவது தனது கடின உழைப்புக்கு கட்டுபடியாகாத விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தற்போது நாட்டில் ஈ-நாம் என்ற வலைதளத்தின் மூலம் சந்தைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி மூலமான வரிவிதிப்பு சமத்துவத்தை கட்டாயம் கொண்டுவரும். மேலும் நாட்டின் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் பொதுவான அமைப்பு ஒன்றையும் அது கொண்டுவரும்.

முன்னாளில் ஏராளமான அளவு மின்சாரம் இருந்தாலும் பயன்படுத்துவோர் குறைவாக இருந்தனர். அதே சமயம் மின்சார பற்றாக்குறை மக்களை இருட்டில் வாழச் செய்தது, தொழிற்சாலைகளை மூடச் செய்தது. மின்சார விநியோகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர நாம் ஒரு நாடு – ஒரு மின்கட்டமைப்பு – ஒரு கட்டணமுறை என்பவற்றை வெற்றிகரமாக அதுவும் மிக்க் குறிகிய காலத்தில் தொடங்கியுள்ளோம். முன்னதாக கோடைக்காலத்தில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. தற்போது நாம் தெலுங்கானாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது ரூ 10 ஆக இருந்த மின்கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் பத்துப் பைசாவாக இருந்தது. இத்தகைய ஒரே கட்டணம் நாட்டை இணைப்பதில் வெற்றி காண்கிறது.

நாட்டின் தொழிலாளர்கள் ஒரு இடத்தில் பணிபுரிந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேறு பணிக்குச் செல்கிறார்கள். அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட உழியர் வருங்கால வைப்பு நிதி அவர் மாறிச் செல்லும் இடத்துக்கு மாற்றப்படாத நிலை இருந்தது. நான் இந்த அரசுக்கு பொறுப்பேற்றபோது எனது பணியாளர்களின் வருங்கால் வைப்புநிதி தொகை ரூ. 27,000 கோடி இருப்பில் இருந்தது என்பதையும் இந்தப் பணம் குறித்த அமைப்பு முறை எதும் இல்லாத்தால் இதனைக் கேட்போர் எவரும் இல்லை என்பதையும் அறிய ஆச்சரியப்படுவீர்கள்.

இப்பிரச்சினையைத் தீர்க்க நமது பணியாளர்களுக்கு நாம் யுனிவர்சல் கணக்கு எண் வழங்கியுள்ளோம். தற்போது பணியாளர் எங்கு சென்றாலும் அவரது வருங்கால வைப்புநிதி அந்த இடத்துக்கு மாற்றித் தரப்படும். பணியாளர் ஓய்வு பெரும் போது அவருக்கே இந்தப் பணம் வழங்கப்படும், இது இனிமேல் அரசு கருவூலங்களில் தங்கி இருக்காது. நாம் இதனைச் சாதித்திருக்கிறோம்.

பாரத் மாலா, சேதுபாரதம், பாரத் நெட் போன்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் அவற்றை வலுப்படுத்தியுள்ளோம். இந்த முயற்சி இந்தியாவை ஒருமைப்படுத்துவதையும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இந்த திசையை நோக்கி நாம் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

சகோரதர்களே, சகோதரிகளே இந்த ஆண்டு பல வழிகளில் முக்கியமானதாகும். நாடு தென்னிந்திய ஞானி ஸ்ரீமான் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் குருவான ஸ்ரீமத் ராஜ்சந்திராவின் 150 – வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீகுரு கோவிந் சிங் – ன் 350 – வது ஆண்டுவிழாவையும் நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயாவின் நூற்றாண்டையும் நாடு அனுசரித்து வருகிறது. இன்று நாம் ராமானுஜரை நினைவு கூறும் தருணத்தில் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். சமுதாய பதற்றத்தை தற்போது கண்டுவரும் நாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ராமானுஜர் நாட்டுக்கு என்ன செய்தியை விட்டுச் சென்றார் என பார்க்க வேண்டும். கடவுளின் அனைத்துப் பக்தர்களும் எந்தவிதப் பாகுபாட்டு உணர்வும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சிந்தனையும் இன்றி சேவை செய்யவேண்டும் என்று ராமானுஜர் உபதேசம் செய்தார். அனைவருக்கும் மரியாதை செலுத்த வேண்டும், வயது, சாதி காரணமாக எவரையும் ஏளனம் செய்யக் கூடாது என்றார் அவர். காந்திஜி சொன்னது, அம்பேத்கர் சொன்னது, ராமானுஜர் சொன்னது, புத்தபிரான் சொன்னது நமது புனித நூல்கள், ஆச்சாரியார்கள், ஆசிரியர்கள், ஞானிகள் சொன்னது அனைத்தும் சமுதாய ஒற்றுமையே ஆகும். சமுதாயம் உடைந்தால் நாடு சிதைவடைந்து தாழ்ந்தது உயர்ந்தது எனப் பிரிந்து, தீண்டாமை காரணமாகப் பிரிந்து அதனால் ஏற்படும் சூழ்நிலையில் சகோரதர்களே, சகோதரிகளே சமுதாயம் நிலைத்திருக்க முடியாது. இவைகள் தீய சக்திகள், பலநூற்றாண்டுகள் பழமையான தீய சக்திகள். ஆனால் பழமையான தீய சக்திகளை அகற்ற மிகத்தீவிரமான செயல்பாடுகளும் உணர்வுகளும் அவசியம். இது அவ்வப்போது நடைபெறுகிறது, தொடர்ந்து நடைபெறக் கூடும். பிரச்சினையை இத்தகைய நடவடிக்கை மூலம் தீர்ப்பது கடினம். இது 125 கோடி நாட்டு மக்களின் பொறுப்பு, அரசு மற்றும் சமுதாயத்தின் பொறுப்பு. மோதல் நிலவரத்திலிருந்து விடுபட அனைவரும் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்.

சகோரதர்களே, சகோதரிகளே சமுதாய தீமைகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். சமுதாயத் தீமைகளுக்கு அப்பாற்பட்டு நாம் உயர வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் முன்னேறி அதன் மூலம் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும். வலுவான சமுதாயத்தை உருவாக்காமல் வலுவான இந்தியாவை உருவாக்க முடியாது. பொருளாதார மேம்பாடு மட்டும் வலுவான இந்தியாவுக்கு உறுதியளிக்க முடியாது. வலுவான சமுதாயம்தான் வலுவான இந்தியாவுக்கு உறுதியளிக்க முடியும். வலுவான சமுதாயம் சமூக நீதியை உறுதி செய்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது. வலுவான சமுதாயம் சமூகநிதி என்ற அடித்தளத்தில் உருவாக்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது நமது கடமைப் பொறுப்பு. தலித், பாதிக்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர், பழங்குடியினர், கிராமவாசி, அல்லது நகரவாசி, கல்வி பெற்றவர், எழுத்தறிவற்றவர், சிறியவர் அல்லது பெரியவர் – அனைத்து 125 கோடி நாட்டு மக்களும் நமது குடும்பத்தினர். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும், இந்த திசையில் மட்டுமே நாம் பணியாற்ற வேண்டும்.

சகோரதர்களே, சகோதரிகளே இன்றைய நிலையில் உலகின் கவனம் இந்தியா இளம் வயதுள்ள நாடு என்ற உண்மையை நோக்கியதாக உள்ளது. 35 வயதுக்கும் குறைவான 80 கோடிப் பேர், அதாவது 65 சதவீதம் பேர், உள்ள ஒரு நாடு, இத்தகைய இளம் சக்தியைக் கொண்டு சாதிக்க இயலாது என்ன உள்ளது? எனவே சகோரதர்களே, சகோதரிகளே இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், இதுதான் நமது இந்தக் காலத்தின் தேவையாகும்.

இன்று பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயாவின் பிறந்த நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் கடைசி மனிதனின் நலன் குறித்த அவரது கருத்துக்களை நாம் நினைவு கூற வேண்டும். மகாத்மா காந்தியின் கருத்தும். பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயாவின் அரசியல் தத்துவத்தின் மையக் கருத்து கடைசி மனிதனின் நலன் என்பதாகும். இதன்படி அவர் ஒவ்வொரு இளைஞனும் கல்வி பெற வேண்டும், திறன்கள் பெறவேண்டும், தனது கனவுகளை நனவாக்கும் வாய்ப்புக்கள் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயாவின் கனவை நிறைவேற்றும் வகையில் நமது 80 கோடி இளைஞர்களின் உள்ளக் கணக்குகளை நிறைவு செய்யும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்த வகையில் பல புதிய சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, நாடு மேலும் வாகனங்களை உருவாக்கி உள்ளது. மேலும் அனேக மென்பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 50 –க்கும் மேற்பட்ட புதிய கைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. நாம் 2 கோடி கழிவுறைகளை உருவாக்கினால் அதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தேவையான சிமிண்ட்டும் இரும்புக் கம்பிகளும் எங்கிருந்தாவது வந்திருக்கும். அதற்கான மர வேலைகள் எங்கிருந்தாவது செய்யப்பட்டிருக்கும். இத்தகைய பணிகளின் அளவு பெருகும்போது வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும். நாம் இந்த திசையை நோக்கியே செயல்பட்டு வருகிறோம்.

நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் வழங்குவதற்காக திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மக்கள் இயக்கமாக செயல்படுத்தி வருகிறோம். சட்டங்களைத் திருத்தி அமைத்துள்ளோம். சிறிய நடவடிக்கையாகத் தூண்டினாலும் இது சிறு கடை வியாபாரிகளுக்கு பயன் அளிக்கக் கூடியது. மாதிரிக் கடைகள் நிறுவனங்கள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பெரிய அங்காடி வளாகங்களுக்கு அனுமதிக்கப்படுவது போல சிறிய கடை வியாபாரிகளுக்கு அவற்றை 365 நாட்களும் நள்ளிரவு வரை திறந்து வைத்திருக்க வாய்ப்பளிக்கும்படி மாநிலங்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம். சிறிய கடை வியாபாரி மாலையிலேயே அதனை ஏன் மூடி விட வேண்டும். அவர்கள் தங்கள் கடைகளை நள்ளிரவு வரை அனைத்து நாட்களிலும் திறந்து வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். நமது சகோதரிகள் இரவு நேரங்களில் பணிபுரிய வாய்ப்புகளை ஏன் வழங்கக் கூடாது? நமது சகோதரிகளும் இரவு நேரங்களில் பணிபுரியும் வகையில் சட்ட அனுமதிகளைக் கொண்டு வந்துள்ளோம். அவர்களது பாதுகாப்பையும் பத்திரத்தையும் நாம் உறுதி செய்ய வேண்டும், ஆனால் அவர்களுக்கு பணிபரிய வாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள்தான் வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த திசையை நோக்கி நாம் உழைத்து வருகிறோம்.

எனது அருமை சகோதரர்களே சகோதரிகளே பிரச்சினைகளை தவிர்த்து விடுவதில் நமக்கு நம்பிக்கை இல்லை. எனது அரசுக்கும் நம்பிக்கை இல்லை. நாம் தாமதப்படுத்தவதில்லை. ஆனால் சவால்களை எதிர்கொள்கிறோம். எதையாவது செய்ய வேண்டுமானால் பிரச்சினைகளை நேருக்குநேர் எதிர்கொள்ள வேண்டும். நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், எல்லைப் பகுதிகளில் நமது வீரர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் கடமையில் உள்ளனர். சிலர் பதுங்குகுழிகளில் அமர்ந்துள்ளனர், எல்லைகளில் பணிபரிவதால் சிலர் ரக்ஷாபந்தனுக்காக தங்களது சகோதரிகளைக் கூட சந்திக்க இயலுவதில்லை. மிகப் பலர் வீரர்கள் பாதுகாப்பு படைகளில் பணியாற்றுகின்றனர். விடுதலைக்குப் பின்னர் நமது காவல் துறையினர் 33,000 பேர் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மறக்கலாமா? நமது அமைதியான வாழ்க்கைக்கு காரணமாக உள்ள இவர்களை நாம் எவ்வாறு மறக்க முடியும். எனவேதான இந்த தருணத்தில் அவர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். ஒரு பதவி நிலைக்கு ஒரு ஓய்வூதியம் கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையிலிருந்தது. இந்தச் சவாலை கையிலெடுத்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டோம். ஒரு பதவி நிலைக்கு ஒரு ஓய்வூதியம் பிரச்சினை தீர்க்கப்பட்டு தீர்வு அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு இந்திய வீரனும் மகிழ்ச்சி அடைந்தான்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் தொடர்பான கோப்புகளை வெளிப்படுத்த வேண்டுமென நமது மக்கள் விரும்பினார்கள். நீண்டகாலமாக தவிர்க்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினையை எனது அரசு கையிலெடுத்தது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோப்புகளின் அடக்கத்தை நாம் வெளியிட்டோம். நேதாஜி சுபாஷின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு கோப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டன. இந்த நடவடிக்கை இன்னும் தொடருகிறது. நேதாஜி தொடர்பான கோப்புகளை பொதுமக்களுக்கு வெளியிடுமாறு இதர நாடுகளையும் நான் வலியுறுத்தியுள்ளேன். சுபாஷ் சந்திர போஷ் குறித்தும் நாட்டின் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு. இந்த திசையில் நாங்கள் பணியாற்றி உள்ளோம்.
நாடு பிரிவினை செய்யப்பட்ட நாட்களிலிருந்து வங்காளதேசத்துடன் எல்லைப் பிரச்சினை இருந்து வந்தது. பல 10 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்ந்தன. தற்போது அனைத்து அரசியல் கட்சிகளின் உதவி, ஒத்துழைப்புடன் பங்களாதேஷ் உடனான எல்லைப் பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டுள்ளோம். இதற்கான வலுவை நமது அரசியல் சட்டம் நமக்கு வழங்கியது.

எனது அருமை சகோதரர்களே சகோதரிகளே நடுத்தர வகுப்பு மக்கள் வீடு கட்டவேண்டும், அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்க வேண்டும் என கனவு காண்கின்றனர். இத்தகையோரை ஈர்க்க கட்டுமான நிறுவனங்கள் அழகாக அச்சடிக்கப்பட்ட சிறு நூல்களை அவர்களிடம் வழங்குகின்றன. நடுத்தர வகுப்பு மக்களிடையே போதுமான தொழில்நுட்பு அறிவு இல்லை எனினும் அவர்கள் கட்டுமான நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். எனினும் இந்த நிறுவனங்கள் உரிய நேரத்தில் வீடு கட்டித் தருவதில்லை. நடுத்தர வகுப்பினர் தங்களது வாழ்நாள் சேமிப்புகளை ஒரே நேர முதலீடாகச் செய்து மூலதனமாக்குகின்றனர். இத்தகைய வாங்குவோர் நலன்களைப் பாதுகாக்க கட்டுமான நிறுவனங்களை வரன்முறைப்படுத்த நிலம் கட்டுமானங்கள் மசோதாவை கொண்டு வந்தோம். இந்த நடவடிக்கையால் நடுத்தர வகுப்பு வீடு வாங்குவோர் பயன்பெறுவார்கள்.

எனது அருமை சகோதரர்களே சகோதரிகளே நான் முன்னே குறிப்பிட்டது போல ஸ்ரீமத் ராஜ் சந்திரா ஜி –யின் 150 ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது. ஸ்ரீமத் ராஜ் சந்திரா ஜி –யை மகாத்மா காந்தியடிகள் தமது குருவாக பாவித்தார். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ராஜ் சந்திரா ஜி – யுடன் கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருந்தார். இக் கடிதங்களில் ஒன்றில் ஸ்ரீமத் ராஜ் சந்திரா ஜி காந்திஜியுடன் வன்முறை, அஹிம்சை முறை ஆகியன குறித்து விவாதித்துள்ளார். வன்முறை இருக்கும் காரணத்தினால் அகிம்சை முறை ஏற்பட்டது என்று ராஜ் சந்திரா ஜி வாதிட்டார். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது என்னவென்றால் எது நமக்கு முக்கியமான கொள்கை அல்லது எது மனிதகுல நன்மைக்கு பயன்படுத்தக் கூடியது என்பதுவேயாகும்.

அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே நமது நாட்டில் வன்முறை, அகிம்சை குறித்த விவாதம் மிகவம் இயற்கையானது. மனிதாபிமானம் நமது நரம்புகளில் ஊறியது. நாம் மாபெரும் பண்பாட்டு பாரம்பரியம் கொண்டவர்கள். இந்தநாடு முழு அளவு பலதரப்புத் தன்மை கொண்டது. அன்னை இந்தியாவின் இந்த மலர்க்கொத்து பல்வேறு நறுமனம் கொண்டது, பலவண்ணங்கள் கொண்டது. பல கனவுகளைக் கொண்டது. சகோதரர்களே சகோதரிகளே வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது மாபெரும் சக்தி. ஒற்றுமை மந்திரம் நமது வேர்களுடன் தொடர்பு கொண்டது. சகோதரர்களே சகோதரிகளே 100 க்கும் மேற்பட்ட மொழிகள் கொண்ட ஒரு நாட்டில் 100 –க் கணக்கான துணை மொழிகள், என்னிலடங்கா ஆடை அணிகலன்கள், வாழ்க்கை முறைகள் ஆகியன கொண்ட இந்தநாடு பல நூற்றாண்டகளாக ஒன்றுபட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நமது பண்பாட்டுப் பாரம்பரியமாகும். அடுத்தவர்களுக்கு மரியாதை அளிப்பது எவ்வாறு என்பது நமக்குத் தெரியும், விருந்தோம்பல் நாம் நன்கறிவோம். முன்னேற்றப்பாதையில் அனைவரையும் கொண்டு செல்வதையும் நாம் நன்கறிவோம். இந்தப் பாரம்பரியத்தை நாம் எல்லாக் காலத்திலும் பின்பற்றி வருகிறோம், எனவே நமது நாட்டில் வன்முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் இடம் ஏதும் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றால், நமது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் வன்முறைப்பாதை ஒரு போதும் வெற்றி பெறாது.

இன்று வனப் பகுதிகளில் மாவோயிசம் என்ற பெயரிலும், எல்லைப் பகுதிகளில் தீவிரவாதம் என்ற பெயரிலும், மலைப்பகுதிகளில் பயங்கரவாதம் என்ற பெயரிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அன்னை இந்தியா தொடர்ச்சியாக ரத்தத்தில் மூழ்கியிருக்கிறாள். எனினும் பயங்கரவாத பாதையைப் பின்பற்றுவோர் எதையும் சாதிக்கவில்லை. இத்தகைய இளைஞர்களுக்கு நான் சொல்லவிரும்புவது இந்த நாடு பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. பயங்கரவாதம் அல்லது மாவோயிசத்துக்கு ஒரு போதும் தலை வணங்காது என்பதுதான். இத்தகைய இளைஞர்களுக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது, அவர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு தங்களது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். வன்முறை வழி எப்போதும் எவருக்கும் உதவியதில்லை என்பதால் தேசத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுமாறும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே வெளியுறவுக் கொள்கை குறித்து நான் பேசும்போது மிகவிரிவான விளக்கங்களை அளிக்க நான் விரும்பவில்லை. இந்த அரசு பதவியேற்ற தினத்தன்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். நமது அண்டை நாடுகள் எல்லாவற்றுக்கும் பொதுப் பிரச்சினையும் பொதுச் சவாலாகவும் இருப்பது ஏழ்மையே என்பதை நமது தெளிவான செய்தியாக அறிவித்திருந்தோம். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏழ்மையை எதிர்த்து போராட வேண்டும். ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடுவதால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் நாம் ஏழ்மைக்கு எதிராகப் போரிட உறுதியேற்றால் துயரத்திலிருந்து விடுபட்டு வளத்தை நோக்கி நடைபோடுவொம். ஆகவே அண்டை நாடுகள் அனைத்திற்கும் ஏழ்மைக்கெதிரான முயற்சிகளில் பங்கேற்க நான் அழைப்பு விடுக்கிறேன். இந்திய மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிப்பதை விடப் பெரிய விடுதலை இருக்க முடியாது. அதேபோல அனைத்து நாடுகளின் மக்களையும் ஏழ்மையிலிருந்து விடுவிப்பதே உண்மையான சுதந்திரமாகும். அண்டை நாடுகள் ஏழ்மையிலிருந்து விடுதலை பெற்றால் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடையும்.

சகோதரர்களே சகோதரிகளே உலகின் முன்பாக 2 படங்களை முன்வைக்க விரும்புகிறேன். மனிதாபிமான அடிப்படையில் பழக்கப்பட்ட மக்களுக்கும் பயங்கரவாத்த்தை பரிசு கொடுத்துப் பாராட்டும் மக்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்டும் படங்கள் அவை. உலகத்திற்கும் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டோருக்கம் நான் சொல்ல விரும்புவது 2 சம்பவங்கள் அடிப்படையிலாவது பெஷாவர் நகரில் அப்பாவி பள்ளிக் குழந்தைகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று. பெஷாவார் நகரில் ஏற்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி சிறுவர் சிறுமியர் கொல்லப்பட்டனர். கல்விக் கோயில் ரத்தக் களரியானது. நாடாளுமன்றவாதிகள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. இந்திய பள்ளிக் குழந்தைகள் விம்மி அழுதனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் மரணத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்களால் அழுகையை நிறுத்த முடியவில்லை. கொல்லப்பட்ட பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் நமக்கு வேதனையையும் வருத்தத்தையும் அளித்தன. இது நமது பண்பாடு. மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்த பண்பாடு. மற்றொரு பக்கத்தில் அங்கே பயங்கரவாதம் போற்றப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்படும்போது அங்கே கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இத்தகைய வாழ்க்கை என்ன வகையான வாழ்க்கை? பயங்கரவாதத்தால் ஈர்க்கப்படுவதன் மூலம் அரசுகள் எவ்வாறு அமைகின்றன. இந்த வித்தியாசத்தை உலகம் எளிதாகப் புரிந்து கொள்ளும். இதுவே எனக்குப் போதுமானது.

இன்று செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து சில மக்களுக்கு எனது வாழ்த்துக்களையம் நன்றிகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த சில நாட்களில் பலுசிஸ்தான், கில்கிட், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் ஆகியவற்றின் மக்கள் எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர். நன்றியுடன் தனது நல்வாழ்த்துக்களையும் எனக்குத் தெரிவித்துள்ளனர். தொலைதூரத்தில் உள்ள மக்கள், நான் பார்த்தே இராத மக்கள் 125 கோடி மக்களுக்கும் அவர்களின் பிரதமருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இது நமது நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம்.

சகோதரர்களே சகோதரிகளே இன்று நாம் 70 ஆண்டுகள் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவு கூறுகிறோம். இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியத்தை 20 சதவீதம் உயர்த்தித்தர அரசு இன்று முடிவு செய்துள்ளது. இதன்படி முன்னதாக ரூ. 25,000 பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் கிரி ரூ. 30,000 பெறுவார். இந்த விடுதலைப் பேராட்ட வீரர்கள் செய்த தியாகத்திற்கு எனது தரப்பிலிருந்து அளிக்கப்படும் சிறிய காணிக்கையாகும்.

சகோதரர்களே சகோதரிகளே நாம் நமது விடுதலைப் பேராட்ட வரலாற்றைப் பற்றிப் பேசும்போது ஒரு சிலரைப் பற்றி மிக விவரமாகப் பேசப்படுகிறது. சில சமயம் தேவைக்கு அதிகமாகவும் பேசப்படுகிறது. ஆனால் நமது விடுதலைப் போராட்டத்தில் வனப்பகுதிகளில் வாழும் நமது பழங்குடியினர் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர்கள் காடுகளில் வசித்தனர். நாம் பிர்சா முண்டா பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 1857 – க்குப் பிறகு ஏறத்தாழ அனைத்துப் பழங்குடியின் மாவட்டத்திலும் பல்வேறு தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திரம் என்பது என்ன? அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டம் என்பது என்ன? இந்த மக்கள் தங்கள் உயிர்த்தியாகத்தால் நமக்கு இதைப் போதித்து உள்ளனர். ஆனால் நமது வருங்கால சந்ததியினர் இந்த வரலாற்றை முழுமையாக அறிந்திருக்கவில்லை. இத்தகைய பழங்குடியினர் வாழ்ந்த, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட, அவர்களுக்குத் தலைவணங்க மறுத்த மாநிலங்களில் நிரந்தர அருங்காட்சியகங்களை அமைக்க அரசு விரும்புகிறது, அதற்கு திட்டமும் தீட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இத்தகைய அருங்காட்சியகங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இவற்றின் மூலம் நமது வருங்கால சந்த்தியினர் தியாகங்கள் செய்வதில் பழங்குடியினர் எவருக்கும் சளைத்தவர் அல்லர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சகோதரர்களே சகோதரிகளே விலைவாசி உயர்வு பற்றிய பிரச்சினையில் சில விஷயங்கள் அதிகம் பேசப்படுகின்றன. ஆனால் ஏழை குடும்பங்களில் ஒரு நபர் உடல் நலம் குன்றினாலும் அதன் முழுப் பொருளாதாரமும் சீர்குழைந்து விடுகிறது என்பது கண்கூடு. மகளின் திருமணம் நின்று போய்விடுகிறது, குழந்தைகள் கல்வி பாதிப்படைகிறது, சிலசமயம் உணவுகூட கிடைப்பதில்லை. சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் மிகவும் அதிக செலவுபிடிப்பவைகளாக மாறிவருகின்றன. எனவே இன்று செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து இத்தகைய குடும்பத்தினருக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை நமது அரசு வெளியிடுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கென கொண்டுவரப்படும் இத்திட்டத்தில் இக்குடும்பங்களில் நோய்பராமரிப்புக்காக இந்திய அரசு ரூ. 1,00,000 வரை செலவிடும். இதனால் எனது ஏழைச் சகோதரர்கள் சுகாதார சேவைகளைப் பெற்று அவர்களது கனவுகள் சிதறிவிடாமல் பாதுகாக்கப்படும்.

ஆகையால் எனது அருமை சகோதரர்களே சகோதரிகளே இந்த புனிதமான சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது நாம் அனைவரும் புதிய தீர்மானம், புதிய சக்தி, புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை ஆகியவற்றுடன் முன்னேறுவோம் என சூளுரைப்போம். நாட்டிற்காக உயிர் நீத்தவர்கள் வழியில் செல்லுவோம், நாட்டிற்காக வாழுவோம், நாட்டிற்காக உழைப்போம், நமது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவோம். இதர மக்கள் தங்கள் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற ஊக்க சக்தியாக இருப்போம் என்றும் உறுதி ஏற்போம். இலக்குகளை அடைய ஒரு சமுதாயம், ஒரு கனவு, ஒரு தீர்மானம், ஒரு திசை ஆகியவற்றை நோக்கி முன்னேறிச் செல்வோம். இந்தச் சிந்தனையுடன் நமது தலை சிறந்த தலைவர்கள், நம்மைப் பாதுகாக்க தனது உயிரை ஆபத்துக்குள்ளாக்கிய நமது வீரர்கள் ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை அஞ்சலி செலுத்துகிறேன். உயிர்த்தியாகம் செய்த 33,000 பேரை நினைவு கூறுகிறேன். நாட்டின் எதிர்காலம் குறித்து கனவு காண்கிறேன். இன்று என்னையே நாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன். செங்கோட்டை கொத்தளத்திலிருந்து உங்கள் அனைவரையும் பாரத் மாதா கி ஜே என கோஷம் இடுமாறு அழைக்கிறேன்………….
இந்த ஓசை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய வேண்டும்.

பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே

வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்,

ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்,

நன்றி, நன்றி, நன்றி

******