Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு

ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு


நாட்டின் 80-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு, கல்வி, விளையாட்டு, குடிமைப் பாதுகாப்பு, குறைக்கடத்தி உற்பத்தி, அணுசக்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் இலக்குகளை அறிவித்தார்.

முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த முன்முயற்சி, இந்தியாவின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலக அளவில் முன்னிலை வகிப்பதற்கான திறனை வளர்க்க உதவும் என்று கூறினார். பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சியை வழங்குவதற்கான ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்க, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, திறமையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறிய, கிராமங்கள், நகரங்கள், பள்ளிகள் அளவில் ஒரு திறமை தேடல் இயக்கத்தை பிரதமர் அறிவித்தார். கண்டறியப்படும் குழந்தைகளுக்கு, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களாக அவர்களை உருவாக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். போர்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் ஒரு வலுவான குடிமைப் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். போர் என்பது இனி எல்லைகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்காது என்றும், அது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், வங்கித் துறை, தரவு மையங்கள், தொழிற்சாலைகள், பிற உள்கட்டமைப்புகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில் குறைக்கடத்தி சிப்களின் முக்கியப் பங்கைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இத்துறையில் இந்தியா தன்னிறைவை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று குறைக்கடத்தி ஆலைகள் தொடங்கப்பட்டு, அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்குள் இன்னும் ஐந்து முதல் எட்டு குறைக்கடத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை எட்டும் இலக்குடன் இந்தியா முன்னேறி வருவதாகவும், இந்த தசாப்தத்திற்குள் ஐந்து புதிய அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் முந்தைய இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும், இனி ஆறு கோடி சகோதரிகளை உருவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299801&reg=3&lang=1

****

SS/RB/RJ