மாலுமிகளின் திறனுக்கான சான்றிதழ்களின் ஒருதரப்பு/இருதரப்பு அங்கீகாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படவிருக்கும் மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1978 ஆம் ஆண்டின் மாலுமிகளுக்கான பயிற்சி, சான்றிதழ், கண்காணிப்புத் தரங்கள் குறித்த சர்வதேச மாநாட்டு முறைப்படுத்தல் பிரிவு 1/10-ன்படி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கப்பல் போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களின் ஒப்புதலுடன் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்திற்கும், வெளிநாடுகளில் உள்ள இத்தகைய இயக்குநரகங்களுக்கும் இடையே கையெழுத்தாக உள்ளது.
பயன்கள்
இந்திய மாலுமிகளுக்குக் கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் வேறு வேறு நாடுகளின் கப்பல்களில் இந்திய மாலுமிகள் பணியாற்ற முடியும். இதனால் மாலுமிகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
**********