Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொதுத்துறை – தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிரதேச கிராமப்புற வங்கிகள், நபார்ட் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கும் குறுகிய கால பயிர்க் கடனுக்கான வட்டியில் ஒரு பகுதியை மத்திய அரசே செலுத்த முடிவு


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை 2016-17ஆம் ஆண்டில் விவசாயிகளின் கடனுக்கான வட்டியில் ஒரு பகுதியை மத்திய அரசே ஏற்கும் திட்டத்திற்குத் தனது ஒப்புதலை வழங்கியது. இதற்கென ரூ. 18,276 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. விவசாயிகள் ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ. 3 லட்சம் வரை 4 சதவீத வட்டியில் குறுகிய கால பயிர்க் கடனாகப் பெறுவதற்கு இத்திட்டம் உதவும்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாவன:

அ) 2016-17 ஆண்டுக் காலத்தில் ஓராண்டு காலத்திற்கு திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ. 3 லட்சம் வரையில் குறுகிய காலப் பயிர்க் கடனை பெறும் அனைத்து விவசாயிகளும் செலுத்த வேண்டிய வட்டித்தொகையில் 5 சதவீதத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும். நடைமுறையில் இந்தக் கடனுக்கென விவசாயிகள் 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

ஆ) இவ்வாறு வட்டிக்கு செலுத்த வேண்டிய தொகையாக இந்த 2016-17 ஆம் ஆண்டிற்கென மத்திய அரசு சுமார் ரூ. 18,726 கோடியை வழங்கவிருக்கிறது.

இ) அறுவடைக்காலத்திற்குப் பிறகு உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்க 9 சதவீத வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் 2 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு மாத கால கடனாக 7 சதவீத வட்டியில் இந்த விவசாயிகள் கடன் பெற இயலும்.

ஈ) இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள அவர்களது கடன் அளவின் மீது முதல் ஆண்டுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் 2 சதவீதத்தை அரசே வங்கிகளுக்குச் செலுத்தி விடும்.

உ) குறுகிய காலப் பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகள் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனில், அத்தகையோர் செலுத்த வேண்டிய வட்டியில் மேலே குறிப்பிட்ட 5 சதவீதத்திற்குப் பதிலாக 2 சதவீதத்தை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும்.