Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலியாவுடனான அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஆஸ்திரேலியாவுடனான அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்திற்கு ஏற்பளித்தது. ஆஸ்திரேலியாவுடனான இந்த ஒப்பந்தம் 13 நவம்பர் 2015 முதல் இதற்கான நிர்வாக ஏற்பாடுகளுடன் செயல்பாட்டுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவுடனான எரிபொருள் வழங்கும் ஒப்பந்தம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தி, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் 2015ம் ஆண்டில், அணுசக்தி ஒத்துழைப்பில், இந்தியா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஆபே அவர்கள் இந்தியா வந்திருந்தபோது, அணுசக்தி ஒத்துழைப்பிற்காக 12 டிசம்பர் 2015 அன்று கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தம், இது தொடர்பாக ஐந்தாண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புள்ள இந்த ஒப்பந்தம், இரு தரப்பு தலைவர்களிடையே நடந்த உறுதியான பேச்சுவார்த்தையின் மூலம் சாத்தியமானது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜனவரி 25-27 புதுதில்லிக்கு வருகை தந்திருந்தபோது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவதற்கான நிர்வாக ஏற்பாடுகள் குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, அணு சக்தி காப்பீடு நிதியம் உருவாக்கப்பட்டு, அணுவிபத்துகளுக்கான இழப்பீடுகள் வழங்குவது தொடர்பான அணுசக்தி விபத்து சட்டம் 2010ன் மீது சர்வதேச நாடுகளுக்கு இருந்த கவலை நீக்கப்பட்டது. குஜராத் மாநிலம், மித்தி விர்தியில், ஏ.பி. 1000 வகையிலான 6 அணு உலைகள் கட்டுவதற்கான இந்திய அணுசக்தி கழகம் மற்றும் வெஸ்டிங் ஹவுசுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் 2016ம் ஆண்டில் நிறைவுற உள்ளன.

இந்த ஆண்டில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டுடனான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்ம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஏப்ரல் 2015ல் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்தபோது, இந்தியாவின் லார்சன் அன்ட் ட்யூப்ரோ மற்றும் பிரான்சின் அரேவா ஆகியவற்றுக்கு இடையே, மகாராஷ்டிர மாநிலம் ஜெய்த்தாப்பூரில் அமைய உள்ள அணு உலைக்கான செலவை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் 22 டிசம்பர் 2015ல் ரஷ்யா சென்றபோது, அணு உலைகளை உள்ளூர் மயமாக்குதல் தொடர்பாக, ரஷ்ய வடிவமைப்பில் இந்தியாவிலேயே கட்டப்படும் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்ய கூட்டுறவோடு குறைந்தது 12 அணு உலைகள் கட்டப்பட உள்ளன.

பிரதமரின் ஏப்ரல் 2015 கனடா நாட்டு விஜயத்தின்போது, நீண்ட நாள் யுரேனியம் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, முதல் தொகுதி யுரேனியம், டிசம்பர் 2015ல் இந்தியா வந்தடைந்தது. இதே போல, பிரதமர் கஜகிஸ்தான் சென்றபோது யுரேனியம் வாங்குவதற்கான ஒப்பந்தம், ஜூலை 2015ல் கையெழுத்தானது.

அணுசக்தி தொடர்பாக இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அணுசக்தி சட்டத்தில் நாடாளுமன்றம் மூலமாக திருத்தம் செய்யப்பட்டு, அதன் மூலம், தேசிய அணுசக்திக் கழகம் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து, அணுசக்தி உற்பத்தியில் ஈடுபட அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை தரக்கூடிய ஒரு துறையாக அணுசக்தித் துறை மாறியுள்ளது.