Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் ஜவுளி, துணிகள் மற்றும் பேஷன் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் , ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறை மற்றும் இந்திய ஜவுளி அமைச்சகம் இடையே ஜவுளி, துணிகள் மற்றும் பேஷன் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளித்தது.

ஜவுளி மற்றும் பேஷன் துறைகள் தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இது பரஸ்பர நலன் சார்ந்ததாகவும், இரு தரப்புக்கும் பயன்தருவதாக இருக்கும். ஆஸ்திரேலிய மற்றும் இந்திய ஜவுளி மற்றும் பேஷன் துறைகளில் தொடர்பை ஏற்படுத்த பொருத்தமான நடவடிக்கைகள் இதன்மூலம் கூட்டாக அடையாளம் காணப்படும். அந்தத் துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் சர்வதேச கூட்டு செயல்பாடுகளையும் மேம்படுத்துதல்; இந்தத் துறைகளில் திறமைகளை ஊக்குவித்தல்; பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவித்து பயிற்சி, தொழில் திறன் வளர்ச்சி மற்றும் இந்தத் துறைகளில் இரு நாடுகளிலும் உருவாக்கப்படும் பொருட்களை காட்சிப்படுத்துவது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளையும் பங்கேற்பாளர்கள் அடையாளம் காண்பார்கள். இருந்தபோதிலும், இரு தரப்பிலுமான அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாக்கப்படும்.

துணை தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளிட்ட நெசவாளர்கள், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான நடவடிக்கைகளால் பயன் பெறுவார்கள்.

கைத்தறித் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக, சந்தை தொடர்புகளை உருவாக்குதல், வடிவமைப்புகளில் புதிய சிந்தனைகளை ஊக்குவித்தல் மற்றும் வடிவமைப்பு திறன் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பங்கள், உற்பத்திப் பொருள்களின் வகைகள் மற்றும் மதிப்புகூட்டுதலை விரிவுபடுத்துதல், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளை நல்ல முறையில் அணுகுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நெசவாளர்கள் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள்


பின்னணி

கைத்தறித் துறையில் பல்வேறு புதிய சிந்தனைகளை செயல்படுத்தி, முழுமையான வளர்ச்சியை உருவாக்குவதற்கு இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம் பொறுப்பேற்றுள்ளது. இளைய தலைமுறையினரிடம் கைத்தறி பொருட்களை பிரபலப்படுத்துவது இந்த அமைச்சகத்தின் பெருமுயற்சியாக உள்ளது. இந்தியாவில் நெய்து தயாரிக்கப்பட்ட மற்றும் இந்திய ஜவுளிகளில் இருந்து உடைகள் தயாரிப்பதில் ஆஸ்திரேலிய வடிவமைப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஜவுளி, கைத்தறித் துறைகளில் உள்ளவர்களுடன் ஒத்துழைப்பு, நவீன ஜவுளி மற்றும் கைத்தறி வடிவமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பொருட்களை உருவாக்குதல் மற்றும் இந்தியாவிலும், வெளிநாட்டுகளிலும் சந்தைப்படுத்துதலில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது தொடர்பாக இந்திய ஜவுளி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட (ஆஸ்திரேலிய அரசின்) வெளியுறவு விவகாரம் & வர்த்தகத் துறை இந்திய ஜவுளி அமைச்சகத்துடன் முன்மொழிவு செய்துள்ளது.

***