Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம், பிரான்ஸ் விமானப் போக்குவரத்து ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும், பிரான்ஸ் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு பரிந்துரைத்த செயல்பாடுகள் மற்றும் தரநிலையை ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும் இரு அமைப்புகளும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு திட்டத்தை செயல்படுத்தும்.

இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் சார்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு அரசுகளின் ஒப்புதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளின் திறன் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்த முடியும். மேலும், பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், மேலாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

பிரான்ஸ் விமானப் போக்குவரத்து ஆணையம், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவற்றின் பொதுவான நலன்கள் தொடர்பான விவகாரங்களும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்காக இரு அமைப்புகளும் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மூலம் ஒருங்கிணைந்து செயல்படும்.

1. இரு அமைப்புகளும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். இதன்மூலம், நோக்கம் நிறைவேற்றப்படும்.

2. பயிற்சி அளிப்பதற்காக பிரான்சிலிருந்து வல்லுநர்கள் அல்லது பயிற்றுநர்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

3. பயிற்சி திட்டங்களுக்காக இந்தியாவைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் பயிற்றுநர்கள் பிரான்சுக்கு செல்வார்கள்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும், பிரான்சின் விமானப் போக்குவரத்து ஆணையமும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் இருதரப்பு பரஸ்பர ஒப்புதலுடனேயே இருக்கும்.


*****