பி.எம்.இந்தியா
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட புறப்பாட்டு அறிக்கை:
எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அழைப்பின் பேரில், 2026 பிப்ரவரி 25, 26 தேதிகளில் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன்.
இந்தியாவும் இஸ்ரேலும் வலுவான, பன்முகத்தன்மை கொண்ட உத்திசார் ஒத்துழைப்புடன் திகழ்கின்றன. இந்த ஒத்துழைப்பு, கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் உத்வேகத்தையும் கண்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, விவசாயம், நீர் மேலாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, அத்துடன் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்கி உள்ளேன். பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் நாங்கள் பரிமாறிக்கொள்ள உள்ளோம்.
இந்தப் பயணத்தின் போது, இஸ்ரேல் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கவுள்ளேன். இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் நான் பெறவுள்ளேன். இந்த நிகழ்வு நமது இரு நாடுகளையும் இணைக்கும் வலுவான நாடாளுமன்ற, ஜனநாயக உறவுகளுக்கு ஒரு மரியாதையாக அமையும்.
இந்தியா-இஸ்ரேல் இடையேயான சிறந்த நட்பை நீண்ட காலமாக வளர்த்து வரும் இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடுவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
எனது அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த பிணைப்புகளை மேலும் பலப்படுத்தும். உத்திசார் ஒத்துழைப்புக்கான புதிய இலக்குகளை அமைக்கும். நிலையான, புதிய, வளமான எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
***
(Release ID: 2232491)
AD/PLM/KR
I will be undertaking a State Visit to Israel today and tomorrow. Our nations share a robust and multifaceted Strategic Partnership. Ties have significantly strengthened in the last few years. I will be holding talks with PM Netanyahu, in which we will discuss ways to strengthen…
— Narendra Modi (@narendramodi) February 25, 2026