Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்


முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேசிய நினைவிடத்தை திறந்து வைத்தார். வாஜ்பாயின் 101 – வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று லக்னோ நகரம் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்., இந்தியாவில் மற்றும் உலகளவில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறித்தவ குடும்பங்கள் இன்று இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒன்றிணைந்த விருப்பம் என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 25 -ம் தேதி நாட்டின் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும், மாமனிதர் பாரத ரத்னா மதன் மோகன் மாளவியா அவர்களும் இந்தியாவின் அடையாளம் என்றும், ஒற்றுமை, பாரம்பரியத்தின் பெருமையைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்று புகழாரம் சூட்டினார். இந்த இரண்டு ஆளுமைகளும் தங்களது மகத்தான பங்களிப்புகளின் மூலம் நாட்டைக் கட்டமைப்பதில் காலத்தால் அழியாத முத்திரையைப் பதித்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

டிசம்பர் 25 – ம் தேதி மகாராஜா பிஜ்லி பாசியின் பிறந்த தினத்தையும் குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, லக்னோ நகரத்தின் புகழ்பெற்ற பிஜ்லி பாசி கோட்டை வெகு தொலைவில் இல்லை என்றும், மகாராஜா பிஜ்லி பாசியின் வீரம், நல்லாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை போன்ற பண்புகளின் மரபை விட்டுச் சென்றுள்ளார் என்றும், அவற்றை பாசி சமூகம் பெருமையுடன் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். 2000 – ம் ஆண்டில் மகாராஜா பிஜ்லி பாசியின் நினைவாக அடல் ஜி அஞ்சல் தலை வெளியிட்ட தற்செயல் நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். மாமனிதர் மாளவியா, அடல் ஜி மற்றும் மகாராஜா பிஜ்லி பாசி ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

சுயமரியாதை, ஒற்றுமை, சேவை ஆகிய பாதைகளை இந்தியாவிற்கு அளித்து, தொலைநோக்குப் பார்வையின் அடையாளமாகத் திகழும் தேசிய நினைவிடத்தை திறந்து வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக திரு மோடி கூறினார். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஜி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி ஆகியோரின் பிரம்மாண்ட சிலைகள் இங்கு கம்பீரமாக நிற்கின்றன, ஆனால் அவை வழங்கும் உத்வேகம் அதைக் காட்டிலும் பெரியது என்று அவர் எடுத்துரைத்தார். அடல் ஜி-யின் வரிகளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர், இந்த தேசிய நினைவிடம், ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு முயற்சியும் நாட்டைக் கட்டமைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றும், கூட்டு முயற்சியால் மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானம் நிறைவேறும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நவீன உத்வேகத் தளத்திற்காக லக்னோ, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த பிரேர்னா ஸ்தலம் கட்டப்பட்டுள்ள நிலத்தில், பல தசாப்தங்களாக 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குப்பைகள் குவிந்து கிடந்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், திட்டமிடுபவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அம்மாநில முதலமைச்சர் மற்றும் அயராது பணியாற்றிய அவரது முழு அணிக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நாட்டின் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்க்கமான பங்களிப்பை அளித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள், இரண்டு சின்னங்கள் மற்றும் இரண்டு பிரதமர்கள் என்ற ஏற்பாட்டை நிராகரித்தவர் டாக்டர் முகர்ஜி என்று குறிப்பிட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், ஜம்மு – காஷ்மீரில் இருந்த இந்த ஏற்பாடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 -ஐ நீக்கும் வாய்ப்பு தங்கள் அரசுக்கு கிடைத்தது என்றும், இன்று ஜம்மு – காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது என்றும் திரு. மோடி பெருமிதம் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சராக இருந்த, டாக்டர் முகர்ஜி, நாட்டின் பொருளாதாரம் தன்னிறைவு பெறுவதற்கு அடித்தளமிட்டு, அதற்கான முதல் தொழில்துறைக் கொள்கையை வழங்கினார் என்றும், அதன் மூலம் இந்தியாவில் தொழில்மயமாக்கலுக்கான அடிப்படையை நிறுவினார் என்றும் பிரதமர் அப்போது நினைவு கூர்ந்தார். இன்று அதே தன்னிறைவு என்ற தாரக மந்திரம் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்றும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என்ற மாபெரும் பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், இது சிறு தொழில்களையும் சிறு அலகுகளையும் வலுப்படுத்துவதாக உள்ளது என்றும் திரு மோடி சுட்டிக்காட்டினார். இதனுடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெரிய பாதுகாப்புத் தொழில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கை வாயிலாக உலக நாடுகள் இந்தியாவின் ஆற்றலைக் கண்டதாகவும், பிரம்மோஸ் ஏவுகணை தற்போது லக்னோவில் தயாரிக்கப்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்திக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்கு முன்பு பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ‘அந்தியோதயா’ என்ற கனவைக் கண்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் கடைசி நபரின் முகத்தில் உள்ள புன்னகையைக் கொண்டே இந்தியாவின் முன்னேற்றம் அளவிடப்பட வேண்டும் என்று தீனதயாள் ஜி நம்பிக்கை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். உடல், மனம், ஞானம் மற்றும் ஆன்மா என அனைத்தும் ஒன்றாக வளர்ச்சியடைய வேண்டும் என்ற முழுமையான மனிதநேயம் குறித்து தீனதயாள் ஜி பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். தீனதயாள் ஜி-யின் கனவு நமது தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், ‘அந்தியோதயா’ தற்போது ‘நிறைவு’ என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றும், அதாவது ஒவ்வொரு பயனாளியும் அரசின் நலத்திட்டங்களின் வரம்பிற்குள் கொண்டுவரப்படுகிறார்கள் என்றும் திரு. மோடி கூறினார். ‘நிறைவு’ என்ற உணர்வு இருக்கும்போது, பாகுபாடு இருக்காது என்றும், இதுவே உண்மையான நல்லாட்சி, உண்மையான சமூக நீதி மற்றும் உண்மையான மதச்சார்பின்மை என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். தற்போது, நாட்டின் கோடிக்கணக்கான மக்கள், எவ்விதப் பாகுபாடும் இன்றி, முதல் முறையாக கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள், குழாய் நீர், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளைப் பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கோடிக்கணக்கான மக்கள் முதல் முறையாக இலவச உணவு தானியங்கள் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். அரசின் நலத்திட்டங்கள் சமூகத்தின் கடைசி நபரைச் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, பண்டிட் தீனதயாள் ஜி-யின் தொலைநோக்குப் பார்வை நிறைவேற்றப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208531&reg=3&lang=1

***

AD/SV/RK