பி.எம்.இந்தியா
மேடையில் அமர்ந்திருக்கும் பிரமுகர்களே, இந்த நன்னாளில் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து கூடியுள்ள எனது அன்பு சகோதர, சகோதரிகளே,
குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்த தின விழாவில் உங்கள் அனைவருக்கும், இந்தியர்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் அவரை பின்பற்றும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, குரு ரவிதாஸ் அவர்களின் ஆசிகளுடன், இங்கு நான் வந்து உங்களுடன் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 2016-ல் இதே நன்னாளில் அவரின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது குரு அவர்களின் பிறந்த இடத்தை அழகுபடுத்தி இந்தப் பகுதியை வளர்த்தெடுப்பதாக நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன். அதற்குப் பிறகு, உத்திரப்பிரதேசத்தில் யோகி அவர்களின் தலைமையில் அரசு அமைந்த போது, இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்குமாறு அவரை கேட்டுக் கொண்டேன். உங்களின் பல்லாண்டு கால கோரிக்கை இது. அரசுகள் மாறிக் கொண்டே இருந்தன, ஆனால், உங்களின் கனவுகள் நிறைவேற்றப்படவில்லை. உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
முதல் கட்டமாக சுமார் ரூ.50 கோடி செலவில் இந்த இடத்தை அழகுபடுத்துவதற்கும், விரிவாக்குவதற்குமான திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து இந்த இடத்திற்கு வரும் சாலை அழகுபடுத்தப்பட்டு, சீரமைக்கப்படும். மேலும் 12 கிலோ மீட்டர் நீள சாலையும் அமைக்கப்பட உள்ளது. குரு ரவிதாஸ் அவர்களின் வெண்கலச் சிலையும் நிறுவப்படும். சமுதாயக் கூடம் கட்டப்பட்டு, பிற பொது வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நீங்களும், இங்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்களும் இந்த இடத்தில் அனைத்து வசதிகளையும் பெறுவீர்கள்.
நண்பர்களே,
குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்த இடம், கோடிக்கணக்கான மக்களுக்கு புனித தலம் மட்டுமல்ல, உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றவாதியான எனக்கு இந்த புனித தலத்திற்கு சேவையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சமுதாய வாழ்க்கைக்கு திசையையும், உத்வேகத்தையும் இந்த இடம் அளிக்கிறது. அவரின் தத்துவம் சரியான முறையில் வாழ்வதற்கு வகை செய்கிறது.
எந்த பாகுபாடும் இல்லாமல் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும் ஒரு இந்தியா உருவாக வேண்டும் என்று குரு அவர்கள் கனவு கண்டார்.
நண்பர்களே,
கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த உணர்வை நனவாக்க மத்திய அரசு ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. “அனைவரும் ஒன்றிணைந்து, அனைவரும் உயர்வோம்” என்பதையும், வளர்ச்சிக்கான பஞ்சதந்திரங்களையும் – குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வருவாய், முதியோருக்கு மருந்துகள், விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம், மக்களின் குறைகளைக் களைதல் – அரசு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்குப் பிறகு நான் வாரணாசிக்கு சென்று இரண்டு புற்றுநோய் மருத்துவமனைகள் உட்பட பல்வேறு மருத்துவ வசதித் திட்டங்களையும், மக்கள் வாழ்க்கையை எளிதாக்கக் கூடிய பிற திட்டங்களையும் துவக்கி வைக்கிறேன். இதனால் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறுவர்.
சகோதர, சகோதரிகளே,
குரு ரவிதாஸ் அவர்களின் அறிவுரைகள் மற்றும் தத்துவத்திற்கேற்ப எமது அரசு ஒவ்வொரு திட்டத்தையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. ஏழை மக்களுக்கு வீடுகள், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி, ஏழை மக்களுக்கு இலவச மின் இணைப்பு, ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவ சிகிச்சை, முத்ரா திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு வங்கி உறுதி இல்லாமல் கடனுதவி, விவசாயிகளின் வயல்களுக்கு முறையான நீர்ப்பாசன வசதிகள், சுமார் 12 கோடி ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு வருடந்தோறும் ரூ.6,000 நேரடி நிதி உதவி போன்ற பல திட்டங்கள், சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவொரு துவக்கம்தான். அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, இதுவரையில் சிரமப்பட்டு வந்தனர்.
ஜாதி, வர்க்கம் அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று குருதேவ் கூறுவார். இந்த திட்டங்களின் பலன்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும். ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜாதி என்பது வாழை இலையைப் போன்றது. இலைகளுக்குள் பல இலைகள் உருவாகும். அதைப் போலத்தான் ஜாதிகளுக்குள் பல ஜாதிகள் உருவெடுக்கின்றன என்று குரு ரவிதாஸ் அவர்கள் கூறியிருக்கிறார்.
இத்தகைய சூழலில் ஜாதிப் பாகுபாடு இருக்கும் வரை மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைய முடியாது. சமூக நல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் சாத்தியமில்லை. சமுதாயத்தில் சமத்துவம் நிலவாது. நண்பர்களே, குரு அவர்களின் பாதையில் பயணித்திருந்தால் இந்தியா இன்று ஜாதி அடிப்படையிலான வன்முறைகளிலிருந்து விடுபட்டிருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
சகோதர, சகோதரிகளே,
தற்போதைய நிலைமையை புதிய இந்தியா மாற்றியமைக்கும். டிஜிட்டல் இந்தியா மற்றும் தொழில்நுட்ப சகாப்தத்தில், சமுதாய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ள நமது இளைஞர்களும், நாம் அனைவரும் இணைந்துதான் இந்தச் சூழலை மாற்ற வேண்டும். தமது தனிப்பட்ட மற்றும் அரசியல் நன்மைகளுக்காக ஜாதித் தீயை மூட்டி வரும் நபர்களை நாம் அடையாளம் காண்பது அவசியம்.
நண்பர்களே, உழைப்பே கடவுள், நேர்மையாக பொருளீட்டுவதில்தான் அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்ற குரு அவர்களின் தத்துவத்தை, கடந்த நான்கரை ஆண்டுகளாக சமுதாய மற்றும் பொது வாழ்க்கையில் கடைபிடிக்க, எமது அரசு முயற்சித்து வந்தது. பணமதிப்பிழப்பு, பினாமி சொத்துக்கு எதிராக வலுவான விசாரணை, கருப்புப் பணத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் நமது அமைப்பின் அங்கமாகி உள்ளன. இது போன்ற விஷயங்களை இனிமேலும் சகித்துக் கொள்ள மாட்டோம்.
நண்பர்களே, குரு ரவிதாஸ் அவர்களின் ஆசிகளால், புதிய இந்தியாவில் முறைகேடுகளுக்கும், ஊழல் நடைமுறைகளுக்கும் இடமிருக்காது. கடுமையான உழைப்பு மற்றும் நேர்மையான பணிகளால் உயர விரும்பும் மக்களுடன் அரசு தோளோடு தோள் நிற்கும். ரூ.5 லட்சம் வரையில் வருடாந்திர வருவாய் உள்ள நடுத்தர வர்க்க நண்பர்களுக்கு வரிவிலக்கை சமீபத்தில் அரசு அளித்ததை நீங்கள் அறிவீர்கள். பொதுப் பணத்தை கொள்ளையடிப்பவர்களை ஒருபுறம் தண்டிக்கிறோம், நேர்மைக்கு மறுபுறம் விருதளிக்கிறோம்.
சகோதர, சகோதரிகளே,
கடந்த ஆண்டு மகருக்கு சென்று புனித கபீர் அகாடமிக்கு நான் அடிக்கல் நாட்டினேன். இதே போன்று புத்த பகவானுடன் தொடர்புடைய அனைத்து புனித தலங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன, சாரநாத் அழகுபடுத்தப்பட்டுள்ளது. குருநானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்த தின விழாவை உலகெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
சகோதர சகோதரிகளே,
இந்திய அரசும், உத்திரப்பிரதேச அரசும் நமது நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பங்களிக்கும் மக்களுக்கு உரிய கவுரவத்தை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நமது செறிவான கலாச்சாரம்தான் நமது வலிமையும், உத்வேகமும் ஆகும். குரு ரவிதாஸ் அவர்கள் காட்டிய பாதையில் நடைபயின்று நமது வாழ்வை எளிதாக்குவோம். குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்த தின விழாவில் அவரது இடத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகள்! நன்றி! குரு அவர்களின் பாதங்களை பணிந்து எனது உரையை முடிக்கிறேன்.
काशी के संत रविदास जी के मंदिर में दर्शन करने का सौभाग्य मिला और विकास की परियोजनाओं की नींव रखी। https://t.co/4PVNRXJ7B5
— Narendra Modi (@narendramodi) February 19, 2019
Today, on the auspicious occasion of Ravidas Jayanti, offered prayers at the Shri Guru Ravidass Janam Asthan.
— Narendra Modi (@narendramodi) February 19, 2019
Guru Ravidas’ message of harmony, equality and efforts to empower the poor continue to motivate people across India. pic.twitter.com/xSxBiHQ62M