பி.எம்.இந்தியா
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகவும் எளிதாகவும் பயணம் செய்வதை உறுதி செய்யும் சேது பாரதம் என்ற ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைந்துள்ள ரயில் இருப்புப் பாதை கடப்பு இல்லாமல் மேம்பாலங்கள் மூலம் கடப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
208 புதிய மேம்பாலங்கள் / சுரங்க பாலங்கள் அமைப்பதும் 1500 மேம்பாலங்கள் விரிவாக்கம் / சீரமைப்பு / மாற்றி அமைப்பதும் ஆகியவை இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், போக்குவரத்தை சீரமைக்கும் திசையில் மத்திய அரசு பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றார். நாட்டிற்கு நல்ல உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், மனித உடலுக்கு ரத்த நாளங்களும் நரம்புகளும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நாட்டிற்கு சாலைகள் முக்கியமாகும் என்றார்.
உள்கட்டமைப்பு, இரயில்வே, நீர் பாசனம், கணிணி வழி இணைப்பு ஆகிய துறைகளில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விவரித்தார்.
***