பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷனின் பதவிக் காலத்தை 31.3.2016க்கு பிறகு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க அனுமதி அளித்தது.
இந்த கருத்துருவின் மூலம் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் நாடு முழுவதிலும் மனிதக் கழிவை அகற்றும் பணிகளில் நேரடியாக ஈடுபடுவோர் பெரிதும் பயனடைவர். இந்த தேசிய கமிஷன் அவர்களது நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவே செயல்பட்டு வருகிறது.
இந்த மூன்று ஆண்டுகால நீட்டிப்பிற்கான மொத்த செலவு கிட்டத்தட்ட ரூ. 13,08 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணித் தகவல்:
துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷன் 1993ஆம் ஆண்டின் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷன் சட்டத்தின் வழிமுறைகளுக்கு இணங்க 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. துவக்கத்தில் 31.3.1997 வரை இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்தச் சட்டத்தின் செல்லுபடித்தன்மை 31.3.2002 வரை நீட்டிக்கப்பட்டு, பின்னர் 29.2.2004 வரை நீட்டிக்கப்பட்டது. 29.2.2004க்குப் பிறகு இந்தச் சட்டத்தின் செயல்தன்மை நின்று போனது. அதன் பிறகு துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷனின் செயல்காலமானது சட்டபூர்வமல்லாத ஓர் அமைப்பாக அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போதைய கமிஷனின் செயல்காலம் 31.3.2016 வரை உள்ளது.
துப்புரவு தொழிலாளர்களின் நலன்களுக்கான குறிப்பிட்ட திட்டங்கள் குறித்து இந்த தேசிய கமிஷன் தனது பரிந்துரைகளை அரசிற்கு அனுப்புவதோடு, துப்புரவு தொழிலாளர்கள் தொடர்பாக தற்போது நடப்பில் இருக்கும் நலத்திட்டங்களை மதிப்பீடு செய்வது, குறிப்பிட்ட குறைபாடுகள், முறையீடுகள் தொடர்பான விஷயங்களில் விசாரணை மேற்கொள்வது ஆகிய செயல்களையும் மேற்கொண்டு வருகிறது.
மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான வேலைகளை தடை செய்வது மற்றும் அவர்களது புனர்வாழ்வு ஆகியவற்றுக்கான சட்டத்தின் வழிமுறைகளின்படி அச்சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இதைச் சிறப்பாக அமல்படுத்துவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கவும், இந்தச் சட்டம் தொடர்பான மீறல்கள், சட்டத்தின் வழிமுறைகளை அமல்படுத்தாத நிலை ஆகியவை குறித்த புகார்களை விசாரிப்பது ஆகிய பொறுப்புகளும் இந்த தேசிய கமிஷனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் மேம்பாட்டிகு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், சமூக- பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது அவர்கள் எதிர்நோக்கும் புறக்கணிப்பு இன்னும் அகற்றப்படாத நிலையே நீடித்து வருகிறது. மேலும் மனிதக் கழிவுகளை நேரடியாக இவர்களே அகற்றும் நிலை இன்னும் நாட்டில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த முறையை அகற்றுவதென்பது அரசின் முக்கிய முன்னுரிமை கொண்டதொரு பகுதியாக தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே துப்புரவுத் தொழிலாளர்களின் நலனுக்கான அரசின் பல்வேறு தலையீடுகள் மற்றும் முன்முயற்சிகள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கும் நாட்டில் மனிதக் கழிவை மனிதர் நேரடியாக அகற்றும் முறையை முழுமையாக அகற்றுவது என்ற இலக்கை அடையவும் இந்த அமைப்பின் தேவை தொடர்ந்து இருந்து வருகிறது