பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.02.2026) 9-வது பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் முறைசாரா கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிப் பிரதமர் பேசுகையில், ஒவ்வொருவருக்கும் அவரவர் வழி இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். ஒருவரின் சொந்த நடைமுறையைப் பின்பற்றுவதிலிருந்துதான் மகிழ்ச்சி வருகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். சிலர் இரவில் படிக்க விரும்புகிறார்கள் எனவும் மற்றவர்கள் அதிகாலையில் படிக்க விரும்புகிறார்கள் எனவும் ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த விருப்பம் இருக்கிறது என்றும் திரு நரேந்திர மோடி விளக்கினார். அடுத்தவர்களின் பரிந்துரைகளை கவனமாகக் கேட்க வேண்டும் எனவும், தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் மட்டுமே மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயி வயலை உழுவது போல, ஆசிரியர்கள் மாணவர்களின் மனதை உழ வேண்டும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு வாரமும் கற்பிக்க வேண்டிய அத்தியாயங்களை ஆசிரியர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும், இதனால் மாணவர்கள் பாடத்திற்கு முன் இணையத்தில் அது தொடர்பாகப் படிக்க, கேட்க அல்லது தேடத் தொடங்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். உண்மையான கற்பித்தல் நிகழும்போது, ஆர்வம் எழுந்து, புரிதல் ஆழமாகி, கவனம் மேம்படும் என்று அவர் தெரிவித்தார். ஒரு பாடம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தால், மாணவர்கள் மேலும் ஆராய விரும்புவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும், படிப்பதற்கும், விளையாடுவதற்கும், திறன்களுக்கும் மதிப்பெண்களுக்கும் இடையில் சமநிலையான சூழல் அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒரு திசையில் அதிகமாக சாய்வது சமநிலையின்மைக்கு வழிவகுக்கும் என்றும், சரியான சமநிலை, நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். திறன்கள் இரண்டு வகைகளாகும் என்றும் அவை வாழ்க்கைத் திறன்கள், தொழில்முறை திறன்கள் எனவும் பிரதமர் கூறினார். இரண்டும் சமமாக முக்கியம் என்றும் அவர் விளக்கினார். அறிவு, படிப்பு ஆகியவை இல்லாமல் எந்த திறமையும் வளர முடியாது என்றும், திறமை அறிவிலிருந்து தொடங்குகிறது என்றும் அவர் கூறினார்.
வாழ்க்கைத் திறன்கள் இல்லாமல் இருந்தால் அன்றாடப் பணிகளில் கூட ஒருவர் சிரமப்பட நேரிடும் என அவர் தெரிவித்தார். வாழ்க்கைத் திறன்கள் முழுமையாக அடையப்பட வேண்டும் எனவும், அதில் ஒழுக்கம், நம்பிக்கை, தகவமைப்புத் திறன் ஆகியவை அடங்கி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொழில்முறை திறன்களுக்கு தொடர்ச்சியான கற்றல், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறுவது ஆகியவை முக்கியத் தேவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். கல்வியும் திறமையும் இரட்டை உடன்பிறப்புகள் எனவும் பிரிக்க முடியாதவை என்றும், திறமை வாழ்க்கையில் இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் கடந்த காலத்தைப் பற்றியே யோசித்து நேரத்தை வீணாக்காமல், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நல்ல ஆசிரியர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்து வாழ்க்கைக்கு அதன் பொருத்தத்தை விளக்குவதன் மூலம் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்கிறார்கள் என்று திரு நரேந்திர மோடி கூறினார். கல்வி என்பது தேர்வுகளுக்கு மட்டுமல்ல எனவும் அது முழு வாழ்க்கைக்குமானது என்றும், தேர்வுகள் தன்னைத்தானே சோதித்துப் பார்ப்பதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார். ஒட்டுமொத்த கற்றலை நோக்கிய முயற்சிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
குறிப்பாக பொதுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளின் போது ஏற்படும் அழுத்தங்களை சமநிலைப்படுத்துவது குறித்துப் பேசிய பிரதமர், இது ஒரு பொதுவான கவலை என்று குறிப்பிட்டார். கல்வியை கட்டாயமாகவோ அல்லது சுமையாகவோ பார்க்கக்கூடாது எனவும் மாறாக முழுமையான ஈடுபாடு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். முழு ஈடுபாடு இல்லாமல் கல்வி வெற்றிக்கு வழிவகுக்காது என்று அவர் கூறினார். மாணவர்கள் தங்கள் மனதை மதிப்பெண்களுடன் இணைக்காமல், வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வகுப்பறைகள் அல்லது தேர்வு அறைகளில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் தொடர்ந்து தங்களை சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கற்றல் திறன் குறைவாக உள்ள பிற மாணவர்களுக்குக் கற்பிக்கவும், அதே நேரத்தில் தங்கள் சொந்த புரிதலை உறுதிப்படுத்த புத்திசாலித்தனமான வழிகாட்டுதலைப் பெறவும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே நேரத்தில் பொதுத் தேர்வுகளுக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் விதம், அவர்களின் மாறுபட்ட படிப்பு முறைகள், கடினமான சூழல்கள் ஆகியவை காரணமாக, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பிரதமர் பேசுகையில், இதை ஒரே நேரத்தில் கிரிக்கெட், கால்பந்து ஆகிய இரண்டையும் விளையாடுவது போல ஒப்பிட்டுப் பேசினார். 12-ம் வகுப்பைப் பொறுத்தவரை பொதுத் தேர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால், போட்டித் தேர்வுகளுக்குத் தனித்தனி முயற்சி தேவையில்லாமல் அது எளிதாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார். குழந்தைகள் அவர்களது திறன், ஆர்வத்திற்கு ஏற்ப வளர அனுமதிக்குமாறு பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தினார்.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக அழுத்தம் இருக்கும் நிலையில், விளையாட்டுக்கு பெற்றோர்கள் பெரும்பாலும் ஆரம்பத்தில் ஊக்கமளிப்பதில்லை என பிரதமர் தெரிவித்தார். ஆனால் வெற்றி கிடைத்தால், அவர்கள் அதைப் பெருமையாகக் கொண்டாடுகிறார்கள் என்று பிரதமர் விளக்கினார். விளையாட்டு என்பது வேகமும் விழிப்புணர்வும் தேவைப்படும் ஒரு திறமையாகும் எனவும் இது சுய வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். படிப்புடன் விளையாட்டை ஒரு ஆக்கபூர்வமான திறமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நேர மேலாண்மைக்கான எளிய முறைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார். அவர்களின் போராட்டங்களைப் புரிந்துகொள்வது மாணவர்கள் நம்பிக்கையைப் பெறவும் உதவுகிறது என்று அவர் விளக்கினார். சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவுடன், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். கூட்டாக இணைந்து படிப்பது அனைவரும் மேம்பட உதவுகிறது என பிரதமர் தெரிவித்தார். தேர்வுகள் பண்டிகைகளைப் போன்றவை என்றும் அவற்றைக் கொண்டாடுங்கள் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்ததில் மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரது நட்புரீதியான செயல்பாடு, தங்கள் கேள்விகளில் அவர் செலுத்திய உண்மையான ஆர்வம், அவர் அளித்த சிந்தனையைத் தூண்டும் பதில்கள் ஆகியவை குறித்து மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் அடுத்த பகுதி 9 பிப்ரவரி 2026 அன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224364®=3&lang=1
***
TV/PLM/SH
A wonderful discussion with students on approaching exams with confidence and positivity. Do watch this very special episode of Pariksha Pe Charcha!#ParikshaPeCharcha26 https://t.co/k7IN79qvek
— Narendra Modi (@narendramodi) February 6, 2026