பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி, 23 ஜூன் 2018 அன்று மத்திய பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் இந்தூரில் மத்தியப் பிரதேச ஷேஹாரி விகாஸ் மகோத்சவத்தில் பங்கேற்கவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் ரூ.4,000 கோடி மதிப்பிலான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தொலைநிலையில் இருந்து தொடக்கி வைக்கிறார். இவற்றில், பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள், நகர்ப்புற குடிநீர் திட்டங்கள், நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற சுகாதாரத் திட்டங்கள், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நகர்ப்புற நிலம் அழகுபடுத்தும் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
பிரதமர் 2018ஆம் ஆண்டு தூய்மை ஆய்வு விருதுகளை வழங்குகிறார். 2018 தூய்மை ஆய்வு முடிவுகளுக்கான கண்காணிப்புப் பலகையை அவர் தொடங்கி வைக்கிறார். மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்ட நகரங்கள், சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் ஆகியன பிரதமரிடமிருந்து விருதுகளைப் பெறவுள்ளன. தூய்மை புதுமைப் படைப்புகளில் ஒன்றிற்கும், தூய்மை சிறப்பு நடைமுறைகளில் ஒன்றிற்கும், தூய்மை தொழில் முனைவோர்களில் ஒருவருக்கும் பிரதமரின் விருதுகள் தரப்படும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, ராஜ்கரில் பிரதமர், மோகன்புரா திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்தத் திட்டம் ராஜ்கர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி தரும். மேலும் இந்த திட்டம் இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கவும் உதவும். பிரதமர் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல்லையும் நாட்டுகிறார்.