Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடிய போது நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


சகோதரர்களே, சகோதரிகளே,

எனக்கு மிகவும் பிடித்தமான திட்டத்துடன் தீவிரமாக பங்கேற்றுள்ள மக்களுடன் பேசுவதற்கு இன்று (29.05.2018) வாய்ப்பு கிடைத்தது எனது பெரிய அதிர்ஷ்டமாகும். பாரம்பரியங்களைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு, தொழில்களில் முனைய முன்வந்துள்ள சகோதரிகள் மற்றும் இளைஞர்களாகிய உங்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் பாரம்பரிய வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக உங்களது சொந்தப் பாதைகளை உருவாக்கி உள்ளீர்கள். இந்த பாதையை தைரியத்துடனும், ஆற்றலுடனும் உருவாக்கி உள்ளீர்கள். நாட்டின் வளத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய அளவில் பங்களித்திருக்கிறீர்கள்.

இன்று (29.05.2018) உங்கள் தைரியம், நீங்கள் மேற்கொண்ட முடிவுகள், இந்த பயணத்தில் நீங்கள் எடுத்த முயற்சி ஆகியவற்றின் கதையை என்னுடன் சேர்ந்து காணொளி காட்சி மூலம் இந்த நாடே கேட்டுள்ளது. சென்ற மாதம் தான் முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமரின் இல்லத்தில் இருந்தபடியே சிறிது நேரத்தைச் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களது அனுபவங்கள், அவர்களது போராட்டங்கள், அவர்கள் முன்னேற்றத்தின் கதைகள் நிறைவை அளித்தன. என் மனதை நிரப்பி எனக்கு பெருமையை அளித்தன. அன்றைய தினமே நான் எடுத்த முடிவுதான் முத்ரா பயனாளிகளுடன் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உரையாட வேண்டும் என்பது. அதன்படி இன்று (29.05.2018) உங்களது நேரமும், என்னுடைய நேரமும் தொழில்நுட்பத்தின் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவங்களையும், உணர்வுகளையும் நேரில் கேட்கமுடிகிறது, நம்மிடையே எத்தகைய நபர்களின் உதவியும் நமக்கு தேவையில்லை.
நாட்டின் பொருளாதாரத்திற்கு உங்களைப் போன்ற தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானது. 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன், கடன் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, அரசியல் ஆதாயத்திற்கானவை அவை. அரசியல் சார்ந்தவர்கள், அவர்களது உதவியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், வாக்கு வங்கி அரசியல் செய்வோர் போன்றவர்கள் வங்கிகளில் இருந்து பணத்தை பெறுவது வழக்கமாக இருந்தது. எவ்வளவு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன என்பது குறித்து நிறைய செய்திகள் வெளியாயின. அதற்குப்பின் என்ன நடந்தது என கேள்வி கேட்க எவருக்கும் தோன்றவில்லை. எங்களைப் பொருத்தவரை நாங்கள் கடன் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யவில்லை. இடைத்தரகர் எவருக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை. நாட்டின் இளைஞர்கள், அன்னையர், சகோதரிகள் இப்படி எவரெல்லாம் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்களோ, யாரெல்லாம் வங்கி அதிகாரிகளுடன் நேரடியாக பேச விரும்பினார்களோ, அவர்களுக்கென்று ஒரு திட்டம் தயாரித்தோம். முத்ரா திட்டம் என்ற இது ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பிய நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கியது. நாங்கள் சிறிய தொழில்முனைவோர் மீது நம்பிக்கை வைத்தோம், அவர்களது வர்த்தக திறன்கள் மீது நம்பிக்கை வைத்தோம், முத்ரா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு கடன்கள் வழங்கினோம், இதனால் அவர்கள் சொந்த வர்த்தகத்தை தொடங்கி விரிவு படுத்த முடிந்தது. முத்ரா திட்டம் சுய வேலைவாய்ப்புக்கு வாய்ப்பு அளித்ததோடு மட்டுமன்றி வேலைவாய்ப்புகளை பெருக்கும் அமைப்பாகவும் செயல்பட்டது.

நமது நாட்டில் சுதந்திரத்திற்குப்பிறகு லைசென்ஸ் ராஜ்யம் அமலில் இருந்தது. யாராவது முக்கியப் புள்ளிகளை தெரிந்தவர்கள் மட்டுமே கடன் பெற்றார்கள். பரிந்துரை செய்வதற்கு யாரேனும் இருந்தால் மட்டுமே மக்களின் கோரிக்கைகள் நிறைவேறின. இந்த நடைமுறை ஏழைகளை வர்த்தக அமைப்புகளுக்கு வெளியே நிறுத்தியது. இவர்களுக்கு பெரிய பெயரோ, அணுகுமுறை வழிகளோ ஏதுமில்லை. இந்த முக்கிய காரணத்தினால் ஆயிரக்கணக்கான சிறிய தொழில் முனைவோர் தங்கள் திறன்களுக்கு ஏற்ப தங்களது சொந்த வர்த்தகத்தைத் தொடங்கவோ, விரிவாக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை நிதி உதவியைப் பொறுத்தவரை வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுடைய பிடியில் அவர்கள் சிக்கினார்கள்.

பெரிய தொழில் அதிபர்களுக்கு கடன் வழங்குவதெற்கென நிதி அமைச்சரே தொலை பேசி மூலம் பரிந்துரை செய்யும் காலம் ஒன்று நாட்டில் இருந்தது. அதே சமயம், சிறிய தொழில் முனைவோர் வட்டிக்கு கடன் கொடுப்போருக்கு 30 முதல் 40 சதவீதம் வரை வட்டி செலுத்தி, கஷ்டப்பட்டனர். இதனால் தங்கள் வாழ்க்கை முழுவதும் இந்த கடன் சுமையிலிருந்து மீள முடியாத நிலையில் இருந்தனர். இந்த பாதிப்பு ஏற்படுத்தும் சுழற்சி ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும், யாராவது ஒருவர் அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த வகையில், நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம், வெற்றியும் அடைந்தோம். இந்த பாதிப்பு ஏற்படுத்தும் சுழற்சியை முடிவுக்கும் கொண்டு வந்துள்ளோம்.

மிகுந்த நம்பிக்கை மற்றும் மன தைரியத்துடன் ஏழை மக்களின் மீது அரசுக்கு இருந்த நம்பிக்கையுடன் அவர்களது கடின உழைப்பு மற்றும் கனவுகள் மீது நம்பிக்கை வைத்து இந்த நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம்.

நாட்டின் இளைஞர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாக முத்ரா திட்டம் போன்ற ஒரு திட்டம் கிடைத்திருந்தால் நகரங்களை நோக்கி மக்கள் குடிபெயரும் பிரச்சினை இவ்வளவு கடுமையாக இருந்திருக்காது. உரிய வங்கிக் கடன்கள் குறைந்த வட்டி வீதத்தில் எவ்வித ஜாமீனும் இன்றி கிடைத்திருந்தால் இளைஞர்கள் தங்களது ஊர்கள், கிராமங்களிலேயே தங்கியிருந்து வர்த்தகம் புரிந்திருப்பார்கள். இன்று ஏழைகளிலும் ஏழையான மக்களும் கூட எவ்வித ஜாமீனும் இன்றி வங்கிக் கடன்களை பெறுகிறார்கள். சாதாரண மனிதனும் எவ்வித பரிந்துரையும் இன்றி தமக்கென்று எவ்வித பெரிய பெயரும் இன்றி முத்ரா கடன் உதவியுடன் தொழில்முனைவோராக மாற முடியும். இன்றைய நிலையில் அரசில் உறவினர்களோ. நண்பர்களோ, அதிகாரியாக இருந்தால்தான் கடன் கிடைக்கும் என்ற சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் நாட்டில் திறன் பற்றாக்குறை உள்ளது. ஏதாவது ஒரு துறையில் ஒவ்வொருவரும் திறன் பெற்றுள்ளனர். இந்தத் திறனைக் கண்டறிந்து அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முத்ரா திட்டம் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் இத்தகைய திறன்களுக்கு வலு சேர்ப்பதாக விளங்குகிறது.

திறன்களை ஊக்குவித்தால் அவை மேலும் வளர்ச்சி அடைகின்றன, வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாக துணிகளின் மீது எம்பிராய்டரி செய்யும் திறன் ஒருவருக்கு உள்ளது என்றால், முத்ரா திட்டத்தின் கீழ் அவர் கடன் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். படிப்படியாக வளர்ச்சியடைந்து அவர் விருப்பப்படி வடிவமைத்து ஆடைகள் தயாரித்தும் வர்த்தகத்தை தொடங்க முடியும். கைத்தறி வர்த்தகம் தொடங்குவதற்கு பலருக்கு உதவி கிடைத்துள்ளது. ஒரு வகையில் பார்த்தால் முத்ரா திட்டம் சாதாரண மனிதனிடம் உள்ள திறன்களுக்கு மெருகேற்றி பயன்படுத்த உதவியுள்ளது. இத்தகைய திறன்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிலையையும், முத்ரா திட்டம் உருவாக்கி உள்ளது. இதனால் மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.5.75 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சில சமயம் திட்டங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்த நிலையிலும், முற்றிலும் அது பயன்படுத்தப்படாத நிலை உருவாகிறது. ஆனால், முத்ரா திட்டத்தைப் பொறுத்தவரை வழங்கப்பட்ட கடன்கள் அளவு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சியுள்ளது என்பதை கேட்க உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக வர்த்தகம் தொடங்கிய மக்களுக்கு 28 சதவீதம் தொகை அதாவது ரூ.3.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் பார்த்தால் நீண்டகாலம் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து பின்னர் இவர்கள் சுய வேலைவாய்ப்பை பெற்றவர்கள் ஆவர்.

இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் 74 சதவீதம் பேர் பெண்கள் என்பது மிகவும் நிறைவளிக்கும் விஷயமாகும். அதாவது சுமார் 9 கோடி பெண்கள் திட்டத்தின் பயனை அடைந்துள்ளனர். பெண் ஒருவர் முன்னேறினால், அவர் பொருளாதார செயல்பாட்டில் மத்திய இடம் வகிப்பவராக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தின் தன்னம்பிக்கை உயருகிறது, அவர்களது சிந்தனை மாறுகிறது, மொத்த சமுதாயமே அதிகாரம் பெறுகிறது. இதே போல, முத்ரா திட்டத்தின் கீழ் 55 சதவீதம் கடன்கள் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 12 கோடி பயனாளிகள் இத்திட்டத்தின் மொத்த கடன் தொகையில் 55 சதவீதத்தை பெற்று பயன் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக ஏழ்மை குறித்த முழக்கங்களைக் கேட்டு வந்துள்ளோம், ஏழைகளின் மேம்பாடு குறித்த பேச்சுகளை கேட்டு வந்துள்ளோம். ஆனால், முத்ரா திட்டம் பின்தங்கிய சமுதாயத்தினருக்கு எவ்வித பாகுபாடும் இன்றி நிதி மற்றும் சமூக அதிகாரத்தை வழங்கி வந்துள்ளது. அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணியை திட்டம் நிறைவேற்றி உள்ளது.

இதனிடையே, பல்வேறு நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன. இன்றைய நிலையில், 110 வங்கிகள் மட்டுமன்றி 72 குறு நிதி நிறுவனங்கள், 9 வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியனவும் முத்ரா கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. முத்ரா கடன் வழங்குவதற்கான நடைமுறைகளை வங்கிகள் எளிமையாக்கி உள்ளன. இந்த கடன் தொடர்பான ஆவணப்பணி எளிமையாக்கப்பட்டுள்ளது. படிவங்களை பெறுவது பதற்றமற்ற செயலாக மாறியுள்ளது. இன்றைய நிலையில் சுய வேலைவாய்ப்பு என்பது பெருமைக்குரிய விஷயம். நீங்கள் எல்லாம் தான் இதற்கு உதாரணங்களாக திகழ்கிறீர்கள்.

******