பி.எம்.இந்தியா
மேற்கு வங்காளத்தின் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்பிலான பல ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேற்கு வங்கத்திலும் வடகிழக்கு பகுதிகளிலும் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதையும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான இயக்கம் இன்று மால்டாவிலிருந்து மேலும் வேகம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டு பல திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். மேற்கு வங்கத்திற்கு புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயணத்தையும் வர்த்தகத்தையும் எளிதாக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தின் புனித பூமியிலிருந்து, ரயில்வே நவீனமயமாக்கலுக்கான மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் தூங்கும் வசதி கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார். இந்த புதிய வந்தே பாரத் தூங்கும் வசதி ரயில் மக்களுக்கு நீண்ட தூரப் பயணங்களை மிகவும் வசதியாக மாற்றும் என்று அவர் கூறினார். சிறிது நேரத்திற்கு முன்பு மால்டா ரயில் நிலையத்தில் சில பயணிகளுடன் தாம் உரையாடியதாகவும், இந்த ரயிலில் பயணம் செய்வது ஒரு சிறந்த அனுபவம் என்று அனைவரும் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முன்பு மக்கள் வெளிநாட்டு ரயில்களின் படங்களைப் பார்த்து, அத்தகைய ரயில்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று விரும்பினர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இப்போது அந்தக் கனவு நனவாகி வருகிறது என்றார். இந்த வந்தே பாரத் ரயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது எனவும் இது இந்தியர்களின் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். நாட்டின் முதல் வந்தே பாரத் தூங்கும் வசதி ரயில், மா காளியின் நிலத்தையும் மா காமாக்யாவின் நிலத்தையும் இணைக்கிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இப்போது மேற்கு வங்கம் உட்பட, நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதை அவர் எடுத்துரைத்தார். இதனுடன், நவீன, அதிவேக ரயில்களின் முழுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். மேற்கு வங்கத்தில் மேலும் நான்கு நவீன அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் இன்று தொடங்கப்பட்டு இருப்பதை அவர் குறிப்பிட்டார். நியூ ஜல்பைகுரி – நாகர்கோயில், நியூ ஜல்பைகுரி – திருச்சிராப்பள்ளி, அலிபுர்துவார் – பெங்களூரு, அலிபுர்துவார் – மும்பை ஆகிய அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த ரயில்கள் மேற்கு வங்கத்துக்கும், நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். இந்த அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் கங்காசாகர், தட்சிணேஸ்வர், காளிகாட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கும், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிற்குச் செல்பவர்களுக்கும் பயணத்தை எளிதாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட இந்தியா அதிக ரயில் என்ஜின்களை உற்பத்தி செய்கிறது என்றும், பல நாடுகளுக்கு பயணிகள் ரயில் பெட்டிகளும் மெட்ரோ ரயில் பெட்டிகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பயனளிப்பதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என அவர் தெரிவித்தார். இந்தியாவில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவது அரசின் முக்கிய பணியாக உள்ளது என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேற்கு வங்க ஆளுநர் திரு சி.வி. ஆனந்த போஸ், மத்திய அமைச்சர்கள், திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு சாந்தனு தாக்கூர், திரு சுகந்த மஜும்தார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
பிரதமர் மால்டா டவுன் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஹவுரா – குவஹாத்தி (காமாக்யா) இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் தூங்கும் வசதி கொண்ட ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாலுர்காட் – ஹிலி இடையேயான புதிய ரயில் பாதை, நியூ ஜல்பைகுரியில் அடுத்த தலைமுறை ரயில்வே சரக்கு பராமரிப்பு வசதிகள், ஜல்பைகுரி மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட நான்கு முக்கிய ரயில் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
நியூ கூச்பெஹார்–பமன்ஹாட், நியூ கூச்பெஹார்–பாக்சிர்ஹாட் இடையேயான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும், பிரதமர் 4 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை காணொலி வழியே கொடியசைத்து தொடங்கி வைத்தார். நியூ ஜல்பைகுரி– நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி– திருச்சிராப்பள்ளி, அலிப்பூர்துவார் – எஸ்எம்விடி பெங்களூரு, அலிப்பூர்துவார் – மும்பை (பன்வெல்) அம்ரித் விரைவு ரயில் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.
எல்ஹெச்பி பெட்டிகள் பொருத்தப்பட்ட இரண்டு புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராதிகாபூர் – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில், பாலுர்காட் – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில் ஆகியவை அவை.
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்தவும், சீரான போக்குவரத்தை எளிதாக்கவும் உதவும் ஒரு முக்கிய சாலைத் திட்டமான தேசிய நெடுஞ்சாலை-31டி–யின் துப்குரி–ஃபாலகட்டா பிரிவின் மறுசீரமைப்பு மற்றும் நான்கு வழிச்சாலைப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டங்கள், நவீன உள்கட்டமைப்பு உருவாக்கம், மேம்பட்ட போக்குவரத்து இணைப்பை உருவாக்குவது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். இவை நாட்டின் வளர்ச்சி கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215594®=3&lang=1
***
(Release ID: 2215594)
TV/PLM/RJ
Delighted to flag off India’s first Vande Bharat sleeper train from Malda. Several Amrit Bharat train services are also being introduced to boost connectivity.
— Narendra Modi (@narendramodi) January 17, 2026
https://t.co/rh7OaIeTvR
आज भारतीय रेल के आधुनिकीकरण की तरफ एक और बड़ा कदम उठाया गया है।
— PMO India (@PMOIndia) January 17, 2026
आज से भारत में वंदे भारत स्लीपर ट्रेनों की शुरुआत हो रही है: PM @narendramodi
देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन... मां काली की धरती को मां कामाख्या की भूमि को जोड़ रही है।
— PMO India (@PMOIndia) January 17, 2026
आने वाले समय में पूरे देश में, इस आधुनिक ट्रेन का विस्तार होगा।
मैं बंगाल को, असम को, पूरे देश को इस आधुनिक स्लीपर ट्रेन के लिए बधाई देता हूं: PM @narendramodi
आज बंगाल को चार और आधुनिक, अमृत भारत एक्सप्रेस ट्रेनें मिली हैं।
— PMO India (@PMOIndia) January 17, 2026
न्यू जलपाईगुड़ी- नागरकोइल अमृत भारत एक्सप्रेस...
न्यू जलपाईगुड़ी - तिरुच्चिरापल्ली अमृत भारत एक्सप्रेस...
अलीपुर द्वार - बेंगलुरु अमृत भारत एक्सप्रेस...
अलीपुर द्वार - मुंबई अमृत भारत एक्सप्रेस...
इससे बंगाल और…