பி.எம்.இந்தியா
மாண்புமிகு அதிபர் ஃபிலிப் நியூசி,
சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,
அதிபர் அவர்களே, உங்களது அன்பான வார்த்தைகள் என்னை மிகவும் நெகிழச் செய்தது. மொசாம்பிக் – இந்திய உறவுகளின் வலிமை குறித்த உங்களது சிந்தனைகளுக்கும் எனது நன்றிகள். எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக உங்களுக்கும், மொசாம்பிக் அரசு மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிபர் அவர்களே, நமது இரு நாடுகளின் உறவு புதிதன்று. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மொசாம்பிக்கை தங்களது இல்லம் என்று அழைக்கின்றனர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் சித்தி சமூகத்தினரின் முன்னோர்கள் மொசாம்பிக்கைச் சேர்ந்தவர்கள் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நமது மக்கள், அவர்களது சிந்தனைகள் மற்றும் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றுக்கு இடையே பழமையான இணைப்புகள் இருப்பதற்கான வாழும் சான்றுகளாக இந்த மக்கள் திகழ்கின்றனர்.
அதிபர் அவர்களே, நமது இரு நாடுகளும் காலனி ஆதிக்கத்தின் கீழ் அவதிப்பட்டன. மொசாம்பிக்கைப் பொருத்தவரையிலும் இந்த போராட்டம் மிக நீண்டதாகும். காலனி ஆதிக்கத்திலிருந்து மொசாம்பிக் விடுதலை பெற வேண்டும் என்பதை ஆதரித்த நாடுகளில் ஒன்றாக சுதந்திர இந்தியாவும் இருந்தது. கடந்த 1975ம் ஆண்டு மொசாம்பிக் சுதந்திர நாடு ஆக மாறியதில் நாங்கள் பெருமிதமடைகிறோம்.
இன்றயை நாம் மொசாம்பிக் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதை நாங்கள் போற்றிப் பாராட்டுகிறோம். அதிபர் அவர்களே, வளரும் நாடுகளாக நாம் இருவரும் ஒரே மாதிரியான சவால்களை சந்தித்து வருகிறோம். நமது வளர்ச்சி மற்றும் பொருளாதார கூட்டணி நமது உறவின் அத்தியாவசியமாக உள்ளது.
சமீப ஆண்டுகளில் நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. அதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதற்காக தனது அனுபவங்கள், தொழில்நுட்பம், திறன் மற்றும் சலுகையுடன் கூடிய ஆகியவற்றை தங்களது முன்னுரிமைகளுக்கு ஏற்ப பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராகவும் உறுதியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு மொசாம்பிக் சுதந்திரம் பெற்றதன் மற்றும் நமது தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 40வது ஆண்டாக அமைந்திருந்தது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு நமது நாடுகளுக்கு இடையே கலந்துரையாடல்களும் கடந்த ஆண்டில் நடைபெற்றது. 2015 ஆகஸ்ட் மாதத்தில் தாங்கள் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது இந்திய-ஆப்பிரிக்க அமைப்பின் உச்சி மாநாட்டில் உங்களது பிரதமர் கலந்து கொண்டு கவுரவித்தார். அதிபர் அவர்களே, கடந்த 34 ஆண்டுகளில் மொசாம்பிக் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள முதல் இந்தியப் பிரதமர் நான் என்பது எனக்குத் தெரியும். இத்தனை பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கக்கூடாது. எதிர்காலத்தில் இப்படி இருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த வார்த்தைகளுடன், அதிபர் அவர்களே, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, நாம் இணைந்து பிரார்த்திப்போம் :
மாண்புமிகு அதிபர் ஃபிலிப் ஜசிந்தோ நியூசி அவர்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு பெற வேண்டும்
மொசாம்பிக் நாட்டு மக்கள் நீடித்த அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் பெறவும்
இந்தியா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு இடையில் நட்பு மற்றும் ஒத்துழைப்பு நிலவ வேண்டும்.