Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து உயர்நிலை கூட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சரோடு பிரதமர் ஆய்வு.

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து உயர்நிலை கூட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சரோடு பிரதமர் ஆய்வு.


தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து இன்று நடைபெற்ற உயர்நிலை சீராய்வுக் கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையேற்றார்.

தெலுங்கானா முதலமைச்சர் திரு கே.சந்திரசேகர ராவ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அரசு மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களோடும் அவர்கள் மாநிலத்தின் குறிப்பான தேவைகள் குறித்து ஆராய்வதற்காகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் தனித்தனியே சந்திப்புகளை நடத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் பாதுகாப்பு நிதியிலிருந்து 712.62 கோடி, வழங்கப்பட்டுள்ளது. மாநில தேசிய பேரிடர் பாதுகாப்பு நிதிக்கு 2015-16ம் ஆண்டுக்காக அளிக்கப்பட்ட 205.5 கோடி அல்லாமல் இத்தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான முதல் தவணையாக மாநில பேரிடர் பாதுகாப்பு நிதிக்கு 108 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள ஏரி குளங்களை தூர் வாரி பலப்படுத்தும் திட்டமான மிஷன் காக்காத்தியா திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, முதலமைச்சர் பிரதமருக்கு எடுத்துரைத்தார். ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் மாநில அரசின் திட்டமான மிஷன் பாகீரதா திட்டம் குறித்து முதலமைச்சர் பிரதமருக்கு எடுத்துரைத்தார். உலகின் இதர பகுதிகளில் நீர் பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து கையாளப்படும் முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, ஊரகப் பகுதிகளில் நீர்பாசனம் செய்ய பயன்படுத்துதல் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீர்நிலைகளை கண்டறிந்து பொதுமக்களின் பங்களிப்போடு, தூர் வாரி பயன்படுத்துவது குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.

சிறு பாசனத் திட்டம் மூலம் மாநிலத்தில் இது வரை 40,000 ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் “பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்” திட்டம் விவசாயிகளுக்கு பெரும் வகையில் பயனளிப்பதாக உள்ளது என்று தெலுங்கானா முதல்வர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததற்கும் பிரதமருக்கு தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்தார். அந்த நிதியை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாநில அரசின் மரம் நடும் திட்டமான ஹரிதா ஹராம் திட்டம் குறித்த விவரங்களையும் தெலுங்கானா முதலமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் “பயிர் காலனிகளாக” பிரிக்க வேண்டும். அவ்வாறு செய்து, அதற்கான திட்டங்களை வரைய வேண்டும் என்று முதலமைச்சர் ஆலோசனை தெரிவித்தார். இந்த ஆலோசனையை வரவேற்ற பிரதமர், தற்போது வழங்கப்பட்டு வரும் மண் வள அட்டைகள் அந்த நோக்கத்திலேயே செயல்படுத்தப்படுகின்றன என்றார். மாநில அரசு இது குறித்து ஒரு வரைவு திட்டம் கொண்டு வரலாம் என்றார் பிரதமர்.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவோடு கூட்டம் நிறைவுற்றது.