Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2025-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு

2025-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு


இந்திய வெளியுறவுப் பணியின் 2025-ம் ஆண்டுப் பிரிவுப் பயிற்சி அதிகாரிகள், இன்று ‘சேவா தீர்த்தில்’ பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர். நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 பயிற்சி அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, தாங்கள் பணிபுரியும் நாடுகளில் அடிமட்ட அளவில் வலிமையான தொடர்புகளை உருவாக்குமாறும், அங்குள்ள உள்ளூர் சமூகங்களுடன் இந்தியாவின் பிணைப்பை ஆழப்படுத்துமாறும் இளம் தூதரக அதிகாரிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்தியத் தூதரகங்கள், அரசுகள் மற்றும் நிறுவனங்களுடன் மட்டுமின்றி, சமூக மட்டத்தில் உள்ள மக்களுடனும் அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாரம்பரியத் தூதரக வட்டங்களைத் தாண்டித் தங்கள் தொடர்புகளை விரிவுபடுத்தவும், மக்களுடனான ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் பயிற்சி பெறும் அதிகாரிகளை அவர் ஊக்குவித்தார். இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்த, இந்தியாவின் நாகரிகச் சிறப்புகளைத் தொழில்நுட்பம், புத்தாக்கம், திறமையான தகவல் தொடர்பு ஆகியவற்றுடன் இணைத்துச் செயல்படுமாறு அவர் அவர்களுக்கு யோசனை தெரிவித்தார்.

இந்தியத் தூதரகங்களின் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ஒரு நிறுவனம் அல்லது அமைப்பை மக்கள் அணுகுவதற்கான முதல் நுழைவாயிலாக இணையதளம் பெரும்பாலும் அமைகிறது என்று குறிப்பிட்ட அவர், தூதரகச் சேவைகள், பிற சேவைகளை  தடையற்றதாகவும், விரைவாகப் பதிலளிக்கக்கூடியதாகவும், குடிமக்களை மையப்படுத்தியதாகவும் வழங்குவதற்குத் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் நாகரிக, கலாச்சார, புவியியல் ரீதியான சிறப்பம்சங்களை வெளிப்படுத்துவதன் மூலம், நாட்டை உலக அளவில் மிகவும் ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குப் பாடுபடுமாறு பயிற்சி பெறும் அதிகாரிகளைப் பிரதமர் வலியுறுத்தினார். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடையே இந்தியா குறித்த ஆர்வத்தை அதிகரிக்க ‘இந்தியா பற்றி அறிந்து கொள்வோம்’  விநாடி-வினா போட்டியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டதுடன், இத்தகைய முயற்சிகளை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்ற செயற்கை நுண்ணறிவு  மற்றும் கேமிங் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் ஊக்குவித்தார்.

பயிற்சி மற்றும் ‘பாரத் தர்ஷன்’ தருணங்களின்போது தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பயிற்சி அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். உலக நாடுகளுடனான இந்தியாவின் நாகரிக, கலாச்சாரத் தொடர்புகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் பேசினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302858&reg=3&lang=1

****

SS/BR/SH