Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்


பிரதமர் திரு நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினான்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பின் பேரில் இன்று மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

‘நமது எதிர்காலத்தை ஒருங்கிணைந்து வழிநடத்துதல்’ என்ற தலைப்பின் கீழ் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கும் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் அதிபர் திரு மார்கோஸூக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஆசியான் உடனான தமது விரிவான உத்திசார் நட்புறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆசியானும் – இந்தியாவும் பிராந்திய அளவிலும், அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் உறுதிபூண்டார்.

தடையற்ற, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை இந்தியா விரும்புவதாக கூறிய அவர், இந்தப் பிராந்தியத்தின் எதிர்காலம் போட்டித்தன்மையுடன் கூடியதாக அல்லாமல், ஒத்துழைப்பை சார்ந்தது என்று குறிப்பிட்டார்.

ஆசியானின் ஒற்றுமைக்கு இந்தியா உறுதியுடன் இருப்பதாக கூறிய அவர், ஆசியான் சமூக தொலைநோக்குப் பார்வை 2045, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ஆகியவை இந்தியா, ஆசியான் நாடுகளின் மக்களின் பொதுவான விருப்பங்களை நிறைவேற்ற உதவிடும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையேயான பொதுவான அம்சங்கள், உலகளாவிய கண்ணோட்டம், ஆழமான கலாச்சார உறவுகள் ஆகியவை இந்த நட்புறவுக்கு புதிய பரிமாணத்தை வழங்கியுயுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் கிழக்கை நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, இந்தியா – ஆசியான் நட்புறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலகளாவிய எதிர்காலத்திற்கு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவும் – ஆசியாவும் தொழில்நுட்பங்களை நுகர்வோராக மட்டுமில்லாமல், அவற்றை இணைந்து உருவாக்கி, மக்களின் திறன்களை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2027-ம் ஆண்டு இந்தியா – ஆசியான் உறவுகளில் சிறப்பான ஆண்டாக அமையும் என்றும், இருதரப்பினரும் தங்களுடைய 35 ஆண்டுகால உறவையும் 5 ஆண்டுகால விரிவான உத்திசார் நட்பையும் கொண்டாடுவார்கள் என்று பிரதமர் கூறினார்.

இந்தியா – ஆசியான் இடையேயான உறவுகளை வலுப்படுத்த பிரதமர் பல்வேறு முன்மொழிவுகளை பரிந்துரைத்தார்.

போக்குவரத்து, அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோர காவல்படை ஒத்துழைப்பு, கடல்சார் விழிப்புணர்வு, மாலுமிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த நீண்டகால ஆசியான் – இந்தியா கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம்.

இப்பிராந்தியத்தில் திறன் மேம்பாட்டிற்காக சைபர் தடய அறிவியல், கூட்டுப் பயிற்சித் திட்டம்.

ஆசியான் – இந்தியா அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றங்கள்.

ஆசியான் – இந்தியா விண்வெளி ஹேக்கத்தான்.

சுரங்கம், முக்கிய கனிமங்களில் ஆசியான் – இந்தியா இடையே ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் பரிந்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337360&reg&reg=48&lang=2

***

VJ/PD/IR/LDN/GS