பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2026 பிப்ரவரி 01) பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் மேற்கோள்கிறார். பிற்பகல் சுமார் 3:45 மணியளவில், பிரதமர் ஆதம்பூர் விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கு அவர் விமான நிலையத்திற்கு ‘ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம், ஆதம்பூர்’ என பெயர் மாற்றம் செய்யும் அறிவிப்பை வெளியிடவுள்ளார். பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
புனித குரு ரவிதாஸ் ஜியின் 649-வது பிறந்தநாளின் புனிதமான தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது. இந்தியாவின் சமூக நெறிமுறைகளை தொடர்ந்து ஊக்குவித்து, சமத்துவம், இரக்கம், மனித கண்ணியம் ஆகியவை தொடர்பாக போதித்த மதிப்பிற்குரிய துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான அவரை கௌரவிக்கும் விதமாக இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
பஞ்சாபில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், ஹல்வாரா விமான நிலையத்தில் பிரதமரால் திறந்து வைக்கப்படும் முனையக் கட்டடம், லூதியானா, அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும். இது தொழில்துறை, விவசாய செயல்பாடுகளுக்கு ஒரு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். லூதியானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹல்வாரா, உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியாகும்.
லூதியானாவில் உள்ள முந்தைய விமான நிலையம் சிறிய அளவிலான விமானங்களுக்கு ஏற்ற ஒப்பீட்டளவில் சிறிய ஓடுபாதையைக் கொண்டிருந்தது. போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் பெரிய விமானங்கள் வந்து செல்ல ஏதுவாகவும், ஹல்வாராவில் ஒரு புதிய சிவில் விமான தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏ320 வகை விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட நீண்ட ஓடுபாதையைக் கொண்டுள்ளது.
நிலையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொறுப்பான வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையம், எல்இடி விளக்குகள், உயர்தர மேல்தளங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல பசுமை திறன் கொண்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் கட்டடக்கலை வடிவமைப்பு பஞ்சாபின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. பயணிகளுக்கு தனித்துவமான பயண அனுபவத்தை இது வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221124®=3&lang=1
***
TV/PLM/RK