Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மதுரையில் ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

மதுரையில் ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்


தமிழ்நாட்டின் மதுரையில் இன்று 4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புனித நகரமான மதுரையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இது தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயம் என்று கூறினார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மாற்றி அமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். மாநிலத்தில் உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது மக்களை மேம்படுத்துவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மேம்பாடுகள் விவசாயிகள், சந்தைகளை அடைய சிறந்த சாலைகள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயணம், வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து ஆகியவற்றை வழங்கும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசு தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது எனவும் 2014 முதல் 4000 கிலோமீட்டருக்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். கடலோர சுற்றுலாவையும் வர்த்தகத்தையும் வலுப்படுத்த 2,100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ள, மரக்காணம்-புதுச்சேரி பிரிவின் நான்கு வழிச்சாலை, பரமக்குடி-ராமநாதபுரம் பாதையின் நான்கு வழிச்சாலை ஆகிய இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை அவர் குறிப்பிட்டார். 1,800 கோடிக்கு மேல் முதலீட்டுடனான திட்டம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கான போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்கும் எனவும், இது யாத்ரீகர்களுக்கு பயணத்தை எளிதாக்கும் என்றும் விவசாய, கடல் பொருட்களுக்கான சிறந்த போக்குவரத்தை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில், ரயில்வே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்றும், நவீன, திறன் வாய்ந்த, மக்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பாக உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். தற்போதைய அரசு பதவியேற்றதிலிருந்து ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த மாற்றம் நன்கு தெரிகிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். 2009 முதல் 2014 வரை தமிழ்நாட்டுக்கு சராசரி ஆண்டு ஒதுக்கீடு 880 கோடியாக இருந்த நிலையில், 2026–27-ம் ஆண்டில் அது 7,600 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் 1,300 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் 97% மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவை பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஒரு முக்கிய மைல்கல்லை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலமான புதிய பாம்பன் பாலத்தை கடந்த ஆண்டு திறந்து வைத்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்டார்.

தற்போது 9 வந்தே பாரத் ரயில்களும் 9 அம்ரித் பாரத் ரயில்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும், அவற்றின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியா வில் தயாரிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வை குறித்து அவர் பெருமை தெரிவித்தார். இது தற்சார்பை அதிகரித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 77 ரயில் நிலையங்கள் சிறந்த வசதி, சிறந்த அணுகல், உள்ளூர் அடையாளம் ஆகியவற்றுடன் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன எனவும் இன்று எட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட நிலையங்கள் திறக்கப்படுகின்றன என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் நான்காவது பாதையின் அர்ப்பணிப்பு  தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய இடங்களில் ஆகாஷ்வாணியின் புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த வானொலி நிலையங்களை மக்களின் சேவைக்கு அவர் அர்ப்பணித்தார்.

முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கான உள்கட்டமைப்பு நிதி கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். 2026 மத்திய பட்ஜெட் மாநிலத்தின் மீது வலுவான கவனம் செலுத்துவதை அவர் குறிப்பிட்டார். பிராந்திய பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள பெங்களூரு-சென்னை, சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான திட்டங்களை அவர் விரிவாக எடுத்துக் கூறினார். மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட அரிய புவி வழித்தடங்களில் தமிழ்நாட்டை பட்ஜெட் நிலைநிறுத்துகிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு ஒரு வளமான வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உலகளாவிய பாரம்பரிய இடங்களாக மேம்படுத்தப்படும் என்று கூறினார். பழவேற்காடு ஏரி தொடர்பான பணிகள், பொதிகை மலையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா முயற்சிகள் போன்றவை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். உற்பத்தியை அதிகரிக்க நாடு தழுவிய அளவில் சுமார் இருநூறு தொழில்துறை வழித்தடத் தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டு ஆதரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு பல தொழில்களுக்கு தாயகமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டம் உள்ளூர் இளைஞர்களுக்கு கணிசமாகப் பயனளிக்கும் என்று கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியரும் வளர்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். உள்ளடக்கிய வளர்ச்சி, மாநிலத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் மத்திய அரசின் முழு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு என்பதை கூட்டு இலக்கு என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2234220)

TV/PLM/RK